Header Ads



முஸ்லிம்கள் விவகாரத்தில், கனடா அரசியல்வாதிகளின் முன்மாதிரி


கனடாவில் புகலிடம் வழங்கியதை வரவேற்கும் வகையில் துருக்கி கடற்கரையில் உயிரிழந்த அய்லான் குர்தியின் உறவினர் ஒருவர் கனேடிய மேயருக்கு முடி திருத்தம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதம் துருக்கி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட 2 வயது குழந்தையான அய்லான் குர்தியின் புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, அய்லான் குர்தியின் தந்தையுடன் பிறந்த சகோதரரான முகமது குர்தி கனடா நாட்டில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளார்.

கனடாவில் ஏற்கனவே குடியேறி இருந்த முகமதுவின் உறவினரான டிமா குர்தி இதற்கான ஏற்பாடுகளை கவனித்து வந்துள்ளார்.

இருப்பினும், அவரது விண்ணப்பத்தை கனடா அரசு நிராகரித்தது. ஆனால், தொடர் முயற்சியை மேற்கொண்டதால் கடந்த டிசம்பர் 28ம் திகதி முகமது தன்னுடைய மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் கனடா நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளார்.

முகமது அடிப்படையில் முடி திருத்தம்(பார்பர்) செய்யும் ஒரு தொழிலாளி ஆவார். சிரியாவில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் இந்த தொழிலை நடத்தி வந்துள்ளார்.

கனடாவில் உள்ள பிரித்தானிய கொலம்பியாவில் புகலிடம் கிடைத்ததும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று Port Coquitlam நகரில் Kurdi Hair Design என்ற முடி திருத்தும் மையத்தை திறந்துள்ளார்.

இந்நிலையில் இதே நகரை சேர்ந்த மேயரான ரிச்சார்ட் ஸ்டூவர்ட் என்பவர் ‘தனக்கு முடி திருத்தம் செய்து தருகிறீர்களா?’ என முகமதுவிடம் கேட்டுள்ளார்.

இதற்கு முகமது சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து புதன் கிழமை அன்று முடி திருத்தம் மையத்திற்கு மேயர் வந்தவுடன் அவர் விரும்பிய வகையில் கனடாவில் முதன் முறையாக முடி திருத்தம் செய்து பாராட்டை பெற்றுள்ளார்.

இது குறித்து பேசிய மேயர், ‘முகமதுவின் குடும்பத்தினருக்கு புகலிடம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களை அன்புடன் வரவேற்பதற்கு ஒரு அடையாளமாக முகமது கையால் முடி திருத்தம் செய்துக்கொண்டேன்.

மேலும், முகமது செய்த பணிக்கு கட்டணமாக 24 டொலர் அளித்தேன். ஆனால், அதை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டதால், அவருக்கு அருகில் அந்த பணத்தை வைத்துவிட்டு வந்ததாக’ உருக்கமாக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்குள் 25,000 சிரியா அகதிகளுக்கு புகலிடம் கொடுக்க உள்ள நிலையில் கடந்த ஜனவரி 6ம் திகதி வரை 6,974 சிரியா அகதிகள் கனடா நாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.