Header Ads



எம்மை விமர்சிக்கலாம் தூற்றலாம் - நாம் செல்லவுள்ள பயணம், உங்கள் வீட்டுக்கு பயன்தரும் - ரணில்

வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிலான அபிவிருத்தியை, மேல் மாகாணம் முதல் திருகோணமலை வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் யாழ்ப்பாணம் வரையிலும் ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இன்று அலரி மாளிகையில் வைத்து ஆற்றிய விஷேட உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  பிரதமர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

கடந்த வருடம் ஜனவரி 8ம் திகதி நாட்டு மக்களின் ஆணைப்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாடு புதிய பாதையில் சென்றது. 

இதன் ஒரு வருட பூர்த்திக்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ளன. இந்த காலப் பகுதியில் புதிய அரசியலமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம், தேர்தல் ஆணையாளரின் தலைமையில் தேர்தலை நடத்தினோம், முதல் முறையாக நிறைவேற்று அதிகாரத்தை குறைக்க ஜனாதிபதி ஒருவர் விருப்பம் தெரிவித்தார், பாராளுமன்ற தேர்தலின் பின் இரு பிரதான கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கத்தை நிறுவினோம். 

வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது நிலங்களை மீள வழங்க, மீள் குடியேற்ற, நடவடிக்கை எடுத்தோம். 

இவ் வருடத்தில் நாம் மற்றுமொறு புதிய பயணத்தை மேற்கொள்ளவுள்ளோம். நாம் பொருளாதார, சமூக வேலைத் திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். 

மக்களின் வறுமானத்தை அதிகரிக்க, இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்க, புதிய பொருளாதாரத்தை பெற்றுக் கொடுக்க, வறுமையை ஒழித்தல், நாட்டின் நீதி, சமாதானத்தை உறுதி செய்தல், போன்ற சமூக நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். 

இதற்காக நாட்டின் அனைத்து மக்களையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கிறோம். 

நாம் 2015ம் ஆண்டு ஆரம்பித்த பயணம் முழு நாட்டுக்கும்... எம் எல்லோருக்கும், நாம் இப்போது செல்லவுள்ள பயணம் உங்கள் வீட்டுக்கு பயன்தரும் பயணம். உங்களை வெற்றியடையச் செய்யும் பயணம். 

இதன்போது சிலர் எம்மை விமர்சிக்கலாம், தூற்றலாம் அதற்காக எமது பயணத்தை நிறுத்த தேவையில்லை, அவர்களையும் நேரம் வரும் போது எம்முடன் இணைத்துக் கொண்டு, இந்த நாட்டின் வரலாற்றில் காணாத அளவிலான பாரிய அபிவிருத்தியை மேல் மாகாணம் முதல் திருகோணமலை வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் யாழ்ப்பாணம் வரையிலும் ஏற்படுத்த நாம் எதிர்பார்த்துள்ளோம். 

இதற்காக இந்த நாட்டிலுள்ள அணைவரையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்புவிடுக்கின்றோம்.. என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். 

1 comment:

  1. "அபிவிருத்தி என்பது வெறும் கட்டுமானங்களும், பாலங்களும்" என மஹிந்த நினைத்து தனது அபிவிருத்தியிலும் அவரே மண்ணை அள்ளிப்போட்டார்!

    ஆனால் இந்த ரணில் "அபிவிருத்தியில்" பல யதார்த்தமான விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும் நடைமுறையில் அவற்றை அடைய முயற்சிப்பதாயில்லையே.... "வெள்ளம் வருமுன்தானே ஆணை தேவை"!

    ReplyDelete

Powered by Blogger.