"சிரியாவில் நடமாடும் எலும்புக்கூடுகள்"
சிரியாவில் அரச முற்றுகையில் இருக்கும் மதயா நகரை உணவு பொருட்கள் ஏற்றிய உதவி வாகனங்கள் விரையில் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முற்றுகையில் இருக்கும் இத்லிப் மாகாணத்தின் இரு கிராமங்களுக்கான உதவி வாகனங்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றன.
இதில் மதயா நகரில் பட்டினியால் பலரும் இறந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த உதவிப் பொருட்கள் நகரை கூடிய விரைவில் அடையும் என்று அகதிகளுக்கான ஐ.நா. நிலையத்தின் பேச்சாளர் மெலிஸ்ஸா பிளெமிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த உதவி வாகனங்கள் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரை கடந்த ஞாயிற்றுக்கிழமை பின்னேரமாகும்போது அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் கடைசி நேர தடங்கல்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
லெபனான் எல்லையை ஒட்டியிருக்கும் மதயா நகரில் சுமார் 40,000 பேர் எந்த உதவியும் இன்றி சிக்கித்தவிக்கின்றனர். இவர்கள் உயிர்வாழ பூனை போன்ற செல்லப்பிராணிகள் மற்றும் புற்களை உண்டு வருகின்றனர்.
கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நகரை அரச படை மற்றும் அதற்கு ஆதரவான ஹிஸ்புல்லா அமைப்பு சுற்றிவளைத்து முற்றுகையில் வைத்துள்ளது. நகரை சூழ கம்பி வேலிகள் அமைத்தும் கண்ணி வெடிகள் மற்றும் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகள் நிலைநிறுத்தப்பட்டும் மக்கள் வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது.
இந்த நகரின் நிலைமை ‘மிக பயங்கரம்’ என எல்லைகளற்ற மருத்துவர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ப்ரிஸ் டேலா விக்னே விபரித்துள்ளார். மதயா நகரில் இருக்கும் மருத்துவர்களுடன் தொடர்பில் உள்ள விக்னே, நகரில் 250க்கும் அதிகமானவர்கள் மோசமான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். இவர்களில் 10 பேர் அவசர மருத்துவ உதவிக்காக வெளியேற்றப்படாவிட்டால் உயிரிழக்கும் அபாயத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் அனுப்பப்பட்டிருக்கும் உதவிப் பொருட்கள் திங்கட்கிழமைக்குள் (நேற்று) நகரை எட்டும் என்று உலக உணவுத் திட்டம் நம்பிக்கை தெரிவித்தது.
முற்றுகை பகுதிகளுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கான உடன்பாடொன்று கடந்த சனிக்கிழமை எட்டப்பட்டது. இதில் சிரிய மோதலில் பங்கேற்றிருக்கும் தரப்புகளின் உயர்மட்ட அரசியல் நிலைகள் மற்றும் களத்தில் இருக்கும் தனிப்பட்ட போராட்டக் குழுக்கள் உள்ளடங்கியதாகவே இந்த உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.
இவ்வாறான உடன்படிக்கை ஒன்று அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் இத்லிப் மாகாணத்தின் கெப்ரயா மற்றும் போஹ் கிராமங்களிலும் எட்டப்பட்டது. இந்த கிராமங்கள் அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களின் முற்றுகையில் உள்ளன.
தொடரும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் பல பகுதிகளும் இவ்வாறு முற்றுகையில் சிக்கியிருந்த போதும் மதயா நகரத்தின் நிலைமை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. போஷாக்கின்றி இருக்கும் நகர மக்களின் புகைப்படங்கள் வெளியாகி கவலையை ஏற்படுத்தியது.
மதயா நகரில் டிசம்பர் மாதம் தொடக்கம் சுமார் 23 பேர் பட்டினியால் இறந்துள்ளனர். இங்கு எஞ்சி இருக்கும் சிறிய அளவு உணவுப் பொருட்கள் பாரிய விலை அதிகரிப்புடன் விற்கப்படுகின்றன. அருகில் இருக்கும் தலைநகர் டமஸ்கஸை விடவும் இந்த நகரில் ஒரு லீட்டர் பாலின் விலை 283 மடங்கு அதிகம் என்று சி.என்.என். செய்தி குறிப்பிட்டுள்ளது.
“எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இங்கு என்னால் உணவு எதனையும் வாங்க முடியாத சூழல் உள்ளது” என்று மதயா நகர வாசியான உம்மு சுல்தான் சர்வதேச மன்னிப்புச் சபையிடம் குறிப்பிட்டிருந்தார். “அரிசி அல்லது சீனி கிலோ ஒன்றின் விலை சுமார் 100,000 சிரிய பெளன்ட்களாகும் (64,000 ரூபாய்). இவைகளை யாரால் வாங்க முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த வாரத்திற்குள் மாத்திரம் நகரில் பசியால் ஐந்து பேர் இறந்திருப்பதாகவும் அதில் 9 வயது சிறுவன் ஒருவனும் அடங்குவதாகவும் எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. எனினும் நகரில் பட்டினியால் மரணித்தோரது மொத்த எண்ணிக்கை குறிப்பிடப்படுவதை விடவும் அதிகமாக இருக்கும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மதயா மற்றும் அண்டைய நகரான சபதானி 2011இல் ஜனாதிபதி பஷர் அல் அஸாத்திற்கு எதிராக மக்கள் எழுச்சி போராட்டத்தில் தீவிரமாக இயங்கிய பகுதியாகும். இவ்வாறு அசாத் அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கிய 27 வயது ஹமூதி என்ற இளைஞன் குறிப்பிடும்போது, உணவுக்காக பெரும்பாலான மக்கள் தண்டனைகளையும் பொருட்படுத்தாமல் சரணடைய காத்திருப்பதாக தெரிவித்தார்.
“புரட்சியின்போது நான் ஜனநாயகம், சுதந்திரம் பற்றி கனவு கண்டேன். இன்று கனவுகள் அனைத்தும் உணவாக இருக்கிறது. எனக்கு சாப்பிட வேண்டும். பசியால் எனக்கு சாக முடியாது” என்று ஸ்கைப் ஊடாக சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது ஹமூதி குறிப்பிட்டார்.
எதிர்த்தரப்பை சரணடையச் செய்யும் உத்தியாகவே சிரியாவில் அரச தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு படையினர் பல பகுதிகளையும் முற்றுகையில் வைத்துள்ளனர். இவ்வாறு படையினர் யுத்த வலயங்களில் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளை அனைத்து பக்கங்களா லும் சுற்றிவளைத்து உள்ளே உதவிகள் செல்லாத வகையில் முற்றுகையில் ஈடுபடுகின்றனர்.
சிரியாவில் தற்போது குறைந்தது 15 பகுதிகள் இவ்வாறு முற்றுகை நிலையில் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த பகுதிகளில் மொத்தம் 400,000 வரையிலான அப்பாவி மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். இவர்கள் உணவு மற்றும் மருந்துகள் எதுவும் இன்றி இருப்பதாக ஐ.நா. மன்றம் குறிப்பிடுகிறது.
இந்த முற்றுகையில் இருந்து தப்ப முயலும் சிவிலியன்கள் அரச படையின் ஸ்னைப்பர் அல்லது கண்ணி வெடி தாக்குதலுக்கு உள்ளாவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
“மதயா நகரில் நடமாடும் எலும்புக்கூடுகளை காணமுடியும்” என்று மதயா வாசியான முஹமது என்று மாத்திரம் தம்மை அடையாளப்படுத்திய ஒருவர் மன்னிப்புச் சபைக்கு விபரித்துள்ளார்.
“கடைசியாக நான் முழுமையாக சாப்பிட்டு ஒன்றரை மாதங்களாகின்றன” என்று லவாய் என்ற மற்றொரு குடியிருப்பாளர் குறிப்பிட்டார். “என்னிடம் தற்போது தண்ணீரும், இலைகளுமே இருக்கின்றன.
குளிர்காலம் வருவதால் மரங்களில் இலைகளும் கூட உதிர்ந்துவிடுகின்றன. எனவே, நாம் எத்தனை காலத்திற்கு உயிர்வாழ முடியும் என்பது எமக்கே உறுதியில்லை” என்றும் அவர் கூறினார்.
Post a Comment