Header Ads



ரங்கண ஹேரத், குஷால் பெரேரா ஆகியோரை சூதாட்ட தரகர் அணுகியது தொடர்பாக புதிய தகவல்கள்

இலங்கை வீரர்களான ரங்கண ஹேரத், குஷால் பெரேரா ஆகியோரை சூதாட்ட தரகர் அணுகியது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

காலியில் கடந்த ஒக்டோபர் மாதம் 14ம் திகதி முதல் 17ம் திகதி வரை இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியின் போது போட்டியின் முடிவை மாற்றியமைப்பதற்காக இலங்கை கிரிக்கெட்டின் இரு ஊழியர்கள், ரங்கண ஹேரத் மற்றும் குஷால் ஜனித் பெரேரா ஆகிய வீரர்களை அணுகியுள்ளனர்.

ஆனால் சூதாட்ட தரகர்களின் வாய்ப்பை மறுத்த இரு வீரர்களும் உடனடியாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் எதிர்ப்பு பிரிவுக்கு தெரியப்படுத்தியிருந்தனர். தற்போது இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான குஷால் பெரேரா ஊக்கமருந்தை உட்கொண்டதாக தடை செய்யப்பட்டதற்கும், இதற்கும் ஏதும் தொடர்புள்ளதா என ஆராயும் படி விளையாட்டு துறை அமைச்சர் பொலிசாருக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பயிற்சியாளர் ஒருவரால் அழைத்து வரப்பட்ட நபர் ஒருவரே ரங்கண ஹேரத் மற்றும் குஷால் பெரேராவை சூதாட்டத்திற்கு அணுகியதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அனுஷ சமரநாயக்க என்ற வேகப்பந்து பயிற்சியாளரே அந்த நபரை வீரர்களின் பயிற்சிக்காக அழைத்து வந்ததாகவும், ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த அவரின் பெயர் கயான் விஷ்வஜித் எனவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கயான் விஷ்வஜித் என்ற பெயர் எந்தவொரு கிரிக்கெட் கழகத்திலும் இல்லாத நிலையில், அவர் பயிற்சிக்காக அழைத்து வரப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் கயான் விஷ்வஜித், நிறுவனங்களுக்கு நடிகைகள், மொடல் அழகிகளை விநியோகிப்பதை தொழிலாக கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், ரங்கண ஹேரத் மற்றும் குஷால் ஜனித் பெரேரா ஆகியோர் சூதாட்டத்திற்கு இணங்க மறுத்த போதும், அவர் குஷால் பெரேரா வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் தெரிகிறது.

குஷால் பெரேரா அவரின் சூதாட்ட வாய்ப்பை மறுத்ததால் தடை செய்யப்பட்ட ஊக்கமருத்தை அவருக்கு வழங்கி சிக்கலில் சிக்க வைத்திருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியாகியுள்ளது.

2

இலங்கை கிரிக்கட் அணியின் வேகபந்துவிச்சு பயிற்றுவிப்பாளர் அனுஷ சமரநாயக்க மற்றும் வலைப்பந்தாளர் கயன் விஷ்வஜித் ஆகியோரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

போட்டி நிர்ணயம் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு விசாரணைகள் முடியும் வரை இந்த பணித்தடை அமுலில் இருக்கும் என இலங்கை கிரிக்கட் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.