மெல்லக் கிளம்பும் இனவாதம்
-ரஹுமத் மன்சூர்-
பல்லினங்கள் வாழுகின்ற நமது நாட்டில், சிறுபான்மை மக்களை அடக்கி ஆழ்வதற்கு தந்திரமாக முயன்ற சக்திகளின் செயற்பாடுகள்தான், 06 தசாப்த காலம் அசாதாரண சூழல் நிலவுவதற்கு வழிவகுத்தது. இன்று யுத்தம் நிறைவடைந்து, சர்வாதிகார ஆட்சி அகற்றப்பட்டு புதிய சூழல் உருவாகியுள்ளது. ஆனபோதும் இனவாதக் குழுக்களின் அட்டகாசங்கள் இன்னமும் ஓய்ந்தபாடில்லை.
சிங்கள சம்மேளனய, பொதுபலசேனா மற்றும் சிங்கள ராவய என்று, காலத்துக்குக் காலம், சிங்கள பௌத்த வாதத்தை முன்னிலைப்படுத்தி பௌத்த தேரர்களும், வேறு சி லரும்அமைப்புக்களை ஆரம்பிக்கின்றனர். குறிப்பிட்ட ஒரு மக்கள் கூட்டத்தை இலக்கு வைத்து, வார்த்தைகளை தாண்டி வன்முறைகளை பிரயோகிக்கின்றனர். இவையெல்லாம் இந்த நாட்டில் புதிய விடயமல்ல. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இவ்வாறான இனவாத அமைப்புக்கள் உருவாகி இன்றுவரையில் சுதந்திரமாக செயற்படுவதானது பெரும் ஐயத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இலக்கு வைக்கப்பட்ட முஸ்லிம்கள்
யுத்தம் 2009இல் நிறைவடைந்தது. தமிழ் மக்கள் பூச்சியத்திலிருந்து தமது எதிர்காலத்தை மீளமைக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டார்கள். ஆயுதங்கள் ஓய்ந்து விட்டன. அமைதி ஏற்பட்டு விட்டது. ஐக்கிய இலங்கை கட்டியெழுப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த வேளையில், முஸ்லிம் சமுகத்தின் மீது பேரினவாதிகளின் இலக்குத் திரும்பியது.
தம்புள்ளை பள்ளிவாசல் மீதான தாக்குதலுடன், முஸ்லிம் சமுகத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்த சிங்கள பௌத்த இனவாதத் தரப்புக்கள், காலவோட்டத்தில் பகிரங்கமாக செயற்பட ஆரம்பித்தன. அப்போதைய ஆட்சியாளர்கள் கைகட்டி, வாய்பொத்தி, மௌனம் கலைக்க மறுத்திருந்த வேளையில் பொதுபலசேனா மற்றும் சிங்கள ராவய போன்ற அமைப்புக்கள் பகிரங்கமாக முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மீது தராளமாக கைவைக்க ஆரம்பித்தார்கள்.
முஸ்லிம்களையும் இரண்டாம் தரப்பினராக்கி அடக்கு முறைக்குள் வைத்திருக்க வேண்டுமென்பதனை மட்டுமே மையக்கருவாக கொண்டிருந்தவர்கள், முஸ்லிம் சமூகத்தின் உணவு, உடை தொடர்பில் கடுமையான கருத்துக்களை வெளியிட்டு முஸ்லிம்களின் மனதை நோகடித்தனர். அவை மட்டுமன்றி, வணக்க தலங்கள் மீது தினந்தோறும் இனந்தெரியாத நபர்கள் என்ற போர்வையில் தாக்குதல்களும் நடத்தப்பட்டன.
இவற்றுக்கெல்லாம் அப்பால் சென்று கடந்த ஆண்டு ஜுன் மாதம் அளுத்கமவில் பாரிய வன்முறையை தோற்றுவித்து அதன் மூலம் குளிர்காய முனைந்தார்கள். எனினும் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் சென்ற கதையாக, ஈடுசெய்யமுடியாத இரண்டு உயிர்கள் மட்டுமே இழக்கப்பட்ட நிலையில் நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
எவ்வாறாயினும் முஸ்லிம்களை மாற்றந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கும் நிலைமைகள் தொடர்ந்தன. இவ்வாறான செயற்பாடுகளின் எதிரொலியாக ஜனவரி மாதம் எட்டாம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
மாறிய நிலைமைகள்
ஆட்சி மாற்றத்தையடுத்து அனைத்து நிலைமைகளுமே மாற்றமடைந்தன. இரண்டு பிரதான தேசிய அரசியல் கட்சிகளும் சிறுபான்மை மக்களின் தேசிய அரசியல் சக்திகளை அரவணைத்துக்கொண்டு தேசிய அரசாங்கத்தை நிறுவினர். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இவ்விரண்டு தேர்தல்களிலும் இனவாதத்தை மையப்படுத்தி அரசியல் மேற்கொண்டவர்கள் மக்களால் நிராகரிகரிப்பட்டு படுதோல்வியடைந்தனர்.
இந்த நாட்டில் சீருடை அணியாத பொலிஸ்காரர்களாகவும், பௌத்தத்தையும் சிங்களத்தையும் காப்பாற்றப்போவதாக கூறிக்கொண்டு, சுயமாகவே தலைமையெடுத்தவர்கள் வாலைச்சுருட்டிக்கொண்டு ஓரமாக அமர வேண்டியவர்களாயினர். அதேநேரம் இவ்வாறானவர்களின் செயற்பாடுகளை மனச்சாட்சியுள்ள எந்வொரு பொது மகனும் விரும்பியிருக்கவுமில்லை என்பதும் வெளிப்படுத்தப்பட்டு விட்டது. இவ்வாறான நிலையில், நாட்டில் நிலையானதொரு அமைதி ஏற்பட்டுவிடுமென்ன்ற அதீத எதிர்பார்ப்புக்கள் காணப்பட்டபோதும், அவையனைத்தும் சிதைந்து விடுமோவென்ற பாரிய ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணங்கள் இல்லாமலுமில்லை.
அதிர்ச்சியளித்த குற்றச்சாட்டுக்கள்
மாற்றங்கள் நிழ்ந்த ஆட்சியில், மாறாத அமைதிமிக்க எதிர்காலம் அடித்தளமிடப்பட்டுவிடுமெனக் கருத்தியிருந்த நிலையில், ஐ.எஸ் அமைப்பு இலங்கையினுள் ஊடுருவும் சாத்தியங்கள் இருப்பதாக சில அமைப்பினர் தகவல்களை வெளியிட்டனர். அதனைத்தொடர்ந்து அவ்வமைப்புடன் தொடர்புடையவர்கள் இருக்கின்றார்களென்ற தகவல்கள் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்திருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளும் வெளியிடப்பட்டன.
இவ்வாறான அமைப்புக்கள், அதனுடன் தொடர்புடையவர்கள் நாட்டிற்குள் இருப்பதானது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பது ஒருநாட்டின் இறையாண்மையை மதிக்கும், தாய்நாட்டினை நேசிக்கும் எந்வொரு பொதுமகனும் ஏற்றுக்கொள்ளவேண்டிய விடயமாகும். அதுதொடர்பான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது மிகவும் அவசியமானதானதுமாகும்.
ஆனால் அதனை மையப்படுத்தி பொது பல சேனா போன்ற பௌத்தவாதத்தை முன்னிலைப்படுத்தும் சிங்கள அமைப்புக்கள், ஒட்டு மொத்த முஸ்லிம் சமுகத்தையும் சந்தேகக்கண்கொண்டே பார்க்க வேண்டுமெனக் கோருவதும், அச்சமூகத்தின் மீது ஐயத்தை ஏற்படுத்தும் வகையிலும், முஸ்லிம்களுக்கு மன ரீதியான பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒருபுறும் இருக்கையில், மறுபக்கத்தில் நல்லாட்சியிலும் மற்றுமொரு இனவாதக்குழு ரகசியமாக துளிர்விட ஆரம்பித்திருக்கின்றது. இனவாதத்துக்கு இனி இடமில்லையென உறுதியளித்த ஆட்சியில், இதுவா நிலைமையென அகலக் கண்விரிக்க வேண்டியுள்ளது. 'சிங்க லே' அண்மைக்காலமாக, திரைக்குப்பின்னால் இருந்து செயற்பட்டு வரும் மற்றுமொரு இனவாதன அமைப்பாகும்.
ஆங்காங்கே தனது அடையாளங்களை ரகசியமாக பதிவு செய்து வந்தவர்கள், தற்போது பகிரங்கமாக வாகனங்களிலும், பொது இடங்களில் அதனைப் பொறிக்குமளவிற்கு வளர்ந்து விட்டனர். அது மட்டுமன்றி, இந்த நாட்டுக்கு 'சிங்க லே' என்ற பெயரைச் சூட்டவேண்டுமென வலியுறுத்தும் இவர்கள், முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதிகளில் ரகசியமாக நுழைந்து தமது அமைப்பின் பெயரை நிறப்பூச்சினாலும், ஸ்டிக்கர் மூலமும் பதிவு செய்துவிட்டு மாயமாகி விடுகின்றனர். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்திருந்தாலும், தற்போது ஒவ்வொரு நாளும் ஒன்றுக்கமதிகமான சம்பவங்கள் அரங்கேற ஆரம்பித்துவிட்டன.
நல்லாட்சியை சீர்குலைக்கும்
ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி, நல்லாட்சியை முன்னெடுப்பதையே பிரதான இலக்காக கொண்டு ஆட்சியில் அமர்ந்திருக்கும் தேசிய அரசாங்கம், இவ்வாறான இனவாதக்குழுக்களின் செயற்பாடுகளை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
தற்போது 'சிங்க லே' போன்ற அமைப்புக்களின் செயற்பாடுகள், சுமார் ஒருமாத காலத்துக்கும் அதிகமாக, தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. தற்போது வரையில், ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. 'சிங்க லே' என்கிற இலட்சினைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுமில்லை. ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்ட ஆட்சியென்பது - சட்டம் ஒழுங்கு உயர் தரத்தில் பேணப்படுதல், பாதுகாக்கப்படுதல் மற்றும் சுயாதீனமாக செயற்படுதல் போன்ற அம்சங்களை உள்வாங்கியதாக அமையும். ஆனால் இவ்வாறான இனவாதத்தை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்வதென்பது, சட்டமும் ஒழுங்கும் உறங்கியநிலையிலேயே இருக்கின்றதா என்ற பெருவினாவை எழுப்புகின்றது.
இன நல்லிணக்கம் கேள்விக்குறியாகும்
எனவே இனவாதத்துக்கு இடமில்லையென உறுதிமொழியளித்த நல்லாட்சி அரசாங்கம், அதனை செயல் வடிவத்திலும் வெளிப்படுத்தி, சிறுபான்மை தேசிய இனமாகிய முஸ்லிம்களின் முழுமையான நன்மதிப்பை பெறவேண்டுமென்றால், உடனடியாக மேற்கூறிய செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசரமான அவசியமாகும்.
இவ்வமைப்புகளை முற்றாக தடைசெய்வதோடு, இவற்றின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு, அவர்களின் முகத்திரையை கிழிப்பதோடு, சட்டத்தின் முன் நிறுத்தவும் வேண்டும். அதன் மூலம் இவ்வாறான அமைப்புக்கள் உருவாகுவதும், இனவாதச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதும் எதிர்காலத்தில் நிகழாமலிருப்பதை உறுதிசெய்து கொள்ளமுடியும். இதனை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளாது காலம் தாழ்த்திச் செல்லுமானால் நல்லிணக்கம் என்பது கேள்விக்குட்பட்டு விடும்.
கடந்த கால அனுபவம்
கடந்த கால ஆட்சியில் காணப்பட்ட அரசாங்கம், இத்தகையை செயற்பாடுகள் தொடர்பில் பாரபட்சமின்றியும், வெளிப்படைத்தன்மையுடனும் செயற்பாடாது அவ்வமைப்புக்களை தட்டிக்கொடுக்கும் வகையில் மௌனம் காத்து வந்தனர். அதனால் இன, மத மற்றும் மொழி, பேதமன்றி ஒட்டு மொத்த மக்களுக்கும் ஏற்பட்ட அதிருப்தியும் விரக்தியுமே ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான பிரதான காரணங்களுள் ஒன்றானது என்பதை நிராகரிக்க முடியாது. எனவே, கடந்த காலத்தில் கடினமான நிலைமைகளுக்கு முகங்கொடுத்தவர்களே தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கின்றார்கள். அவர்களும் கடந்த கால ஆட்சியாளர்களின் பாணியிலே செல்வார்களாயின் அதன் எதிர்விளைவுகளை ஆணை வழங்கியவர்கள் ஊடாகவே விரைவில் சந்திக்க வேண்டிய நிலைமை உருவாகும் என்பது நிதர்சனமாகும்.
இலங்கைவாழ் முஸ்லிம்களே இன்னும் எவ்வளவோ நடக்க இருக்கிறது.இப்போதே அழ ஆரம்பித்தால் எப்படி?
ReplyDelete