பொலிஸார் - மக்கள் மோதலில் ஒருவர் உயிரிழப்பு - எம்பிலிபிடியவில் பதற்றம்
எம்பிலிபிடிய புதிய நகரில் (நவ நகர்) பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் (07) உயிரிழந்துள்ளார்.
அண்மையில் எம்பிலிபிடிய பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்து நிகழ்வில் பொலிஸார் மற்றும் பொது மக்களிடையே மோதல் நிலை ஏற்பட்டது.
இதனால் நான்கு பொலிஸார் உட்பட ஏழ்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் பொதுமகன் ஒருவர் இன்று அதிகாலை பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எம்பிலிபிடிய நகரில் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன.
மேலும் வர்த்தக நிலையங்களில் கறுப்புக் கொடிகளை ஏற்றியுள்ளதோடு, மக்கள் எம்பிலிபிடிய நகரில் கூடி போராட்டத்தினையும் மேற்கொண்டு வருவதாக, செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போராட்டம் காரணமாக எம்பிலிபிடிய - மித்தெனிய வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, மக்கள் வீதியில் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட வீட்டில் இடம்பெற்ற பிரச்சினையை தீர்க்கச் சென்ற வேளையே பொலிஸாருடன் வீட்டில் இருந்தவர்கள் முரண்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
எனினும் சம்பவ தினத்தன்று, நள்ளிரவு விருந்து நிகழ்வு நடைபெற்ற வீட்டுக்கு வந்த பொலிஸார் மதுபானம் வேண்டும் எனக் கோரியதாகவும், இதனால் முரண்பாடு ஏற்பட்ட நிலையில், குறித்த வீட்டுக்கு மேலும் சில பொலிஸார் வந்ததோடு, பிரச்சினை வலுவடைந்ததாகவும், அங்கிருந்தவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இதன்போது தாக்குதலுக்கு இலக்கான ஒருவரை மாடியில் இருந்து தள்ளியதாக நேரில் பார்த்தவர்கள் கூறியபோதும், குறித்த நபர் மாடியில் இருந்து குதித்ததாலேயே காயமடைந்ததாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதுஎவ்வாறு இருப்பினும் இந்த மோதலால் காயமடைந்த ஒரு பிள்ளையின் தந்தையான 29 வயது இளம் குடும்பஸ்தர் கர்ப்பிணியான தனது மனைவியை தவிக்கவிட்டு இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
Post a Comment