குறைந்த விலைகளில் நெல்லை, விற்பனை செய்ய வேண்டாம் - றிசாத்
அம்பாறை மாவட்ட நெல் அறுவடையாளர்களிடம் நியாயமான விலையில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு பிரதமரிடம் பேசி, அது தொடர்பில் தாம் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் றிசாத் தெரிவித்துள்ளார். அத்துடன் அம்பாறை உட்பட நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்வதற்கென 24 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் அறிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்திலே நெல் அறுவடை ஆரம்பித்துள்ளதானால், தனி நபர்கள், விவசாயிகளிடமிருந்து நெல்லை மிகவும் குறைந்த விலையில் கொள்வனவு செய்வதாகவும், இதனால் அந்த மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி இருப்பதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதமரிடத்தில் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அமைச்சர் ஹரிசன் ஆகியோரிடத்திலும் இது தொடர்பில் அமைச்சர் எடுத்துரைத்துள்ளார்.
இதற்கிணங்க பிரதமர், அரசாங்க அதிபர் ஊடாக இந்த நெற் கொள்வனவை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அதற்குத் தேவையான பணத்தை நெற் சந்தைப்படுத்தல் திணைக்களத்துக்கு உடனடியாக வழங்குமாறும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், தனது மாவட்டத்தில் 35௦௦௦ டொன் நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கான களஞ்சிய வசதி உள்ளதாக, தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் பிரதமரிடத்தில் சுட்டிக்காட்டினார். இதன் பிரகாரம் களஞ்சியசாலையில் ஏதேனும் குறைபாடுகள் இருபின், அவற்றை சீரமைப்பதற்குரிய பணத்தை உடன் வழங்குமாறும், அதேபோல் நெற் கொள்வனவிற்கான பணத்தை வழங்குவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர், நிதியமைச்சரைப் பணித்துள்ளார்.
எனவே, குறைந்த விலைகளில் நெல்லை விற்பனை செய்ய வேண்டாம் என நெல் அறுவடையாளர்களிடத்தில், அமச்சர் றிசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோல், பொலன்னறுவை, அனுராதபுரம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் நெல் அறுவடை ஆரம்பித்திருப்பதினால், அந்த மாவட்டங்களிலும் குறைந்த விலையிலேயே நெல்லை வாங்குவதாக, அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு கிடைக்கப்பெற்ற புகார்களையடுத்து, இது குறித்து கவனம் செலுத்துமாறும் பிரதமரிடத்தில் அமைச்சர் றிசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க, மொத்தம் 24 பில்லியன் ரூபாவை நிதியமைச்சர் இதற்காக ஒதுக்கியுள்ளதோடு, வர்த்தக கைத்தொழில் அமைச்சுக்குக் கீழ் உள்ள களஞ்சியசாலைகளையும், நெற் சந்தைப்படுத்தல் சபை, உணவுத் திணைக்களம், கூட்டுறவுத் திணைக்களம் மற்றும் அரசாங்க அதிபரின் நிர்வாகத்துக்கு கீழ் உள்ள களஞ்சியசாலைகளையும், இந்த நெல்லை சேகரிப்பதற்குப் பயன்படுத்துமாறும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே வாங்கி இருப்பிலுள்ள 2,60000 மெட்ரிக் டொன் நெல்லை அரிசியாக்கி, சதொச மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் ஆகியவற்றின் ஊடாக விற்பனை செய்யுமாறும், உலக உணவுத் திட்டத்துக்கு வழங்குமாறும் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனவே அம்பாறை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு உட்பட இன்னும் எங்கெல்லாம் மக்கள் நெல் அறுவடை செய்திருக்கிறார்களோ, அவர்கள் குறைந்த விலையில் நெல்லை விற்காமல், அரசாங்க அதிபர்கள் ஊடாக நல்ல விலைக்கு நெல்லை விற்பதற்கு ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் வேண்டிக்கொண்டார். அத்துடன் இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் இது குறித்து முறைப்பாடு செய்யுமாறும், அதற்குரிய நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும் அமைச்சர் றிசாத் தெரிவித்தார்.
After that, the price of rice will increase. All the poorest families will suffer. He can only eat well and do the business and earn money.
ReplyDelete