காசாவில் ஆங்கில, புத்தாண்டுக்கு தடை
பலஸ்தீனின் காசாவில் புத்தாண்டு விழாக்களை நடத்த ஹமாஸ் அமைப்பு தடை விதித்துள்ளது. மதப் பாரம்பரியங்களை மதிக்க வேண்டும் என்று காசா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
“ஹோட்டல்கள், மண்டபங்கள் மற்றும் விடுதிகளில் ஆண்டு இறுதி கொண்டாட்டங்களை நடத்துவதற்கு உள்துறை அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களம் அனுமதி அளிக்காது” என்று பொலிஸ் பேச்சாளர் அய்மன் அல் படினிஜி குறிப்பிட்டார். எனினும் அவ்வாறான கொண்டாட்டங்களுக்கு அனுமதி கேட்டு பல விண்ணப்பங்களும் வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
புத்தாண்டு கொட்டாட்டங்கள் எமது மத கற்பித்தலுக்கு முரணானது என்றும் எமது கலாசாரம், மரபு, பெறுமானங்களுக்கு பொருந்தாதது என்றும் காசா பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய நாட்காட்டியின் படி இஸ்லாமிய புது வருடம் இந்த ஆண்டு ஒக்டோபரில் பிறந்தது. எனினும் கிரிகோரியன் நாட்காட்டி அடிப்படையிலான புத்தாண்டு அரபுலகில் பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இஸ்ரேல், எகிப்து மற்றும் மத்தியதரைக் கடலுக்கு இடைப்பட்டிருக்கும் 362 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட காசாவில் சுமார் 1.8 மில்லியன் பலஸ்தீனர்கள் வாழ்கின்றனர். இது உலகின் அதிக சன நெரிசல் கொண்ட பகுதியாக உள்ளது. 2006 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த பகுதி இஸ்ரேலின் முற்றுகையில் உள்ளது.
Post a Comment