Header Ads



“சிங்கலே + பொதுபலசேனா முன்வைக்கிற பிரசாரங்களுக்கு பதிலளிப்பதை விடவும்...!

இலங்கை பலஸ்தீன் நட்புறவுச் சங்கத் தலைவரும் ஐ.தே.க மத்திய குழு உறுப்பினருமாகிய இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் சமகால விவகாரங்கள் தொடர்பில் வழங்கிய செவ்வி

* நீங்கள் அரசியலை விட்டு ஒதுங்கி யிருப்பதற்கான காரணம் என்ன?

எனது தந்தை 1947 முதலாவது தேர்தலில் போட்டியிட்டார். நான் இறுதியாக 2002 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டேன். எனவே, 50 வருட காலமாக பேருவளை உள்ளிட்ட களுத்துறை மாவட்ட மக்கள் தந்தைக்கும் மகனுக்கும் வாக்களித்துள்ளார்கள். தொடர்ந்தும் இவ்வாறு வாக்கு கேட்கும் போது புதிதாக கற்ற சமுதாயமும் அரசியல் தொடர்பில் ஆர்வமுள்ள இளைஞர்களும் எப்பொழுதும் ஒரு குடும்பத்திற்கு மாத்திரம் வாக்களிக்க வேண்டுமா என நினைப்பார்கள். அது என்னுடைய மனச்சாட்சியை உறுத்தியதொரு விடயம். அதனால், நான் கூறினேன் இம்முறை (2002) தேர்தலில் போட்டியிடுவது இறுதிச் சந்தர்ப்பம். தெரிவுசெய்யப்பட்டால் நான் அமைச்சரவைக்குச் செல்வேன். அங்கு இருப்பது ஒரு தடவைதான் என்று. எனது வாக்குறுதியை நான் நிறைவேற்றியுள்ளேன்.

* அவ்வாறென்றால் அரசியலில் நுழையும் எதிர்பார்ப்பொன்றில்லையா?

நான் அரசியலில் உள்ளேன். தற்போது நான் ஐ.தே.க மத்திய குழு உறுப்பினராக அங்கத்துவம் வகிக்கின்றேன். பாராளுமன்றத் தேர்தலொன்றில் போட்டியிடும் எண்ணம் இல்லை. ஆனால், நான் அரசியல் விவகாரம் குறித்து விழிப்பாகவுள்ளேன். எமக்கு செய்ய முடியுமானவற்றை சம்பந்தப்பட்டவர்களைத் தூண்டி நிறைவேற்றிக் கொண்டுள்ளோம். எனது சிந்தனையை சமூகமயப்படுத்துவதற்காக பல்வேறு புத்தகங்களை எழுதுகிறேன். பொது மேடைகளில் உரையாற்றுகிறேன். தேசிய ஐக்கியத்திற்கான பாக்கிர் மாக்கார் மத்திய நிலையத்திலும் பணியாற்றுகின்றேன். இந்நாட்டிலுள்ள பலஸ்தீன் நட்புறவுச் சங்கத்தின் தலைவராகவும் செயற்படுகிறேன். என்னால் முடியுமானவற்றை சமூகத்திற்காகச் செய்கிறேன். தேர்தலில் போட்டியிடாதது மாத்திரமே குறையாகவுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஒரு வருடம் பூர்த்தியாகிறது.

* ஒரு வருட காலத்திற்குள் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த வேலைத் திட்டங்கள் தொடர்பில் உங்களது கருத்து என்ன? எதிர்வரும் காலத்தில் நல்லாட்சி அரசின் செயற்பாடுகள் எவ்வகையில் அமையுமென எதிர்பார்க்கின்றீர்கள்? இன்னும் நிறைய வேலைத்திட்டங்கள் செய்யப்படவுள்ளன. பாரியதொரு அழிவிலிருந்து நாட்டைப்பாதுகாத்தோம். இலங் கையென்றால் என்ன? இலங்கையன் என்றால் யார்? இலங்கையன் என்றால் அங்கு பௌத்தம் இருக்கும். இந்து இருக்கும். இஸ்லாம் இருக்கும். கிறிஸ்தவம் இருக்கும். இப்பல்வகைமையின் ஒன்றிணைவுதான் இலங்கையன் என்பதனால் அடையாளப்படுத்தப்படுகின்றது. இப்பல்லினத் தன்மையை சுமையாக வைத்து ஒருவருக்கொருவர் முட்டிமோதிக் கொண்டு அரசியல் இலாபம் பெற்றதொரு அழிவுகரணமான யுகமொன்றை நாம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். தற்பொழுது நல்லாட்சிக்கான போராட்டமொன்று வெற்றிகொள்ளப்பட்டுள்ளது. நல்லாட்சி குறித்து, பேசிப் போராடுவது இலகுவானது. ஆனால், அதன் பிரகாரம் வாழ்வதுதான் கடினமானது. தற்பொழுது அச்சவாலுக்கு இவ்வரசாங்கம் முகம் கொடுத்துள்ளது. அரசியல் மேடைகளில் உரையாடிய நல்லாட்சி கதையாடல்களை அமுல்படுத்த வேண்டியுள்ளது. அரசாங்கம் இச்சவாலை சிறந்த முறையில் எதிர்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கின்றேன். பிரார்த்திக்கின்றேன்.

* கடந்த ராஜபக்ச ஆட்சிக் காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இனவாதச் செயற்பாடுகள் நல்லாட்சி அரசு நிலவும் காலப்பகுதிக்குள்ளும் அரங்கேறி வருகின்றது. இதற்கான காரணம் என்ன?

பல காரணங்கள் உள்ளன. ஒரு சிலர் அரசியல் இலாபங்களுக்காக வேண்டி இதனை புரிகின்றார்கள். இன்னும் சிலர் பொருளாதார நோக்கங்களுக்காக இனவாதத்தைத் தூண்டுகிறார்கள். சர்வதேச ரீதியில் ஆயுத உற்பத்தி செய்பவர்களுக்கு போராட்டங்கள் அவசியப்படுகின்றன. இவர்களுடைய நிகழ்ச்சி நிரல்களும் முன்னெடுக்கப்படுகின்றன. அதுபோல உலகில் செல்வம் கொழிக்கும் நாடுகளின் சொத்துகள் சூறையாடப்படும் வேலைத்திட்டங்களும் அமுல்படுத்தப்படுகின்றன. உதாரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை லங்காதீப பத்திரிகையில் மொஹான் சமரநாயக்க, இவர் சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் கூடுதல் புலமையுள்ளவர். உலகிலுள்ள பயங்கரவாத அமைப்புகள் தொடர்பில் வழங்கிய நேர்காணலில் அவர் பின்வருமாறு கூறியிருந்தார். “எனது கருத்தின்படி இப்போராளிகளினுடைய போராட்டங்களை நிறுத்த வேண்டுமென்றால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேற்கு நாடுகள் புரியும் அழுத்தங்கள் நிறுத்தப்படல் வேண்டும். அங்கு சொத்துகள் சூறையாடப்படுவது நிறுத்தப்படவேண்டும். மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள மக்களுக்கு தங்களுடைய விருப்பப்படி ஆட்சியாளர்களை தெரிவு செய்யக்கூடிய உரிமை, வாழக்கூடிய உரிமை வழங்கப்படல் வேண்டும். அவ்வாறு செய்யாதவரையில் போராட்ட அமைப்புக்களை தோற்கடிப்பதற்கு பல காலங்கள் எடுக்கும்.” இதுதான் யதார்த்தம். இலங்கையின் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வேண்டி சிங்களம் என்றும் தமிழ் என்றும் பிரித்து சண்டையை மூட்டி விடுவது இலேசானது என நினைப்பவர் கள் அவ்வழிமுறையில் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். வர்த்தக ரீதியாக போட்டியிட்டு சம வாய்ப்புக்களை பெற முடியாது என நினைப்பவர்கள் இன, மத துவேசத்தை விதைத்து இலாபம் பெறுவதற்காய் பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள். உலக நாடுகளை சூறையாட முனைபவர்கள் ஆயுத உற்பத்தியை அதிகரிப்பதற்கு அவர்களுக்கு போராட்டம் அவசியம். அதற்காக இனவாதத்தை தூண்டுகிறார்கள். இவ்வனைத்தும் இனவாதத்தை உண்டாக்கும் காரணிகள்.

* இலங்கை பலஸ்தீன் நற்புறவுச் சங்கத்தின் செயற்பாடுகள் எவ்வகையில் உள்ளன?

இலங்கைக்கும் பலஸ்தீனுக்குமிடையில் நீண்ட காலம் தொட்டு நற்புறவு இருந்து வந்தது. நாட்டிலுள்ள சகல அரசியல் கட்சிகளும் பலஸ்தீன விவகாரங்களிலும் தென்ஆபிரிக்க பிரச்சினைகளிலும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன. அதில் வேறுபாடுகள் இல்லை. தென் ஆபிரிக்கா சுதந்திரத்தைப் பெற்றது. பலஸ்தீன் மாத்திரம் தான் இன்னும் சுதந்திரம் பெறவில்லை. நான் நினைக்கிறேன். உலகில் இறுதியாக இன்றுவரைக்கும் காலனித்துவத்திற்கு உட்பட்டுள்ள நாடு பலஸ்தீன் என்று. பலஸ்தீனை அடிமைப்படுத்தியிருப்பவர்கள் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் தங்களுடைய ஏஜென்டுகளின் கொத்தடிமைகளை சிறுசிறு சலுகைகளைக்கொடுத்து உருவாக்க முயற்சிக்கிறார்கள். அத்தகைய சிறிய குரல்கள் காலத்திற்கு காலம் மேலெழுகின்றன. பெரும்பான்யினர்; மனித உரிமை, ஜனநாயகம், சுதந்திரம் போன்ற வற்றுக்காக வேண்டி குரல் கொடுத்துள்ளனர். இலங்கையிலுள்ள பெரும்பான்மையினரின் ஒத்துழைப்பு எப்பொழுதும் பலஸ்தீனுக்கு இருந்தது.

* நாட்டில் நல்லிணக்கத்தை எவ்வாறு ஏற்படுத்தலாம்?

எமது நாட்டிலுள்ள சகல அமைச்சுக்களும் இப்பொறுப்பை ஏற்க வேண்டும். கல்வி அமைச்சுக்கு எமது குழந்தைகளின் சிந்தனை உருவாக்கத்தை சீர்செய்ய முடியும். ஊடகங்கள் வாயிலாக நல்லி ணக்கத்தை ஏற்படுத்தலாம். திரைப்பட துறைக்கூடாகவும் பாடல்களுக்கூடாகவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடிகின்றது. ‘லொவே செமா எக மினிஸ் பவுளக்ஸே’ என்று ஒரு சிங்களப் பாடல் உள்ளது. அதன் பொருள் உலகில் எல்லோரும் ஒரு குடும்பத்தை போன்றவர்கள் என்பதாகும். ஒரு எல்லைக்குள் நாம் சுருங்கி விடக்கூடாது. பரந்துபட்டதாக சிந்திக்க வேண்டும். எல்லா மனிதர்களையும் ஒரே குடும்பமாகக் கருதியே சகல மதங்களும் உலகில் உதித்தன. மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோர் இன்று ஒரு சில அமைப்புக்களை உருவாக்கிக் கொண்டு மக்கள் மத்தியில் சச்சரவுகளை ஏற்படுத்தி வருகின்றனர். மனிதர்கள் எல்லோரையும் ஒரே குடும்பமாகக் கருதி பணியாற்ற வேண்டும். இவ்வெல்லா மதங்களினதும் ஆசிர்வாதம் இலங்கை மண்ணுக்குக் கிடைத்துள்ளது. அதிலுள்ள நல்ல பக்கத்தை நாம் சிந்திக்க வேண்டும். அவற்றின் உள் ளடக்கத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதுவல்லாமல் தங்களுடைய நலன்களுக்காக வேண்டி மேலோட்டமாக எதையும் பார்க்கக் கூடாது. அதுவே அழிவின் ஆணிவேர்.

* இலங்கை முஸ்லிம் சமுகத்திற்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

நாம் சிங்களம், முஸ்லிம், தமிழ், கிறிஸ்தவம் என்றில்லாமல் ஜனநாயகம் எங்குள்ளது மனித உரிமைகள் எங்குள்ளது சம உரிமைகள் எங்கு காணப்படுகின்றன என்பன பற்றியே சிந்திக்க வேண்டும். நாம் எமக்கு பிரச்சினை யொன்று ஏற்படும் வேளையில் மாத்திரம் போராடக்கூடாது ஜனநாயக உரிமையொன்று மறுக்கப்படுகின்ற பொழுது மக்களுடைய உரிமைகள் இல்லாமல் போகின்றபொழுது ஏதாவது ஒரு அநீதி இடம்பெறுமாக இருந்தால், அங்கு நாம் எமது பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டும். பத்திரிகையில் வரும் செய்திகளை நுனிப்புல் மேய்ந்து, எமக்கு முடிவுகளுக்கு வரமுடியாது. அத்திரைகளைத் தாண்டி உள்ளே சென்று ஆழமாக சிந்திக்க வேண்டும். அப்பாவி உயிர்கள் கொல்லப்படுவது இனங்களுக்கிடையில் முரண்பட்டுக் கொள்வதென்பது பெரும்பான்மை மக்களுக்கு அவசியமான விடயமொன்றல்ல.

சிறியதொரு கூட்டத்தின் தேவைப்பாடுகளே இனவாதமாக அரங்கேற்றப்படுகின்றது. இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நல்லாட்சி அரசாங்கம் வெற்றி பெற்ற போது மக்கள் ஒரு வரத்தை கொடுத்தார்கள். அது மக்களுக்கு பதிலளிக்க வேண்டுமென்பது; சட்டத்தின் ஆட்சி எல்லோருக்கும் சமமான முறையில் அமைய வேண்டுமென்பது; சகல இன மக்களும் சமமான முறையில் கௌரமாக வாழக்கூடிய சூழல் வேண்டுமென்பது; இவ்வேண்டுகோள்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டியுள்ளது. சமாதானமாக வாழக் கூடிய சூழலொன்றை ஏற்படுத்த வேண்டியுள்ளது. “சிங்க லே” பிரச்சாரத்திற்கோ அல்லது பொதுபலசேனா அவ்வப்போது முன்வைக்கின்ற பிரசாரங்களுக்கோ பதிலளிப்பதை விடவும் புத்திசுயாதீனமான முறையில் நாம் சிந்தித்து எமது குழந்தைகளுக்கு சுதந்திரமாக வாழ முடியுமான சமூகமொன்றை உருவாக்குவதற்கு நல்லாட்சி அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

சந்திப்பு : ஹெட்டி ரம்ஸி, இஸ்பஹான்,  மில்பர், அனஸ் அப்பாஸ்

2 comments:

Powered by Blogger.