நாமல் ராஜபக்சவை ஆட்சிக்கு, கொண்டுவர முயற்சி - அதாவுட செனவிரட்ன
விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோரே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமையை தெளிவுபடுத்துவதற்காக கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தமது கட்சியை பிளவுபடுத்த முனையவில்லை. விமல் வீரவன்ஸ, கம்மன்பில, தினேஷ் குணவர்தன ஆகியோரே இதனை செய்கின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்தி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு 20 வருடங்கள் ஆட்சி செய்ய வழியை ஏற்படுத்திவிட்டு, நாமல் ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பை கொடுத்தே இவர்கள் இந்த வேலையை செய்ய முயற்சிக்கின்றனர்.
இந்த நிலைமையை ஏற்படுத்த வேண்டாம் என கும்பிட்டு கேட்டுக் கொள்கிறோம் என முன்னாள் அமைச்சர் செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் மகிந்த அமரவீர, நாங்கள் யாருடைய வாலும் அல்ல, யாருக்கும் தேவையான வகையில் ஆடவும் மாட்டோம்.
நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை பாதுகாத்து, எங்களுக்கு வாக்களித்த மக்களின் கௌரவத்தை பாதுகாக்க முயற்சிக்கும் அணி.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த, சுதந்திரக் கட்சி அல்லாத கட்சிகளை சேர்ந்தவர்கள் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு வேறு மாற்று வழியில்லை என்பதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைக்க முயற்சித்து வருவதுடன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர்.
இதனை நாங்கள் தெளிவாக அறிந்திருக்கின்றோம். இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இருந்து இவர்களை ஐக்கிய தேசியக் கட்சியே காப்பாற்றியது.
இதற்காக இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைக்கும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
இரண்டு கட்சிகளின் தலைவர்கள், தமது பிரச்சினைகளை தீர்த்து கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை நாங்கள் மாத்திரமல்ல, முழு நாடும் அறியும்.
எங்களிடம் இதற்கான ஆதாரங்கள் உள்ளன. இது குறித்து விரைவில் நாங்கள் வெளியிடுவோம் எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment