சத்தியம் வாங்கிய ஒபாமா..! எதற்காக தெரியுமா..?
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடனின் மகனான பியூ(46) மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மே மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மகனின் திடீர் மரணத்தால் பாதிக்கப்பட்ட அவர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கில்லை என்று அறிவித்து விட்டார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் தனக்கு இடையிலான நெருக்கம் குறித்து பிரபல செய்தி நிறுவனத்துக்கு ஜோ பிடன் சமீபத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டில் ஒருநாள் நானும் ஒபாமாவும் ஒன்றாக அமர்ந்து மதியஉணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த எனது மகன் பியூ, இதற்கு முன்னர் செய்துவந்த சட்ட ஆலோசகர் பணியில் இருந்து விலகி விட்டதாகவும், அதுவரை கிடைத்துவந்த சம்பளப்பணத்தின் மூலம் சிகிச்சை செலவை சமாளித்துவந்த அவன் மேற்கொண்டு மருத்துவ செலவுகளை மேற்கொள்ள முடியாமல் திணறிவருவதையும் நான் ஒபாமாவிடம் குறிப்பிட்டேன்.
அவனது சிகிச்சை செலவுகளை ஈடுகட்ட எனது வீட்டை விற்க முடிவு செய்துள்ளதாகவும் அவரிடம் நான் கூறினேன். இதை கேட்டதும் சட்டென்று எழுந்துநின்ற ஒபாமா, அந்த வீட்டை விற்காதீர்கள். வீட்டை விற்கமாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள் என்று என்னை கேட்டுக்கொண்டார்.
உங்களுக்கு நான் பணம் தருகிறேன். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன். உங்கள் வீட்டை விற்கப்போவதில்லை என்று எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள் என்று கூறி என்னிடம் வற்புறுத்தி சத்தியம் வாங்கிக் கொண்டார். என் மீதும் என் குடும்பத்தார் மீதும் ஒபாமாவும் அவரது குடும்பத்தார் வைத்திருக்கும் அன்பும், அவர் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் நானும் எனது குடும்பத்தார் வைத்திருக்கும் அன்பும் ஒரே குடும்பம் என்று கூறிக்கொள்ளும் அளவிலானது.
இவ்வாறு அவர் கூறினார்.
எனினும், ஒபாமா செய்ய முன்வந்த பண உதவியை ஜோ பிடன் ஏற்றுக்கொண்டாரா?, அவர் எவ்வளவு பணம் தந்தார்? என்பது தொடர்பாக இந்த பேட்டியின்போது அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
Post a Comment