Header Ads



இனவாத சிந்தனை கொண்டவர்களே, பிக்குமார்களை கட்டுப்படுத்தும் சட்டத்தை எதிர்க்கின்றனர்

பிக்குமார்களின் நடத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டமூலம் அவசியமாக நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என பெல்லன்வில விமலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தரும், பெல்லன்வில விகாரையின் விகாராதிபதியுமான விமலரத்ன தேரர்  ஆனமடுவையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது பிக்குமார்களின் நடத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டம் குறித்தும் அவர் தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இனவாத சிந்தனை கொண்டவர்களே குறித்த சட்டமூலத்தை எதிர்க்கின்றனர்.

ஆனால் குறித்த சட்டத்தின் மூலம் பிக்குமாரின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுவதுடன், அவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பிக்கு சம்மேளனத்துக்கே உரித்தாகும். அத்துடன் பிக்குமார்களுக்கென புதிய சட்டங்களும் உருவாக்கப்படும்.

சாதாரண சிவிலியன்கள் தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழ் பிக்குமார்கள் விசாரிக்கப்பட கூடாது. அதற்கென தனியான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

மகாநாயக்கர்கள் உள்ளிட்ட முக்கிய தேரர்கள் இதுபோன்றதொரு சட்டமூலத்தை உருவாக்கித் தருமாறு சந்திரிக்கா மற்றும் மஹிந்த ஆகியோரின் தலைமையிலான அரசாங்கங்களிடம் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் அதனை பல்வேறு காரணிகளை முன்வைத்து தட்டிக் கழித்து விட்டனர்.

கடந்த காலங்களில் தம்பையா என்றொருவர் பிக்குமார்கள் குறித்து விமர்சித்து நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இன்னும் சிலரும் விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். இவை தவறான விடயங்களாகும்.

எனவே பிக்குமார் தொடர்பான சட்டங்கள் தனியாக உருவாக்கப்பட வேண்டும். அதனை எதிர்ப்பவர்கள் சட்டமூலத்தை தெளிவாக வாசித்து விட்டு தமது எதிர்ப்பை வெளிக்காட்டட்டும் என்றும் பெல்லன்வில தேரர் தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.