அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் - ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி கோபம்
ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்க ஆயத்தமாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் பதற்றம் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் அமலாக்கம் குறித்த கவலையை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
தாங்கள் அணு ஆயுத பலம் பெறப் போவதில்லை என ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் விலக்கிக் கொள்ளவும் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தம் கையெழுத்தான ஐந்தே மாதங்களில் ஈரான் இரண்டு முறை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளைப் பரிசோதித்துப் பார்த்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
அவற்றில் ஒரு ஏவுகணைப் பரிசோதனை குறித்த செய்தியை ஈரான் அரசு ஊடகமே வெளிப்படையாக தெரிவித்தது.
மேலும், பூமிக்கு அடியில் ரகசிய ஏவுகணைத் தளத்தை அமைத்துள்ள ஈரான், அதனை அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது.
இதற்கிடையே, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் 3 போர்க் கப்பல்களுக்கு மிக அருகே ஈரானியக் கப்பல் ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
ஈரானின் அணு ஆயுதத் திறன் கொண்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு எதிராகப் பல தீர்மானங்களை இயற்றியுள்ள ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் ஈரானின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஈரானின் ஏவுகணை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பக்கபலமாக இருக்கும் நிறுவனங்களையும், நபர்களையும் பொருளாதாரத் தடை பட்டியலில் சேர்க்க அமெரிக்கா தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவித்தன.
இது ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானியைக் கோபமடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தனது பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு அவர் எழுதிய கடிதத்தில், அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை விதித்தால் அது சட்டத்துக்குப் புறம்பான வன்மச் செயலாக இருக்கும் என்று கண்டித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தை ராணுவம் மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என அந்தக் கடிதத்தில் ரெளஹானி குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளால் அந்த நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளால் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.
எனினும், கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு இடையிலும் ஈரான் அணு ஆயுத பலம் பெறும் முயற்சியில் முன்னேற்றமடைந்து வருவதாக வல்லரசு நாடுகள் அச்சம் தெரிவித்து வந்தன.
இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் வியன்னாவில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தம் இரு தப்பினருக்கும் நன்மையளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தச் சூழலில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட அணுசக்தி ஒப்பந்த அமலாக்கத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது.
Post a Comment