சுவாசமே...! சுவாசமே...!!
நலமான வாழ்வுக்கு உடற்பயிற்சி அவசியம் என்றாலும், நோய் மற்றும் ஒவ்வாமைகளுக்கு ஆளானவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளலாமா? இது பலரது கேள்வி. குறிப்பாக வீசிங் எனப்படுகிற இளைப்புப் பிரச்னை உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்ய முடியுமா என்கிற கேள்வி பிரதானமாக இருக்கிறது. உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது வீசிங் அதிகமாகுமோ என்கிற பயம்! இது குறித்து பொது நல மருத்துவர் அரவிந்திடம் விளக்கம் கேட்டோம்...
‘‘மரத்தில் கிளைகள் எப்படி விரிந்து செல்லச் செல்ல சிறியதாகின்றனவோ, அதே போல, நுரையீரலுக்குச் செல்லும் சுவாசக்குழாய்களும் பெரியதாக இருந்து பரவிச் செல்லச் செல்ல சிறிய குழாய்களாக வேர் பரப்பி இருக்கின்றன. நாம் சுவாசிக்கிற காற்று சுவாசப் பாதையில் பெரிய குழாயிலிருந்து நுரையீரலில் உள்ள சிறிய குழாய்களுக்குச் சென்ற பிறகுதான் ரத்தத்தில் கலக்கிறது. இச்சிறிய குழாய்கள் சுருங்கி விட்டால் நம் சுவாசக்காற்று நுரையீரலைச் சென்றடையாமல், மூச்சிரைப்பு ஏற்படும். இதைத்தான் நாம் ‘இளைப்பு’ என்கிறோம். இளைப்பு என்பது நோய் அல்ல... காய்ச்சல், தலைவலி போன்று ஓர் அறிகுறி.
பொதுவாக ஆஸ்துமா இருப்பவர்களுக்கு இளைப்புத் தொந்தரவு இருக்கும். ஆனால், இளைப்புக்கு முழு முதற்காரணி ஆஸ்துமா மட்டுமல்ல. இதயக்கோளாறுகள், நுரையீரலில் ஏற்படும் கிருமித்தொற்று மற்றும் சுவாச ஒவ்வாமைகளாலும் இளைப்பு ஏற்படும். பூக்களில் உள்ள மகரந்தத் துகள், குளிர்காற்று, தூசுகள் மற்றும் படுக்கையில் இருக்கும் நுண்ணுயிரிகள் என பலவித ஒவ்வாமைகளால் இளைப்பு ஏற்படலாம்.
இளைப்புக்கான காரணம் என்ன என்பதை மருத்துவ ஆலோசனையின்படி கண்டறிய வேண்டும். குளிர் காற்றால் இளைப்பு ஏற்படுகிறதென்றால், குளிர்காற்றை சுவாசிக்காத சூழலில் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். ஆஸ்துமா தொந்தரவுக்கு ஆளாகியுள்ளவர்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நல்ல பலனை அடைய முடியும். அரிதாக உடற்பயிற்சி செய்வதால் கூட சிலருக்கு இளைப்பு ஏற்படலாம். மருத்துவத் தீர்வுகள் மூலம் அதை சரி செய்து கொள்ள முடியும்.’’
Post a Comment