இஸ்லாமிய தொழுகை கூடத்தை நோக்கி வேகமாக வந்த கார் - சுட்டு வீழ்த்திய பொலிசார்
பிரான்ஸ் நாட்டில் உள்ள இஸ்லாமிய தொழுகை கூடத்தை பாதுகாத்து வந்த பொலிசார் நோக்கி மர்ம கார் ஒன்று விரைந்து வந்தபோது, அதன் ஓட்டுனரை துப்பாக்கியால் சுட்டு பொலிசார் மடக்கியுள்ளனர்.
லியோன் நகரில் உள்ள Valence என்ற பகுதியில் இஸ்லாமிய தொழுகை கூடம் ஒன்று அமைந்துள்ளது.
புத்தாண்டு முன்னிட்டு பிரான்ஸில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எச்சரிக்கையால் இந்த பகுதியில் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகல், 4 பேர் அடங்கிய பொலிசார் மசூதிக்கு வெளியே நின்றுள்ளபோது, அவர்களை நோக்கி கார் ஒன்று வந்து அதில் இருந்த ஓட்டுனர் எச்சரித்துவிட்டு சென்றுள்ளார்.
சிறிது நேர இடைவெளியில், மீண்டும் அதே கார் பொலிசாரை நோக்கி வேகமாக வந்து பொலிசார் மீது பாய்ந்துள்ளது. இதில் ஒரு பொலிசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
நிலைமையை உணர்ந்த பொலிசார் அதிவிரைவாக செயல்பட்டு காரின் ஓட்டுனரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் ஓட்டுனரின் கை மற்றும் காலில் இரண்டு குண்டு காயம் ஏற்பட்டுள்ளது. விரைந்து வந்த பொலிசார் அந்த நபரை கைது செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய அந்நகர மேயரான Nicolas Daragon, ’27 வயதான அந்த ஓட்டுனர் எதற்காக பொலிசாரை தாக்க வந்தார் என இதுவரை தெரியவரவில்லை.
அவர் மசூதியை தாக்க வந்தாரா அல்லது பாதுகாப்பு பணியில் இருந்த பொலிசாரை தாக்க வந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
எனினும், இந்த சம்பவத்தில் பெரும் ஆபத்து ஏற்படாதவாறு துணிச்சலாக செயல்பட்ட பொலிசாரை பாராட்டுவதாக மேயர் தெரிவித்துள்ளார்.
Post a Comment