வை.எல்.எஸ். ஹமீதின் விளக்கம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு சட்டவிரோதமானதென்றும் மற்றும் நியமனங்கள் என்பவற்றை ஆட்சேபித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்படவில்லை என்றும் அம்மனு எதிர்வரும் மார்ச் மாதம் 23 திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என மனுதாரர் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு நேற்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வழக்கு விசாரணைகளுக்காக எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அத்துடன், கட்சியால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் புதிய செயலாளர் தேர்தல்கள் திணைக்களத்தினால் இன்னும் ஏற்றுக்கொள்ளபடவில்லை என வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 2005 ஆம் ஆண்டு சட்டரீதியாக என்னால் ஆரம்பிக்கப்பட்டது. இக்கட்சியில் 2011 ஆம் ஆண்டிலேயே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இணைந்து தலைவரானார்.
இந்நிலையில் கடந்த 16 ஆம் திகதி பொய்யாக பேராளர் மாநாடு நடத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி பொங்கல் விடுமுறையாகும். அடுத்து வரும் இரு வார இறுதி நாட்களும் விடுமுறை தினங்களே. அதனால் அம் மாநாட்டிற்கான அறிவித்தலானது 14 ஆம் திகதியே விளம்பரங்கள் மூலம் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டன. இது தடை உத்தரவை பெறாமல் இருப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட கபடத்தனமான செயற்பாடொன்றாகும்.
ஒரு பேராளர் மாநாட்டிற்கு 900 பேரை ஒன்று சேர்ப்பது ஆச்சரியமான விடயமல்ல. அவ்வாறு வருகின்றவர்கள் அனைவரும் பேராளர்களாகிவிட முடியாது. பேராளர்களை நியமிப்பதற்கு விதிமுறைகள் இருக்கின்றன. இப் பேராளர் மாநாடு கூட்டப்பட்டிருப்பது சட்டத்திற்கு விரோதமானதாகும். இவற்றை நான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறேன்.
அதனடிப்படையில் நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட மனு எதிர்வரும் மார்ச் மாதம் 23 மேலதிக விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கு தொடர்பிலான அறிவித்தல் சகல பிரதிவாதிகளுக்கும் அனுப்பப் பட்டுள்ளது.
இதனிடையே, சதியை அரசியலாக மேற்கொள்ளும் சிலர் புதிய செயலாளர் தொடர்ந்தும் இயங்க முடியும் என அறிவித்துள்ளனர். எனினும் புதிய செயலாளரை தேர்தல்கள் ஆணையாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் இது குறித்து நீதிபதி எந்த உத்தரவையும் வழங்கவில்லை என்றார்.
What a big lie was expressed on behalf of Rizad's site yesterday? Their politics also is like this. They are cheating our community via social medias
ReplyDelete