தாருஸ்ஸலாம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை..!
உலகின் அபிவிருத்தியடைந்த ஒரு தேசமாக முன்னோக்கிச் செல்வதற்கு ஒட்டுமொத்த இலங்கையர்களும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் கைகோர்த்தல் வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
எந்தவொரு மதத்தையும், எந்தவொரு இனத்தையும் சேர்ந்தோராக இருப்பினும் ஒரே இலங்கை மக்களாக நாம் உலகின் முன் தோன்ற வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
கொழும்பு மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ள கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று (25) முற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நகர்புற பாடசாலைகளைப் போன்றே கிராமப் பாடசாலைகளையும் மேம்படுத்துதல் புதிய அரசின் கொள்கையாகுமெனத் தெரிவித்தார்.
அனைத்து மாணவர்களுக்கும் சம கல்வி வாய்ப்பை வழங்கி சமத்துவம் மற்றும் சகவாழ்வு ஆகியவற்றை கொண்ட ஒரு சமூகத்தை கட்டியெழுப்புதல் அரசின் எதிர்பார்ப்பு ஆகும் என ஜனாதிபதி அவர்கள், மேலும் தெரிவித்தார்.
மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு அதன் நூற்றாண்டு விழா இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி பாடசாலையில் திறமை காட்டிய மாணவர்களுக்கும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கும் தங்கப் பதக்கங்களை ஜனாதிபதி அவர்கள் வழங்கிவைத்தார்.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், அமைச்சர் பைசர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முஸம்மில் ஆகியோரும் மாகாண சபை உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர் குழாம், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2016.01.25
Post a Comment