கல்முனைச் செல்வங்களுக்கு, ஹரீஸ் பாராட்டு
(ஹாசிப் யாஸீன்)
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையும் வெவ்வேறு துறைகளில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை விஞ்ஞானப் பிரிவிலும் கலைப் பிரிவிலும் முதலிடத்தினை பெற்றுள்ளது.
கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை கணிதப் பிரிவிலும் இயந்திரவியல் தொழில்நுட்பப் பிரிவிலும் உயிரியல் தொழில்நுட்பப் பிரிவிலும் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினைப் பெற்றுள்ளது.
இதே சமயம் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்கள் விஞ்ஞானப் பிரிவிலும், கணிதப் பிரிவிலுமாக 11 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதையிட்டும் மகிழ்ச்சியடைகின்றேன்.
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை, கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை ஆகிய இரு பாடசாலைகளிலும் நான் கல்வி கற்றவன் என்ற ரீதியில் பெருமையடைகின்றேன்.
நான் பிரதிநிதித்துவப்படுத்தும் கல்முனைத் தொகுதியின் பெயரினை பெருமைப்படுத்திய மாணவச் செல்வங்களுக்கும், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment