Header Ads



துருக்கியில் மீண்டும் குண்டுவெடிப்பு


தென்கிழக்கு துருக்கியில் காவல்துறை தலைமையகத்தில் கார் குண்டு ஒன்று வெடித்ததில் ஐந்து பேர் பலியாகினர். 39 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஒரு குழந்தையும் பெண்ணும்கூட இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். தியார்பகீர் மாகாணத்தில் உள்ள சினார் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான நிவாரணப் பணிகள் தற்போது நடந்துவருகின்றன.

பிகேகே எனப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த தீவிரவாதிகளே இந்த குண்டுவெடிப்புக்குக் காரணம் என அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுவரை எந்தக் குழுவும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.

சினார் மாவட்டத்தின் காவல்துறை வளாகத்தின் நுழைவாயிலில் இந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பின் காரணமாக அருகில் உள்ள குடியிருப்புக் கட்டடங்களும் சேதமடைந்தன. அதில்தான், ஒரு குழந்தையும் பெண்ணும் கொல்லப்பட்டனர்.

அருகில் உள்ள மார்தின் மாகாணத்தின் மித்யாத் நகரத்தில் மற்றுமொரு காவல்நிலையம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது என துருக்கிய ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தகவல் ஏதும் இல்லை.

கடந்த சில மாதங்களாகவே தியார்பகிர் மாகாணத்தில் பிகேகே பிரிவினைவாதிகளுக்கும் துருக்கிய ராணுவத்திற்கும் இடையில் மோதல்கள் நடந்துவருகின்றன.

கடந்த ஆண்டில், பாதுகாப்புக் காரணங்களுக்காக தியார்பகிர் நகரத்திலும் தென்கிழக்கு துருக்கியின் வேறு சில பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ராணுவத்திற்கும் பிகேகேவுக்கும் இடையில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஜூலையில் முறிந்தது. அப்போதிலிருந்து பிகேகேயினர் உள்ள வடக்கு ஈராக் பகுதியை துருக்கிய ஜெட் விமானங்கள் தாக்கிவருகின்றன. தரை வழியாகவும் ராணுவம் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.

ஈராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் குழுவினர் மீது தாக்குதல் நடத்திவரும் அமெரிக்கக் கூட்டுப் படையில் துருக்கியும் இருக்கிறது.

ஆனால், துருக்கி பெரும்பாலும் பிகேகே மீதுதான் தாக்குதல் நடத்துவதாக குர்துகள் கூறிவருகின்றனர். ஈராக்கிலும் சிரியாவிலும் ஐஎஸ் மீது குர்துகளும் தாக்குதல் நடத்திவருகின்றனர்.

No comments

Powered by Blogger.