"பள்ளிவாசல் பிரச்சினைகளை, பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லவேண்டாம்"
நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களின் சொத்துக்களையும் முறையாக அடையாளமிட்டு அவற்றை நிர்வகிக்குமாறும் பள்ளிவாசல் சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்தும் நிர்வாகிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் படியும் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் வக்பு சபையை பணித்துள்ளார்.
இதனடிப்படையில் வக்பு சபை பள்ளிவாசல் சொத்துகளை முறையற்ற வகையில் பயன்படுத்தும் சொத்துகள் மூலம் கிடைக்க வேண்டிய வருமானத்தை குறைத்து செலுத்தும் பள்ளிவாசல் நிர்வாகங்களை இனம் காணுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வக்பு சபை கவனம் செலுத்தியுள்ளதாகவும் விரைவில் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் வக்பு சபைத் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.யாசீன் தெரிவித்தார்.
வக்பு சபைத் தலைவர் பள்ளிவாசல் சொத்துகள் தொடர்பில் ‘விடிவெள்ளி’ க்குக் கருத்து தெரிவிக்கையில்,
‘நாட்டிலுள்ள பல பள்ளிவாசல்களின் பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள் பற்றி தேடிப் பார்க்க வேண்டியுள்ளது. அநேக பள்ளிவாசல்களின் வக்பு செய்யப்பட்ட சொத்துகள் தனிப்பட்டவர்களால் பரிபாலிக்கப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
கொழும்பு உட்பட பல நகரங்களிலுள்ள பள்ளிவாசல் சொத்துக்கள் வக்பு சட்டத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. பள்ளிவாசல் நிர்வாகிகளின் அனுசரணையுடன் மிகக் குறைவான வாடகை செலுத்தப்பட்டு வருகின்றன.
பலவருடங்களாக ஹராமான முறையில் பள்ளிவாசல் சொத்துக்களை சிலர் அனுபவித்து வருகிறார்கள்.
இவை பற்றி ஆராய்ந்து முறையான விசாரணைகள் நடத்தி பள்ளி வாசல் சொத்துக்கள் முறையாக பரிபாலிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.
பள்ளிவாசல்களில் ஜனநாயகம் பேணப்பட வேண்டும். படித்த இளைஞர்கள் நிர்வாகத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும். அப்போது சொத்துக்கள் பரிபாலிப்பதில் முன்னேற்றங்கள் ஏற்படலாம்.
வக்பு சொத்துகள் முறையாக பரிபாலிக்கப்படுகிறதா? அச்சொத்துகள் சமூகத்துக்கு பயன்படுகிறதா? சரியான வருமானம் கிடைக்கப் பெறுகின்றதா? போன்ற விடயங்கள் ஆராயப்படவுள்ளன.
விஷேடமாக மேலும் ஒரு விடயத்தை வக்பு சபை பள்ளிவாசல் நிர்வாகங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறது. பள்ளிவாசல் பிரச்சினைகளை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்ல வேண்டாம்.
பொலிஸ் நிலையத்துக்குச் செல்வதால் பிரச்சினை மேலும் பூதாகரமாகிவிடுகின்றது. அதனால் பள்ளிவாசல் பிரச்சினைகள் தங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும்' என்றார்.
Post a Comment