தேசிய அரசைக் கவிழ்ப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சி சதி, ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்
தேசிய அரசைக் கவிழ்ப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் பல்வேறு சதிகளை முன்னெடுத்து வருவதாக புலனாய்வுப் பிரிவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து, சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.
மஹிந்த ஆதரவாளர்களான கூட்டு எதிர்க்கட்சியினர் தெற்கில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி மைத்திரி - ரணில் தலைமையிலான தேசிய அரசைக் கவிழ்ப்பதற்கு சதித்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கமையவே வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டி விட்டதாகவும் குறிப்பிட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவு கடந்த வாரம் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை அவசர கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி முக்கிய உறுப்பினர்களையும், பாதுகாப்பு உயர் அதிகாரிகளையும் இதற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் விவசாய அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அரச தொழில் முயற்சிகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹாஸீம், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், தலதா அத்துகோரல உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர் என்று ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பின் பின்னரே கடந்த புதன் கிழமை, இரு பிரதான கட்சி பொதுச் செயலாளர்களும், அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஜயம்பதி விக்ரமரத்ன உள்ளிட்டவர்கள் அரச தகவல் திணைக்களத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர் எனத் தெரியவந்துள்ளது.
இந்த ஊடகச் சந்திப்பின் போது ஹக்கீம், துமிந்த, கபீர் மூவரும் அரசை யாராலும் கவிழ்க்க முடியாது என்றும், அதற்கான முயற்சிகள் தோற்கடிக்கப்படும் என்றும் சூளுரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment