நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கையில், குதிக்க தயாராகிறது பொதுபல சேனா
- ARA.Fareel-
பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரைக் கைது செய்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைப்பதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.
அதற்கிணங்கவே பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலமளிக்க ஆஜரான அவர் கைது செய்யப்பட்டார் என பொதுபலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலன்த விதானகே தெரிவித்தார்.
ஞானசார தேரரின் பிணை மனு நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளதால் நாடெங்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொதுபலசேனா திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
ஞானசார தேரரின் கைது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
‘ஞானசார தேரரை கைது செய்து பிணையில் விடுவிக்காது தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பது பௌத்தர்கள் மத்தியில் பலத்த அதிருப்தியை உருவாக்கியுள்ளது. பௌத்தத்துக்காகவும் நாட்டின் பாதுகாப்புக்காகவும் அடிப்படைவாதிகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர் அவர்.
அவர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என கடந்த 25 ஆம் திகதியே பொதுபலசேனாவுக்கு இரகசியத் தகவல்கள் கிடைத்திருந்தன. எனவே இதனை ஒரு திட்டமிடப்பட்ட சம்பவமாகவே நோக்க வேண்டியுள்ளது.
அவர் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போன சம்பவத்தில் பிரதிவாதிகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் 6 இராணுவ புலனாய்வு வீரர்களுக்கு பிணை வழங்கப்படாததினாலேயே உணர்ச்சிவசப்பட்டு நீதிமன்றில் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளார்.
தான் பேசியவைகள் தவறானவை என்றால் மன்னிப்பு வழங்கும் படியும் நீதிவானை வேண்டியுள்ளார். அவர் பிணையில் விடுதலை செய்யப்பட முடியாத அளவுக்கு பாரிய குற்றங்கள் எதுவும் செய்யவில்லை.
அன்றைய தினம் ஞானசார தேரர் ஹோமாகம நீதிமன்றத்தில் முக்கிய உரையொன்றினை ஆற்றவிருந்தார். அங்கு அவர் எது சம்பந்தமாக உரையாற்றவிருந்தார் என்றும் அவரது உரையும் நாளை (இன்று) ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என்றார்.
நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் ஞானசார தேரர் கடந்த செவ்வாய்க்கிழமை ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஹோமாகம நீதிமன்ற நீதிவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்படுவதற்கு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஞானசார தேரர் சிறுநீர் கடுப்பு நோய் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிறைச்சாலையில் அவர் பிரத்தியேகமாக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஞானசார தேரரின் விளக்கமறியலுக்கு எதிராக தேசிய பிக்குகள் சம்மேளனம் எக்சத் சிங்ஹ லே மகஜன பெரமுன எனும் அமைப்புகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
If Minister S.B.Dissanayeke can be sentenced for 2 years imprisonment Gnasara should be sentenced to atleast for 5 years imprisonment.
ReplyDelete