Header Ads



விசேட புலனாய்வு பிரிவினை ஸ்தாபிப்பதற்கு, ஜனாதிபதி மைத்ரி ஆலோசனை

சட்டவிரோத போதைப்பொருள் சுற்றிவலைப்புகளுக்கான விசேட புலனாய்வு பிரிவினை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஏற்புடைய துறைகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

சட்டவிரோத போதைப்பொருள்கள் தொடர்பாக கடந்த வருடம் எவ்வளவுதான் சுற்றிவலைப்புகள் மேற்கொள்ளப்பட்டபோதும் ஹெரோயின் போன்ற போதைப்பொருள் பாவனைகள் குறையவில்லை என புள்ளிவிபரங்களின் மூலம் சுட்டிக்காட்டப்படுவதுடன், அதுபற்றி கண்டறிந்து உடனடியாக தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கினார்.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் 2015ஆம் ஆண்டின் முன்னேற்றம் மற்றும் 2016ஆம் ஆண்டின் புதிய திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடும் பொருட்டு நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இவ் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் தொடர்பான அனைத்து நிறுவனங்களதும் பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

போதைப்பொருள் சுற்றிவலைப்புக்கள் மற்றும் சட்டத்தை அமுல்படுத்துதல் தொடர்பாக தற்போதுள்ள சட்ட விதிகளில் தேவையான மாற்றங்களை துரிதமாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையில் அதிகரிப்பு காணப்படுவதுடன் அது தொடர்பாக விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் ஏற்புடைய துறைகளுக்கு அறிவுரை வழங்கினார்.

அவ்வாறே மதுவரி கட்டளைச் சட்டத்திற்கு முரணாக நடாத்திச் செல்லும் சட்டவிரோத மதுபானசாலைகள் தொடர்பாக இவ் ஆண்டு முதல் சட்டத்தை உரியவாறு  நடைமுறைப்படுத்துவதற்கு மதுவரி ஆணையாளருக்கு அறிவுரை வழங்கிய ஜனாதிபதி அவர்கள், எதிர்வரும் ஆறுமாத காலத்திற்குள் சகல அரச நிறுவனங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சுற்றறிக்கைகளை வெளியிடுமாறு உத்தியோகத்தர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பொதுமக்கள் தமது பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள 1919 தொலைபேசி இலக்கத்தினூடாக போதைப்பொருள் வியாபாரம் தொடர்பான தகவல்களை வழங்க முடியுமென இங்கு குறிப்பிடப்பட்டது.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக அதனோடு தொடர்புடைய சகல நிறுவனங்களினாலும் 2015ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம்பற்றி இங்கு ஜனாதிபதி அவர்களுக்கு அறிவூட்டப்பட்டதுடன், சுங்கத்திணைக்களம், மதுவரித்திணைக்களம், பொலிஸ் திணைக்களம் ஆகியன ஏற்புடைய சுற்றிவலைப்புக்கள் தொடர்பாக ஜனாதிபதி அவர்களுக்கு  விளக்கமளித்தன.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் மூலம் 2016ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டம் தொடர்பாகவும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்காக பாடசாலை மாணவர்களின் பங்களிப்பினை பெற்றுக்கொள்ளும் விரிவானதொரு வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் ஆகியவற்றின்மூலம் மக்களை அறிவூட்டுவதற்காக நடைமுறைப்படுத்த முடியுமான நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள், போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தில் நேரடியாக பங்களிப்புச் செய்யும் பல்வேறு பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2016.01.28

1 comment:

  1. இதில் மதுபான ஒழிப்புத்திட்டத்தையும் கொண்டு வந்து சகல பதுபானச்சாலைகளையும் மூடிவிட்டால் நாடு தானாக வளர்ச்சி அடைந்து விடும். மதுபானம் அருந்தி அதன் வெறி போதமையின் காரணத்தால்தான் போதைபொருள் பாவிக்கும் நிலைமைக்கு அதிகமானவர்கள் ஆளாகின்றார்கள் ஆகவே மதுபானசாலைகளையும் மூட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.