அரசாங்கத்தின் மர்மமான செயற்பாடுகள் நாட்டினதும், மக்களினதும் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன
அரசாங்கத்தின் வெளிப்படையற்ற மர்மமான செயற்பாடுகள் நாட்டினதும், மக்களினதும் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன. எனவே, மாற்று சக்தி ஒன்றின் உதயத்திற்கு இதுவே சிறந்த தருணம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆதரவான கூட்டு எதிரணி தெரிவித்துள் ளது.
மேற்குலக நாடுகளின் ஊடுருவல்கள் காலனித்துவ காலத்தில் கூட இந்தளவு காணப்படவில்லை. தாய் நாட்டை ஆபத்தில் தள்ளிவிட்ட அரசாங்கத்தின் ஜெனீவா உறுதிமொழிகளே இன்று பின்தொடர்கின்றன. ஆகவே, பொது மக்களுடன் இணைந்து நாட்டை ஆபத்தான சூழலில் இருந்து மீட்க செயற்பட வேண்டியுள்ளது என்றும் எதிரணி குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறுகையில்,நல்லாட்சி அரசாங்கம் மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து செயற்படுவதாக தெரிவியவில்லை. அண்மைக்காலமாக அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் பாரிய சந்தேகத்திற்கு இடமானதாகவே காணப்படுகின்றது. நாட்டின் மூலச்சட்டத்தில் இல்லாத ஒரு விடயத்தை எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய அரசியல் சாசன உருவாக்கத்திற்கு பயன்படுத்த இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. அது மாத்திரம் அல்ல , சர்வதேசத்தின் உள்நோக்கங்கள் இலங்கையில் நிறைவேறும் சாத்தியம் காணப்படுகின்றது.
இதனை நாம் எதிர் கொள்ள வேண்டும். நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் நாம் உள்ளோம். புதிய அரசியல் கட்சி ஒன்றிக்கான இறுதி தீர்மானம் இன்னும் எடுக்கவில்லை. மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் புதிய கட்சி என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால், அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் நாங்கள் எடுக்க வில்லை . இருப்பினும் மாற்று சக்தி ஒன்றின் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கான கலந்துரையாடல்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து வருகின்றோம் என கூறினார்.
Post a Comment