Header Ads



பாகிஸ்தான் பல்கலைக்கழக மாணவர்களை காப்பாற்ற, உயிரை விட்ட ஆசிரியர்..!

பாகிஸ்தானில் பெஷாவர் அருகே உள்ள சார்சத்தா நகரத்தில் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு நேற்று 4 தலிபான் தீவிரவாதிகள் புகுந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாகி சூடு நடத்தினார்கள்.

இதில், 21 பேர் உயிர் இழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். பாதுகாப்பு படையினர் 4 தீவிரவாதிகளையும் சுட்டு கொன்றனர்.

இந்த தாக்குதலின்போது ஆசிரியர் ஒருவர் வீரமாக போராடி மாணவர்களை காப்பாற்றியதுடன் தனது உயிரையும் தியாகம் செய்துள்ளார். அந்த ஆசிரியரின் பெயர் செய்யது அமீது உசேன். இவர் வேதியியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். பல்கலைக்கழக வளாகத்துக்குள் தீவிரவாதிகள் நுழைந்ததை அறிந்ததும் தனது வகுப்பறையில் உள்ள மாணவர்களை யாரும் வெளியே வர வேண்டாம் கீழே பதுங்கி இருங்கள் என்று உத்தரவிட்டார்.

பின்னர் கைத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வெளியே வந்த அவர் தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். பதிலுக்கு தீவிரவாதிகள் அவர் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் செய்யது அமீது உசேன் குண்டு பாய்ந்து உயிர் இழந்தார். தாக்குதல் நடத்தப்பட்ட பல்கலைக்கழக வளாகம் முழுவதும் தற்போது ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில் 8–ல் இருந்து 10 தீவிரவாதிகள் வரை அந்த பகுதிக்குள் நுழைந்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது. எனவே, பல்கலைக்கழகத்திலும் மற்றும் சுற்றி உள்ள பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இந்த தாக்குதலுக்கு தெக்ரீத் தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்று உள்ளனர். அவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து தீவிரவாதிகளை இந்த தாக்குதலுக்காக அனுப்பியதும் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை மக்கள் தொடர்பு டைரக்டர் ஜெனரல் அசிம் பச்வா கூறியதாவது:–

தாக்குதல் நடத்த போது தீவிரவாதிகள் செல்போனை பயன்படுத்தி பேசினார்கள். அதன் தகவல்களை இடைமறித்து கேட்ட போது, அந்த போன் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தது தெரிய வந்தது. தீவிரவாதிகள் 4 பேரையும் அங்கிருந்து இயக்கி இருக்கிறார்கள். தீவிரவாதிகள் பயன்படுத்திய 2 செல்போன்களை கைப்பற்றி உள்ளோம். அவற்றை ஆய்வு செய்து வருகிறோம். இந்த தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தாக்குதல் நடத்திய 4 பேரில் 2 பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.