முஸ்லிம் வீடுகளில் எழுதப்பட்ட 'சிங்ஹ லே' சொற்களை அழிக்க பௌத்த இளைஞர் முன்வருகை
- எம்.ஐ.அப்துல் நஸார் -
நுகேகொட பகுதியில் சில முஸ்லிம் வீடுகளில் நுழைவாயில்கள் மற்றும் சுவற்று மதில்களில் எழுதப்பட்டிருந்த 'சிங்ஹ லே' சொற்களை அழித்து மீள நிறப்பூசுவதற்கு பெரும்பான்மை இன இளைஞர் ஒருவர் முன்வந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நுகேகொட, பழைய கொட்டாவ வீதி, இம்புல்கொட மற்றும் அதனை அண்டிய பகுதியிலுள்ள சில வீடுகளின் மதில்கள் மற்றும் நுழைவாயில்களில் சிங்ஹ லே என்கிற வாசகம் எழுதப்பட்டிருந்தமை தொடர்பில் பீதியடைந்த முஸ்லிம்கள் மிரிஹான பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
இதனிடையே, இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பதிவிடப்பட்டதைத் தொடர்ந்து 'சிங்ஹ லே' என எழுதப்பட்ட சம்பவம் இணையத்தள பாவனையாளர்களால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயற்பாடு மீண்டும் இலங்கையில் இனவாதத்தை தோற்றுவிப்பதற்கு வழியமைக்கும் என்ற கருத்தினை பெரும்பாலானவர்கள் தெரிவித்திருந்தனர்.
இவர்களுள் ஒரு இளைஞர் தனது முகநூல் பக்கத்தில் முஸ்லிம் மக்களின் வீடுகளுக்கு செல்லும் வாயில் கதவுகளில் எழுதப்பட்டிருக்கும் 'சிங்ஹ லே' சொற்களை அழித்து மீள நிறபூச்சி பூசித் தருவதற்கு தன்னார்வத்துடன் முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment