Header Ads



"வியாபாரிகள்"

-மொஹமட் பாதுஷா-

முஸ்லிம்களின் அரசியல், வியாபாரிகளின் அரசியலாலும் அரசியல் வியாபாரிகளாலும் நிரப்பப்பட்டிருக்கின்றது. கிட்டத்தட்ட எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் நன்றாகப் பணம் உழைத்திருக்கின்றார்கள். ஆனால், மக்கள் மனங்களை சம்பாதித்தவர்கள் நிகழ்கால அரசியலில் மிக மிகக் குறைவு. இவர்கள் வியாபாரிகள் என்பதற்கு இதுவே போதுமான, மிக எளிய உதாரணமாகும்.

'மக்களின் அரசியல்வாதிகள்' - 'வியாபார புத்தியுள்ள அரசியல்வாதிகள்' ஆகிய தரப்பினருக்கு இடையிலான இலட்சணங்களை ஒப்பிட்டு நோக்குகின்ற போது, முஸ்லிம் அரசியல்வாதிகள் பெரும்பாலும். அரசியல் வியாபாரிகளாக இருக்கின்றார்கள் என்ற நிலைப்பாட்டுக்கே வரவேண்டியிருக்கும். இவர்களுள் பெரிய கடை முதலாளிகளும் பெட்டிக் கடை முதலாளிகளும் உள்ளனர். சிலருக்கு பணமும் சிலருக்கு பதவியும் உழைக்க வேண்டியிருக்கும். சிலர் புகழையும் பெரிய முதலாளி என்ற அந்தஸ்தையும் அடைய வேண்டும் என்று எண்ணுவார்கள். 'பால் கடை' என்று பெயரைப் போட்டுவிட்டு 'கள்ளு' விற்பனை செய்வோரையும் நல்ல நேர்மையான முதலாளியாகவே இன்னும் சமூகம் நம்பிக் கொண்டிருக்கின்றமையே பெரிய துரதிர்ஷ்டம். 

அந்த வகையில், முஸ்லிம்களின் அரசியலைப் பொறுத்தமட்டில், இன்று, தம்மைத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற எல்லோருமே, எதையோ- என்ன வடிவிலோ உழைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால், சிலர் தம்மிடமுள்ள அசல் அலைபேசியை 'அசல் அலைபேசி' என்று சொல்லி விற்கின்றார்கள். வேறு சிலர் சீன அலைபேசியை 'ஒரிஜினல் அலைபேசி' போன் என்று சொல்லி விற்று பணம் சம்பாதித்திருக்கின்றார்கள். அது மட்டுந்தான் வித்தியாசம். வேறொன்றும் பெரிதாக இல்லை.

முஸ்லிம் அரசியல்வாதிகள், தாம் அரசியலில் சம்பாதிக்கவில்லை என்றும் தம்மிடம் பணம் இல்லை என்றும் வெளியில் சொல்லிக் கொண்டாலும், நிலையான வைப்புக்கள் போல, 'எடுக்கக்கூடாத பணம்' என்று பெருந்தொகை பணம் எங்கோ ஓர் இடத்தில், ஏதோ ஒருவடிவில் இருக்கவே  செய்கின்றது.  சிலருக்கு இது திரவச் சொத்தாக அதாவது பணமாக இருக்கின்றது, சிலருக்கு இது அசையாச் சொத்தாகக் கிடக்கின்றது. அமைச்சரொருவரின் அல்லது ஓர் எம்.பி.யின் சம்பளத்தை அவரது பதவிக்காலத்தால் பெருக்கி, அதனுடன் மாமன் வீட்டுச் சீதனங்களையும் கூட்டி, இப்போதிருக்கின்ற சொத்தில் இருந்து கழித்தால் வரும் மீதியில், பெருமளவானவை அரசியல் வழிவந்தவைகளாகவே இருக்கும்.

இந்த வியாபாரம் எப்போதைக்கும் களை கட்டியிருக்க வேண்டும் என்பதற்காக, தமது கடைகள் முன் எப்போதும் நிரம்பி வழிய வேண்டும் என்பதற்காக அவர்கள், மக்களைப் பிரித்தாளுகின்ற தந்திரத்தைப் பயன்படுத்துகின்றனர். முஸ்லிம்களின் சமூக அமைப்புக்களும் சமய இயக்கங்களும் மக்களை துண்டாடியது போதாது என்று, முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமக்கு வாக்களிக்கும் மக்களிடையே பிரிவை ஏற்படுத்தியுள்ளனர். இவர்கள், தமது எதிர்கால அரசியலுக்கும் சொந்த நலனுக்கு முன்னுரிமை அளிப்பதால், மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதிலும் அதற்கான தீர்வு காண்பதிலும் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதை இதற்கு முன்னர் நாம் கண்டிருக்கின்றோம், இப்போதும் கண்டுகொண்டிருக்கின்றோம்.

ஒருபுறத்தில் நல்லாட்சி குறித்தான பெருமையடித்தல்களும் உற்சாக வார்த்தைகளும் வெளியாகிக் கொண்டிருக்க, இனவாதம் மீள உயிர்த்தெழுந்திருக்கின்றது. வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், வில்பத்து முஸ்லிம்களின் பிரச்சினை போன்றவை தொடர்பான கலந்துரையாடல்களும் வாதப்-பிரதிவாதங்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், இனவாதிகள், புதிய புதிய கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சைகளை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, 'இந்த நாட்டில் குர்ஆனை தடை செய்ய வேண்டும்';, 'மத்ரஸாக்களை கண்காணிக்க வேண்டும்' என்று பொதுபலசேனா கூறிக் கொண்டிருக்க, 'சிங்ஹ லே' (சிங்க இரத்தம்) என்ற பிரசாரமும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஆனால், முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களில் 99 சதவீதமானோர் சுரணையற்ற பிறவிகளாவே வழக்கம் போல இது விடயத்தில் நடந்து கொள்கின்றனர். கட்சித் தலைவர்கள் மத்தியில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எத்தனையோ நாட்களுக்குப் பிறகு, 'சிங்ஹ லே' தொடர்பில் யாருக்கும் நோகாமல் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். மற்றையோருக்கு அதுக்குக் கூட நேரமில்லை. ஆனால், பெரிய அரசியல் கட்சியின் தலைவர்கள், அமைச்சர்களின் வேலை அறிக்கை விடுவதல்ல. தம்மால் எதுவுமே செய்ய அதிகாரம் இல்லாத பிரதிநிதிகளே அறிக்கை விட்டுவிட்டு, அப்பாடா... நமது கடமை முடிந்தது என்று திருப்தி கொள்ள முடியும். ஆனால், மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு அமைச்சர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் அவ்வாறு செய்ய முடியாது. அவர்கள் அப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும். அப்படியிருந்தவர்கள்தான் மக்கள் தலைவர்களாக இடம்பிடித்திருக்கின்றார்கள்.

மு.கா. ஸ்தாபக தலைவரின் மரணம் தொட்டு, இன்று வரையான 15 வருடங்களில் தற்போதைய தலைவரான ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இருந்தது 3 ஆண்டுகள் மட்டுமே. அதாவது 12 வருடங்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்திருக்கின்றார். ஆனால், அதை விட குறைந்த காலம் அமைச்சராக இருந்து மறைந்த தலைவரால் இந்த சமூகத்துக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள், உரிமைகள் போல எந்த விடயத்தை ஹக்கீம் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்? என்ற கேள்விக்கு அவரிடமே பதிலிருக்காது. அஷ்ர‡ப் காலத்து பேரம் பேசும் அரசியல், ஹக்கீம் காலத்தில், எதிர்த்தரப்புக்கே சாதகமாக அமைந்ததை மக்கள் அறிவார்கள். இதற்கு காரணம் மக்கள் நலனை முன்னிறுத்தாத, வியாபாரத் தன்மையான அரசியல் நகர்வாகும்.

மு.கா. தலைவர் மட்டுமல்ல, தேசிய காங்கிரஸின் தலைரான அதாவுல்லாவும் ஒன்றையும் பெரிதாக சாதிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். எம்.பி.யாக 15 வருடங்களும்; அமைச்சராக பிரதியமைச்சராக கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் கோலோச்சிய அதாவுல்லா, இந்த மக்களுக்காக எப்போதுமே குரல் கொடுத்ததில்லை. வட-கிழக்கு பிரிக்கப்பட வேண்டும் என்பதையும் புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதையும் தொடர்ச்சியாக தைரியமாக கூறிவந்த ஓர் அரசியல்வாதி என்றாலும், இனவாதம் முஸ்லிம்களின் மீது சீறிப் பாய்ந்தபோது மஹிந்தவின் அரவணைப்புக்குள் இதமாக இருந்தார்.

மக்களுக்காக வாய்திறந்து பேசவே இல்லை. கட்டடங்களாலும், வேலை வாய்ப்புக்களாலும் மக்களின் மனங்களை எப்போதும் திருப்திப்படுத்த முடியும் என்று அவர் எண்ணியிருந்தார். ஆனால், 15ஆயிரம் வாக்குகளையே பெற்று தோல்வியடைந்தார். ஆகவே, 15 வருடங்களாக எம்.பி.யாக இருந்தும் 16ஆயிரம் மக்களின் மனங்களைக் கூட அவரால் வெல்ல முடியாமல் போனதற்கு, அபிவிருத்தியை கொடுத்து மக்களின் மனங்களை வாங்க முடியும் என்ற அவரது வியாபார வியுகத்தின் தோல்வியே காரணமாகும்.

அண்மைக்காலம் வரைக்கும் மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட்; பதியுதீனும் இப்படியே இருந்தார். வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்தில் மட்டுமே கூடிய கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். மஹிந்த ராஜபக்ஷவுக்கான ஆதரவை ஹுனைஸ் பாறூக் விலக்கிக் கொள்ளும் வரைக்கும் மஹிந்த, பசில் போன்றோரின் நெருங்கிய சகாவாகவே ரிஷாட்  இருந்தார். கட்சியொன்றை ஆரம்பித்து, அதை எல்லா இடங்களுக்கும் விஸ்தரிக்க வேண்டிய தேவை ஏற்பட்ட பிறகே, சமூகத்துக்காக துணிந்து பேசும் தன்மை அவரிலிருந்து வெளிப்பட்டது எனலாம். அதாவது அளுத்கம கலவரத்தின் பின்னரே சமூகத்துக்;காக துணிந்து பேசுவதில் ஒப்பீட்டளவில் ரிஷாட் முன் நிற்கின்றார். ஹக்கீமை விட, தானே துணிந்த தேசியத் தலைவன் என்று  மக்களுக்கு காண்பிக்க வேண்டிய அவசியம் அவருக்கிருப்பதை மறுப்பதற்கில்லை. அவரும், அடிப்படையில் வியாபார பண்புள்ள அரசியல்வாதியே என்றாலும் ஒப்பீட்டளவில் 'கொஞ்சம் பரவாயில்லை' என்ற வகுதிக்குள் இவர் மக்களால் நோக்கப்படுகின்றார். 

பிரதான முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களின் நிலைமையே இப்படியிருக்குமானால், மற்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. அவர்கள் பெரும்பாலும் 'சமூகம்' என்ற உணர்வை விட, 'தேசியம்' என்ற உணர்வோடு செயற்படுபவர்கள் போல காட்டிக் கொள்கின்றார்;கள். முஜிபுர் ரஹ்மான், அசாத் சாலி போன்ற ஓரிருவரே இதற்கு விதிவிலக்காக செயற்படுகின்றனர்.

முஸ்லிம் கட்சிகளான மு.கா., ம.கா., தே.கா. ஆகியவற்றின் அரசியலானது மக்கள் மனங்களை வெல்லாமல் போனதற்கு நாம்; ஆரம்பத்தில் குறிப்பிட்ட முதலாளித்துவ அரசியலே காரணம் என்பதில் ஐயமில்லை. சமூக விடுதலை இயக்கச் செயற்பாடு, பேரம்பேசும் அரசியலாகி, சோரம்போகும் அரசியலாகி, இன்று முதலாளித்துவ அரசியலாக போய்க் கொண்டிருப்பதால், எந்த அரசியல்வாதியாலும் இச்சமூகத்தின் இன, மத, உரிமைசார் விடயங்களில் ஒன்றையும் அசைக்க முடியாதிருக்கின்றது என்பதை மக்கள் அனுபவ ரீதியாக கண்டுணர்ந்துள்ளார்கள். 

இந்தப் போக்கிலிருந்து விடுபட வேண்டுமென்றால், முதலாவதாக கட்சிக்கு வேட்பாளர்களை, அமைப்பாளர்களை இணைத்துக் கொள்ளும் போது அந்தந்த ஊரில் பணம் படைத்தவர்களை உள்வாங்கும் நடைமுறை நிறுத்தப்பட வேண்டும். அஷ்ர‡ப், அப்படி பணக்காரர்களை கட்சியில் சேர்த்திருந்தால் இன்று கட்சியில் எம்.பி.யாகியுள்ள பல பிரதேச சபை உறுப்பினராக கூட ஆகியிருக்க மாட்டார்கள். எனவே, தலைவர் இரண்டு அல்லது மூன்று பேரை தவிர மற்ற எல்லோரையும் சேர்க்கும் போது அவரிடம் சமூக விடுதலைச் சிந்தனை இருக்கின்றதா என்றே பார்த்தாரே தவிர அவர் கொந்தராத்துக் காரரா? அவர் கட்சிக்கு பணம் தருவாரா என்று பார்க்கவில்லை. அத்துடன் ஹக்கீம் உள்ளடங்கலாக எல்லா முஸ்லிம் கட்சி தலைமைகளும் உண்மையான சமூகத் தொண்டன்களுக்கும் விடுதலை உணர்வாளனுக்கும் இடமளிக்க வேண்டும். மூத்த போராளிகளை மதிக்க வேண்டும்.  எந்தவொரு அரசாங்கத்திலும் இணைந்து கொள்ளும் போது முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி பேச வேண்டும். எத்தனை அமைச்சுக்கள், பிரதியமைச்சுக்கள், தேசியப் பட்டியல் உறுப்புரிமைகள் தருவீர்கள் என்று பண்டமாற்று வியாபார உத்தியுடன் பேசுவதாலும், வேறு சில சந்தோசங்களை ஏற்றுக் கொள்வதாலுமே, முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பில் அரசாங்கங்களால் வழங்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றி பெற்றுக்கொள்ள முடியாமல் போயிருக்கின்றது. எனவே பதவி, பட்டங்களை விட மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

7 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இத்தனைக்கும் இந்த முஸ்லீம் அரசியல் வியாதிகள்.. மன்னிக்கவும்.. அரசியல்வாதிகள் பின்பற்றும் மதத்தில்தான் இவ்வுலக வாழ்வை புறந்தள்ளி மறுவுலக வாழ்க்கைக்காக அவர்களை எளிமையாகவும் பேராசையின்றியும் வாழச்சொல்லியிருக்கின்றது.

    அவர்களும் அதற்காகத்தான் பாடுபட்டு உழைக்கின்றார்கள்.

    ஆம், தங்கள் வாரிசுகளுக்காக கோடிக்கணக்கில் கறுப்புப் பணத்தையும் அரசியல் அதிகாரமிக்க பதவிகளுக்கான வழிகளையும் தேடிவைத்துவிட்டு அதன் பின்பு இவ்வுலக வாழ்வின் மீது பற்றற்வர்களாக வாழத்தான் படாத பாடுபடுகின்றார்கள். பாவம்!

    ReplyDelete
  3. இந்த அரசியல்வாதிகள் JVP TNA போன்ற கட்சிகளிடம் இருந்து கொள்கை அரசியல் கட்கவேண்டும்.அல்லது எல்லோரும் சேர்ந்து (அ தி மு க)அறவே திருத்த முடியாத கழுதைகள்
    என்று கூட்டணிஆரம்பிக்கவேண்டும்.

    ReplyDelete
  4. முஸ்லீம் காங்ரஸ் உர்வானது உம்மதின் நன்மைக்கு தனக்கு அரசியல் விலாசம் கிடைத்த உடன் பணபெடிக்கு மஹிந்தவின் பின்னால் போனவர்கலுக்கு அல்லாஹ்வின் மலக்குகலிடம் ரெகோட் இருக்கு இதை யாராலும் ஹெக் பன்னவோ டிலீட் பன்னவோ முடியாது இது முஸ்லீம் உம்மாவுக்கு செய்த துரோகம் அன்று இவர்கள் கட்ச்சியை நடுக்கடலில் துடுப்பை பிடிங்கினால் எப்படி இருக்கும் எத்தனை பேரின் சாபம்

    ReplyDelete
  5. 'பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள்' என்று ஒரு சான்றோர் வாக்கியம் உண்டு.

    ஒருவகையில் நமது மதநம்பிக்கைகளும் நம்மை மௌட்டீக சிந்தனையில் ஆளாக்கிய நமது மதத்தலைவர்களும் இதற்கு காரணம். அதாவது எல்லாக் குளறுபடிகளையும் செய்துவிட்டு இறைவனிடம் மன்னிப்புக்கேட்டுவிட்டால் அல்லது (ஹஜ் யாத்திரை போன்ற) ஏதாவது சடங்குகளைச் செய்து முடித்துவிட்டால் சகல பாவங்களும் அழிந்துவிடும் என்று திரும்பத் திரும்பக் கூறிப் பழக்கிய கூட்டத்திலிருந்து வந்தவர்கள்தானே நமது அரசியல் வியாதிகளும்.. (மன்னிக்க: அரசியல்வாதிகளும்)

    நாமும் நமது அரசியல் வியாதிகளும் செய்யும் பாவங்களை இறைவன் மன்னித்துவிட்டாலும் அவற்றால் விழைந்த சமூக அநீதிகள் தொடர்ந்து சமூகத்தைப் பாதித்துவாறேதான் இருக்கப்போகின்றன. அவற்றின் தொடர்விளைவுகள் மந்திரங்களால் மாங்காய்களாகி மறைவதில்லை.

    ReplyDelete
  6. Enter your comment... I think jessly may be a communist man

    ReplyDelete
  7. நண்பர் ஆரிப் அலி,

    யானையைத் தொட்டுப்பார்த்த குருடர்களில் ஒருவரா நீங்கள்..? நான் கேட்கின்றேன் பதில் கூறுங்கள்: கம்யுனிசம் என்றால் என்ன..?

    ReplyDelete

Powered by Blogger.