"சினிமா ஆசை" உலகின் நம்பர் ஒன் போதைப்பொருள் கடத்தல் மன்னன் பிடிபட்டான்
மெக்சிகோ நாட்டில் உள்ள அல்ட்டிபிலானோ சிறையில் இருந்து தப்பியோடிய சர்வதேச போதை கடத்தல் மன்னனான ‘எல் சாப்போ’ ஜோகுவின் குஸ்மேன் மீண்டும் பிடிபட்ட சம்பவத்தின் பின்னணியில் சில சுவாரஸ்யமான தகவல்கள் மறைந்துள்ளன.
உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலை வெளியிடும் ‘போர்ப்ஸ்’ பத்திரிகையின் தரவரிசையில் ஒரு காலத்தில் இடம் பெற்றிருந்த குஸ்மேனுக்கு ‘எல் சாப்போ’ என்ற பட்டப்பெயரும் உண்டு. அமெரிக்கா முழுவதும் நடைபெறும் கொக்கைன், பிரவுன் ஷுகர், கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட அனைத்து வகையான போதைப்பொருள் கடத்தலையும், வியாபாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த குஸ்மேன், இந்த தொழிலின் முடிசூடா சக்கரவர்த்தியாக முன்னர் வலம் வந்தான்.
மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கோஷ்டிகளுக்குள் ஏற்பட்ட தொழில் முறை மோதல்களிலும், இதுதொடர்பான கொலைகளிலும் இவனுக்கு தொடர்பு இருந்ததால் 1993-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குஸ்மேன், கடந்த 2001-ம் ஆண்டு சிறையில் இருந்து தப்பி விட்டான். சிறை கைதிகளுக்கு சலவை செய்த துணிகளை கொண்டுவரும் ஒரு வண்டிக்குள் மறைந்து அவன் தப்பித்து விட்டதாக அப்போது செய்திகள் வெளியாகின.
பின்னர், போலீசாரிடம் பிடிபட்டு மீண்டும் மெக்சிகோ மத்திய சிறைக்கு திரும்பிய ‘எல் சாப்போ’ குஸ்மேன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13-ம் தேதி இரவு மீண்டும் தப்பியோடி விட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
சிறையில் உள்ள கண்காணிப்பு கேமரா வீடியோ பதிவுகளில் கடைசியாக அவனது நடமாட்டம் பதிவாகி இருந்த பகுதியை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு தரைக்கு அடியில் சுரங்கம் தோண்டப்பட்டிருப்பது தெரிய வந்தது. ஒருவர் மட்டும் நுழைந்து செல்லும் அளவுக்கு ரகசியமாக தோண்டப்பட்டிருந்த அந்த சுரங்கத்தின் வழியாக குஸ்மேன் தப்பியிருக்கலாம் என்று கருதிய போலீசார் அதன் உள்ளே நுழைந்து சென்றபோது, சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் வரை நீண்டிருந்த அந்த சுரங்கத்தின் மறுமுனை சிறைக்கு அருகாமையில் இருக்கும் ஒரு பாழடைந்த கட்டிடத்தை ஒட்டியுள்ள வெட்டவெளியில் முடிவடைந்தது.
குஸ்மேனின் கூட்டாளிகள் இங்கிருந்தபடி, அந்த சுரங்கத்தை தோண்ட ஆரம்பித்திருப்பார்கள். இதுபற்றிய ரகசிய தகவல் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கலாம். சிறை காவலர்கள் அசந்திருந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு இந்த சுரங்கத்தின் வழியாக அவன் தப்பிச் சென்றிருக்கலாம் என கருதிய போலீசார், எப்படியும் குஸ்மேனை வளைத்துப் பிடித்து, மீண்டும் சிறைக்குள் அடைக்கும் நோக்கத்தில் மெக்சிகோ மற்றும் அமெரிக்க போலீசார் அவனை தீவிரமாக தேடி வந்தனர். அவனது தலைக்கு அமெரிக்கா 33 கோடி ரூபாயை பரிசுத்தொகை அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், சினாலோவா மாகாணத்தில் லாஸ்மொசிஸ் நகரில் அவன் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி ராணுவம், கடற்படை மற்றும் போலீசார் கொண்ட கூட்டுப் படையினர் அங்கு சென்று அவனது இருப்பிடத்தை சுற்றி வளைத்து தாக்கினர். திரைப்படங்களில் வரும் இறுதிக்கட்ட காட்சிபோல பல மணிநேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு எல்சாப்போ குஸ்மன் பிடிபட்டான். அதைதொடர்ந்து அவனை கைது செய்த போலீசார், மீண்டும் சிறையில் அடைத்தனர். இந்த துப்பாக்கி சண்டையின் போது 5 பேர் பலியாகினர்.
இதற்கிடையில், எல் சாப்போவின் ரகசிய மறைவிடம் பற்றிய தகவல்களை போலீசார் எப்படி மோப்பம் பிடித்தனர்? என்பது தொடர்பாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. சுமார் 6500 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரனான எல் சாப்போ தனது ‘தாதா’ வாழ்க்கையையும், பலமுறை சிறையில் இருந்து தப்பியோடிய சாகச சாதனைகளையும் மையமாக வைத்து தனது வாழ்க்கை வரலாற்றை ‘காட் ஃபாதர்’ பாணியில் பிரமாண்டமான திரைப்படமாக தயாரிக்க விரும்பினான்.
இதற்காக, அமெரிக்க டி.வி. தொடர்களில் தாராளமாக கவர்ச்சிகாட்டி நடித்திருந்த டெல் கேஸ்ட்டிலோ என்ற நடிகையை முதலில் வலையில் வீழ்த்தினான். அவனது ரகசிய மறைவிடத்தில் டெல் கேட்டிலோவுடன் தனிமையில் பலசுற்று ‘டிஸ்க்கஷன்’ நடைபெற்றது.
அவர்கள் இருவருக்கும் இடையில் ஒருசுற்று பேச்சுவார்த்தை முடிந்திருந்த நிலையில், ஒரு டி.வி. சீரியலில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவியாக நடித்திருந்த டெல் கேஸ்ட்டிலோ-வின் நடமாட்டத்தை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எல் சாப்போவின் மறைவிடத்தை உறுதி செய்துகொண்ட பின்னர் ஹெலிகாப்டர்களுடன் சென்ற போலீஸ் படையினர் அவனை சுற்றிவளைத்தனர். அவனது பாதுகாவலர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காலில் குண்டுபாய்ந்த நிலையில் அவன் தப்பியோடி விட்டான்.
இதையடுத்து, எல் சாப்போவிடம் இருந்து மிகப்பெரிய தொகையை கறந்து விடலாம் என்ற கனவுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் சீன் பென் என்பவரை அவனது புதிய மறைவிடத்துக்கு அழைத்துவந்த டெல் கேஸ்ட்டிலோ, அவரை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அவனது வாழ்க்கை வரலாற்றை மையமாகவைத்து பிரமாண்டமான திரைப்படத்தை தயாரிப்பது தொடர்பாக எல் சாப்போவுடன் முதல்சுற்று ஆலோசனை நடத்திய சீன் பென், இரண்டாவதுமுறை சந்திப்பதற்குள் கடந்த வெள்ளிக்கிழமை கூட்டுப்படையினர் அவனை கைதுசெய்தனர். இதற்கு முன்னர் அவன் தப்பியோடிய அதே அல்ட்டிபிலானோ மத்திய சிறையில் தற்போது அடைத்து வைத்துள்ளனர்.
அவனை மெக்சிகோவில் இருந்து நாடுகடத்தும் திட்டத்தில் அந்நாட்டு அரசு உள்ளநிலையில் எல் சாப்போவை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுள்ளது. அவனை காவலில் எடுத்து விசாரிக்க அமெரிக்காவில் உள்ள பல மாகாண அரசுகள் போட்டிப்போட்டு வருகின்றன.
Post a Comment