Header Ads



மீண்டும் முஸ்லிம்களை, குறிவைக்கும் பேரினவாதம்

-M.I.Mubarak-

அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்த-மக்கள் செல்வாக்கை இழந்த அரசியல்வாதிகள் மீண்டும் புத்துயிர் பெறுவதற்குக் கையில் எடுக்கும் ஆயுதம்தான் இனவாதம். பெரும்பான்மை இன மக்களின் வாக்குகளைக் குறி வைத்து சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இந்த இனவாதம் திருப்பிவிடப்படுகின்றது. இதனால் எழுகின்ற கிளர்ச்சிகள்-பேரழிவுகளின் ஊடாக அந்த வங்குரோத்து அரசியல்வாதிகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வருகின்றனர்.

இவர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே இவ்வாறு இனவாதத்தைத் தூண்டுகிறார்கள் என்பதை அறியாத மக்கள் அந்த அரசியல்வாதிகளின் இனவாதத்துக்குள் சிக்கி இன உறவையும் நாட்டின் ஸ்தீரத் தன்மையையும் சீரழிக்கின்றனர்.

இந்த மோசமான இனவாத அரசியல் இலங்கையில் நீண்ட காலமாக இருந்து வருகின்றது.இந்த நாட்டில் இடம் பெற்று வந்த யுத்தத்தை அடிப்படையாக வைத்து தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாதத்தைத் தூண்டி அரசியல்வாதிகள் ஒருபுறம் அரசியல் செய்தனர்.மறுபுறம், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தைத் தூண்டி அரசியல் செய்கின்றனர்.

இலங்கையின் வரலாற்றில் பல இனக் கலவரங்கள் இடம்பெற்றுள்ளன.சுமார் 100 வருடங்களுக்கு முன் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனக்ககலவரம்,2001 இல் இடம்பெற்ற மாவனெல்லை கலவரம் மற்றும் அளுத்கம கலவரம் போன்றவை முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாதிகளால் நிகழ்ந்த்தப்பட்ட இனக் கலவரங்களுள் சிலவாகும்.

அதேபோல்,தமிழ் மக்களுக்கு எதிராகவும் பல இனக் கலவரங்கள் பேரினவாதிகளால் நிகழ்த்தப்பட்டுள்ளன.ஜூலைக் கலவரம் அவற்றுள் முக்கியமானதாகும்.

இவ்வாறு இலங்கையின் வரலாற்று நெடுகிலும் பேரினவாத அரசியல்வாதிகள் தமிழ்-முஸ்லிம் மக்களைப் பே ரினவாதத்துக்குப் பலி கொடுத்தே தங்களது ஆட்சி அதிகாரங்களைத் தக்கவைத்து வந்துள்ளனர்.இந்த நாடு இன்னும் முன்னேறாமல் இருப்பதற்கும் தமிழர்கள் தனி நாடு கோரி நின்றதற்கும் இந்த அரசியல் போக்கே காரணம்.

யுத்தம் முடிந்ததும் இனவாத அரசியலும் முடிவுக்கு வந்துவிடும் என மக்கள் நினைத்தனர். அவர்களின் எதிர்பாப்பு பிழைத்துவிட்டது.தானும் இனவாதத்தைக் கொண்டு அரசியல் பிழைப்பு நடத்துபவன்தான் என்ற உண்மையை மஹிந்த ராஜபக்ஸ இந்த நாட்டுக் காட்டத் தொடங்கினார்.

மஹிந்தவின் யுத்த வெற்றியால் கட்டியெழுப்பப்பட்ட மஹிந்தவின் ஆட்சி ஓரிரு வருடங்களில் ஆட்டங்காணத் தொடங்கியது.யுத்த வெற்றியை விடவும் ஊழல்,மோசடி மற்றும் வாழ்க்கைச் செலவீன அதிகரிப்பு இந்த நாட்டு மக்களுக்குப் பெரிதாகத் தெரிந்தது.இதனால் மஹிந்தவின் மக்கள் செல்வாக்கு மெல்ல மெல்ல சரியத் தொடங்கியது.அதைச் சரி செய்வதற்கு அவர் இனவாதம் என்ற ஆயுதத்தைக் கையில் எடுக்கத் தொடங்கினார்.

முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனா போன்ற பேரினவாத அமைப்புகள் தோற்றம் பெற்றன.முஸ்லிம்களின் வர்த்தகம்,கல்வி மற்றும் மார்க்க விடயங்கள் என அனைத்துக்கும் எதிராக இந்தப் பேரினவாத அமைப்புகள் பிரச்சாரம் செய்தன.

இதன் விளைவாக இறுதியில் அழுத்தகம முஸ்லிம்களுக்கு எதிராக இனக்கலவரம் ஒரு நிகழ்த்தப்பட்டது.முஸ்லிம்களின் சொத்துக்களும் உயிர்களும் அழிக்கப்பட்டன.

இதன் பிறகு ஒன்றிணைந்த தமிழர்களும் முஸ்லிம்களும் மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்தனர்.ஆனால்,மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு மஹிந்த இப்போது போராடி வருகின்றார்.அதற்காக அவர் அதே இனவாதத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார். அவரது தரப்பினர் குறிப்பாக,விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிள்ள போன்றவர்கள் தொடர்ச்சியாக இனவாதக் கருத்துக்களைக் கக்கி வருகின்றனர்.

புதிய அரசை சிறுபான்மை இனங்களுக்கு மாத்திரம் சொந்தமான அரசாகவும் சிங்கள மக்களுக்கு எதிரான அரசாகவும் காண்பித்து சிங்கள மக்களிடையே சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இனவாதத்தை விதைத்து வருகின்றனர்.அவர்களுடன் பொது பல சேனாவும் கை கோத்துள்ளது.

இந்த இனவாதப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக ''சிங்கவர்களின் இரத்தம்''என்ற பெயரில் நாடு பூராகவும் ஸ்டிக்கர் பிரசாரம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதிகமான முஸ்லிம்களின் வீட்டுக் கதவுகளிலும்,சிங்களவர்களின் ஒட்டோக்களிலும் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.இந்த ஸ்டிக்கர்கள் பொறிக்கப்பட்ட டி-சேர்ட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதனால் முஸ்லிம்கள் மீண்டும் அச்சத்தை எதிர்நோக்கியுள்ளனர்.மீண்டும் ஓர் இனக் கலவரம் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகின்றனர்.இந்த நல்லாட்சியிலும் இதே நிலைதானா?இதற்காகவா இந்த ஆட்சியை உருவாக்கினோம் என்று கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இந்த இனவாதப் பிரசாரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் மஹிந்த தரப்பினர் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.அவரது கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை.

மஹிந்ததரப்பினருக்குத்தான் இந்த இனவாதம் தேவையாக இருக்கின்றது. இவர்கள் அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்திருப்பவர்கள்.கடந்த ஆட்சியிலும் இவர்கள் இந்த இனவாதத்தைத் தூண்டினர்.இவர்களைத் தவிர வேறு எவருக்கும் இப்போது இனவாதம் தேவை இல்லை.

இது தொடர்பில் இந்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதை இப்போதே முளை யில் கிள்ளி எறிய வேண்டும்.

மஹிந்தவின் ஆட்சியில் பொது பல சேனா முஸ்லிம்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்யத் தொடங்கியபோது அதைப் பெரிதுபடுத்த வேண்டாம்.அவர்கள் தானாக அடங்கிவிடுவார்கள் என சிலர் கூறினார்.ஆனால்,அதை முளையில் கிள்ளி எறியாததால் அவர்களின் பிரசாரம் மெல்ல மெல்ல வளர்ந்து இறுதியில் அழுத்கமவில் பெரும் கலவரமாக வெடித்தது.

இந்த அனுபவத்தைக் கவனத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிங்கள இரத்தம் என்ற இந்த பிரசாரத்தின் சூத்திரதாரிகள் யார் என்று கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.இது தொடர்பில் முறைப்பாடு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளதை கருத்தில் கொண்டு முஸ்லிம்கள் செயற்பட வேண்டும்.

மஹிந்த ஆட்சியில் இருந்ததைப் போல் இந்த ஆட்சியிலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மௌனமாகத்தான் இருக்கப் போகிறார்களா என்ற என்ற கேள்விகளை இப்போது முஸ்லிம்கள் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.தமிழ்-சிங்கள அரசியல்வாதிகள்தான் இந்த அரசிலும் முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுக்கப் போகிறார்களா என்ற கேள்வியும் எழுகின்றது.

மஹிந்தவின் ஆட்சியில் முஸ்லிம் அரசியல்வாதிகள் மஹிந்தவுடன் ஒட்டிக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான அத்தனை இனாவதச் செயற்பாடுகளையும் கைகட்டிப் பார்த்துக் கொண்டு நின்றனர்.இந்த ஆட்சியில் எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

No comments

Powered by Blogger.