பௌத்த தேரர்களின் செயற்பாடுகள், தொடர்பான சட்டமூலம் அவசியம்
கடந்த அரசாங்கம் பௌத்த பிக்குகளின் நலனை கருத்திற்கொள்ளவில்லை, பௌத்த தேரர்களின் செயற்பாடுகள் தொடர்பான சட்டமூலம் அவசியம் என திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது, இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த அரசாங்கம் அரசியல் நோக்கங்களுக்காக பௌத்த சாசனத்தை பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை, இதனால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் பிக்கு கலந்துரையாடல் புதிய சட்டமொன்றை புதிய அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது.
கடந்த அரசாங்கத்தினால் உதாசீனம் செய்யப்பட்டிருந்த பௌத்த சாசனத்திற்கு புதிய அரசாங்கம் புத்துயிர் அளிக்கும் வகையில் செற்படுகின்றது.
பௌத்த பிக்குகளின் ஒழுக்க விதிகள் பற்றி பேசும் முதலாவது அரசாங்கம் இதுவல்ல, வரலாற்றுக்காலம் முதல் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் புதிய உத்தேச சட்டமானது நீண்ட காலத் தேவையாக காணப்பட்டுள்ளது. பௌத்த சாசனத்தை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை கடந்த அரசாங்கம் எடுக்கத் தவறியுள்ளது.
பௌத்த சாசனத்திற்கு விரோதமான வகையில் ஒழுக்கத்திற்கு புறம்பான வகையில் செயற்படும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என பௌத்த பிக்குகளும் சாதாரண பொதுமக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் தொடர்ந்தும் மௌனம் காக்காது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது எமது கடமை என்பதனால் ஒழுக்க விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டுமென நாம் கோரியிருந்தோம்”.
என மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
Post a Comment