சுதந்திரக் கட்சியில் பிளவு, அவசரமாக கூடுகிறது மத்திய குழு
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்படுவதைத் தடுப்பதற்கு அவசரமாக கட்சியின் மத்திய குழுவை இவ்வாரம் கூட்டுவதற்கு கட்சி தீர்மானித்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதிருப்தியாளர்கள் எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தனியான முன்னணியில் போட்டியிடப்போவதாகக் கூறியிருந்தனர். தாமரைச் சின்னத்தில் ‘புதிய சுதந்திரக் கட்சி’ என்ற பெயரில் இவர்கள் போட்டியிடுவதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட்டிருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
அதேநேரம், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும், ஐ.ம.சு.முவைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்களுக்குமிடையில் சந்திப்புக்கள் நடைபெறுவதாகவும், உள்ளகப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் இச்சந்திப்புக்கள் அமைந்திருப்பதாகவும் அறியவருகிறது.
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முன்னெடுத்துச் செல்லவேண்டும் என அவருடைய ஆதரவணியினர் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தேர்தல் பிரசாரங்களுக்கு தலைமைவகிப்பார் என்றும், இதற்கான உரிமை வேறு எவருக்கும் வழங்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். இவ்வாறான நிலையில் அவசரமாக கூட்டப்படவிருக்கும் செயற்குழுக் கூட்டமானது முரண்பாட்டில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பினருக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்துவது தொடர்பாக ஆராய்வதற்கு முக்கியமளிக்கும் என கட்சிவட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறுவதற்கு எறுப்பினர்கள் எவருக்கும் மத்திய குழு ஒருபோதும் அனுமதிக்காது. மத்திய குழுவினால் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு கட்சி உறுப்பினர்கள் கட்டுப்பட்டு செயற்பட வேண்டும். ஜனாதிபதி தலைமையில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என மத்திய குழு தீர்மானித்தால் அதற்கு சகலரும் கட்டுப்பட்டு செயற்பட வேண்டும். புதிய கட்சியை ஆரம்பித்து கட்சியின் பிரசாரத்தை சீர்குலைப்பதற்கு எவராவது முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறினார்.
Post a Comment