Header Ads



சிங்கள மக்கள் இனவாதிகள் அல்லர், என்பதை நான் நன்கறிவேன் - சந்திரிக்கா

ஒற்றையாட்சியோ வேறெதும் ஆட்சியோ பெயர் முக்கியமல்ல   மாறாக தமிழ் முஸ்லிம் சிங்களம் ஆகிய அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதான போதுமானதும் நடைமுறையில் செயற்படுத்தக்கூடியதுமான தீர்வைக்கொடுப்பதே முக்கியமானதாகும். மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையில் வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளைக் களைவதாக . தமது தீர்வு அமைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவிக்கின்றார்.

சுடர் ஒளிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார். அவரது முழுமையான நேர்காணல் பின்வருமாறு:

உங்களிடம் முற்று முழுதான அதிகாரம் இருந்த காலப்பகுதிக்கும் தற்போதைய காலப்பகுதிக்கும் ; எத்தகைய வேறுபாட்டைக் காண்கின்றீர்கள்?

ஐக்கிய தேசிக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து பணியாற்றுவதே தற்போதைய நிலையில் பெரும் வித்தியாசமாகக் காணப்படுகின்றது. சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இரு பிரதான கட்சிகளும் இணைந்து பணியாற்றுவது இலங்கையின் வரலாற்றிலேயே முதற்தடவையாகும். நான் இதனைச் செய்ய முற்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ச்சியாக எதிர்ப்பைக் காட்டியது.  மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வெற்றிகொள்வதறகு எனககு ஏழு வாக்குகளே இறுதியில் தேவையாக இருந்தது.

நீங்கள் நல்லிணக்கத்துடன் தொடர்புடைய அமைப்பிற்கு தலைமை தாங்குகின்றீர்கள். எதற்காக இதனைத் தேர்ந்தெடுத்தீர்கள் ?உங்கள் அமைப்பின் மூலம் அடைவதற்கு எதிர்பார்க்கும் இலக்கு என்ன? 

நின்று நிலைக்கக்கூடிய சமாதானத்தை உருவாக்குவதற்கு உதவும் வகையில் இலங்கையிலுள்ள வித்தியாசான மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது  எப்போதுமே என்னுடைய பேரார்வமாக இருந்தது.இந்த நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதற்காக அதிகமான நேரப்பகுதியை செலவழித்திருந்தது மட்டுமன்றி ஏறத்தாழ நான் கொல்லப்படும் நிலையை எதிர்கொண்டிருந்தேன்.நான் அரசியல் யாப்பை முன்னகர்த் நடவடிக்கை மேற்கொண்டிருந்த வேளையிலேயே விடுதலைப்புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தியிருந்தனர்.

தற்போது நீங்கள்  தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் மூலம் ஏதேனும் பணிகளை ஆரம்பித்துச் செயற்படுத்துகின்றீர்களா?

நாம் பத்து பெரும் திட்டங்கள் அடங்கிய வரைவைத் தயாரித்துள்ளோம் முதலாவது திட்டத்தை தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்திருந்தோம்.பிரதமர் பங்கேற்றது தேசிய வைபம் அதுவல்ல. மாறாக சுன்னாகம் இராமநாதன் மகளிர் கல்லூரியிலே முதலாவது திட்டத்தை  ஆரம்பித்திருந்தோம். தைப்பொங்கலைக் கொண்டாடுவதற்காக சிங்களம் முஸ்லிம் மற்றும் தமிழ் சிறார்களை அங்கே ஒன்றாக அழைத்துவந்திருந்தோம். அதன் பிறகு களுத்தறையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியிருந்தோம். இந்த மாத முடிவுவரையில் இதுபோன்று 37 நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம்.ஒவ்வொரு நாளும் நான் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்றுவருகின்றேன். ஏனையவர்களில் உள்ள வேற்றுமைகளை புரிந்துகொண்டு செயற்படுவதற்கும் பாராட்டுவதற்கும் வழிசமைக்கும் வகையில் வித்தியாசமான இனங்கள் மதங்களைச் சேர்ந்தவர்களை ஒன்றாக அழைத்து இந்த செயற்பாட்டை முன்னெடுக்கின்றோம்.ஏனையவர்களின் வைபவங்களைப் பார்த்து சிரித்துக் கேலிசெய்வதை விடுத்து அதைப் பார்த்து பாராட்டுவதற்கும் தமக்குரியதாக ஏற்றுக்கொள்வதற்கும் இதன் மூலம் சிறார்கள் பழக்கப்படவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் சுதுநெலும் போன்ற திட்டங்களை நீங்கள் முன்னெடுத்தாலும் கடும் போக்காளர்கள் குறைந்த பட்ச நேரத்திலேயே அனைத்தையும் சீரழித்துவிடக்கூடிய தரப்பினராய் இருப்பதை கடந்த கால வரலாறு எடுத்துணர்த்துகின்றது. இதுபோன்ற தரப்பினரை எதிர்கொள்வதற்கான திட்டங்களேதும் உங்களிடம் இருக்கின்றதா?

என்னுடைய காலப்பகுதியல் அரசயலமைப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ளமுடியாமைக்கு கடும்போக்காளர்கள் காரணமாக இருக்கவில்லை. அப்போது ஜாதிக ஹெல உறுமய கிடையாது. பொதுபலசேனா கிடையாது.ஜேவிபிக்கு நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் மாத்திரமே இருந்தார்.இதனால் அவர்கள் எதிர்ப்பைக் காண்பிக்கும் அளவிற்கு பலம்பெற்றிருக்கவில்லை. 

நான் பதவிக்கு வந்த ஆரம்பகாலத்தில் சிங்கள மக்கள் மத்தியில் பிரான்ஸ் நிறுவனமொன்றை அழைத்துவந்து கருத்துக்கணிப்பொன்றை நடத்தியிருந்தேன். அதில் 23வீதமான மக்களே அதிகாரப்பகிர்விற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். ஆனால் எமது சுதுநெலும் திட்டத்தை முன்னெடுத்து மீண்டும் இருவருடகாலத்தில் அதே நிறுவனத்தைக் கொண்டுவந்து கருத்துக்கணிப்பு நடத்தியபோது அதிகாரப்பகிர்விற்க 68 வீதமான சிங்கள மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர். சிங்கள மக்கள் மத்தியில் பணியாற்றியவள் என்றவகையில் சிங்கள மக்கள் இனவாதிகள் அல்லர் என்பதை நான் நன்கறிவேன். வாக்குகளைப் பெறுவதற்காக சிங்கள மக்களிடம் உண்மையைக் கூறுவதற்கு சிங்களத் தலைவர்கள் தவறியமையே அவர்கள் ஆதரவை வெளிப்படுத்தாமைக்கான காரணமாக இருந்தது. தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் உரிமைகள் வழங்கப்படவேண்டும். சிங்கள மக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்த ஒரே தலைவர் நான் தான். 15 மாத காலப்பகுதியல் நான் மாகாணசபைத் தேர்தல் பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களையும் எதிர்நோக்கி ஒவ்வொரு தடவையிலும் வரலாறு காணாத வகையில் அமோக ஆதரவுடன் வெற்றிபெற்றிருந்தேன். மக்களுக்கு உண்மையை எடுத்து விளக்கினால் அவர்கள் புரிந்துகொள்வர்.

நாம் சிறுபான்மையினரான கடும்போக்காளர்கள் குறித்து அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. அப்போது ஐக்கிய தேசியக்கட்சி எம்மோடு ஒத்துழைக்கவில்லை. தமிழர் விடுதலைக்கூட்டணி எம்மோடு பணியாற்றிக்கொண்டிருந்தது. கூட்டணியின் தலைவர்களிலொருவரான நீலன் திருச்செல்வம் அரசயல் யாப்பை தயாரித்த குழுவில் ஒரு அங்கத்தவராக இடம்பெற்றிருந்தார். அதனால் தான் பிரபாகரன் அவரைக் கொன்றொழித்திருந்தார்.

இறுதியில் எங்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு ஏழு வாக்குகளே அவசியமாக இருந்தன. ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்க மறுத்திருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் எட்டு வாக்குகள் இருந்தன. ஆனால் அவர்களும் ஆதரவளிக்கவில்லை.

என்னுடைய அரசயல் யாப்பு வரைபானது இந்த நாட்டில் நீங்கள் (தமிழ் மக்கள் ) பெற்றுக்கொள்ளக்கூடிய ஏதேனும் தீர்விலும் பார்க்க மிகவும் அதிகமான ( அதிகாரப்பகிர்வினை) கொண்டமைந்திருந்தது. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அத்தகையதொரு தீர்வை முன்வைப்பதற்கான துணிவு என்னிடமிருந்தது. தற்போது பிரபாகரன் இல்லாத நிலையிலும் யுத்தம் நிறைவுபெற்றுவிட்ட நிலையிலும் தமிழ் மக்கள் அதுபோன்று அதிகமானதை பெற்றுக்கொள்ளப்போவதில்லை ஆனால் அவர்கள் தம் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்தானவர்கள்.

விடுதலைப்புலிகள் பலம்மிக்கவர்களாக இருந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் முன்வைத்திருந்த அரசியல்தீர்வு ஒற்றையாட்சியைத் தாண்டியதாக பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற வகையில் அதிகளவான அதிகாரப்பகிர்வைக்கொண்டதாக அமைந்திருந்தது. தற்போது பிரதமர் உட்பட அரசியல்வாதிகள் பலரும் விடுக்கின்ற அறிக்கைகள் ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வுகாணப்படும் என்பதாக கோடிட்டுக்காட்டுகின்றன. அண்மையில் இடம்பெற்ற நினைவுரை நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் இந்தியத் தூதுவர் கோபாலக் கிருஷ்ண காந்தி   இந்தநாட்டின் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்குதீர்வு காணப்படவேண்டுமானால் தற்போதைய சாபக்கேடான ஒற்றையாட்சி அரசியல்யாப்பிலிருந்து மேம்பட்டதாக சமஷ்டி அம்சங்களைத்தாங்கியதாக புதிய அரசியல்யாப்பு உருவாக்கப்படவேண்டும் என்று கருத்துவெளியிட்டிருந்தார். இதுபற்றி உங்களுடைய நிலைப்பாடு என்ன?

வார்த்தைகள் முக்கியமற்றவை வார்த்தைகள் முக்கியமற்றவை. நான் அப்போது  முன்மொழிந்தது சமஷ்டி ஆட்சி முறைக்கு  மிகவும் அண்மித்த ஒரு தீர்வாக அமைந்திருந்தது. நாம் அதனை (Union of regions )பிராந்தியக்களின் ஒன்றியம்  என அழைத்திருந்தோம்.ஒற்றையாட்சியோ சமஷ்டியோ வேறெதும் ஆட்சியோ பெயர் முக்கியமல்ல. தமிழ் முஸ்லிம் சிங்களம் ஆகிய அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதான போதுமானதும் நடைமுறையில் செயற்படுத்தக்கூடியதுமான தீர்வைக்கொடுப்பதே முக்கியமானதாகும். ராஜபக்ஸவும் அவரது மடையர்களும் வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கின்றனர். வார்த்தைகள் முக்கியமற்றவை.

ஆட்சிமாற்றத்தின் தூண்களில் ஒருவராக நீங்கள் இருக்கின்றீர்கள். இந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் திருப்தியடைகின்றீர்களா?

பொதுவாக ஆம் (திருப்திகொண்டுள்ளேன்). நாம் மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவதாக வாக்களித்திருந்தோம். நல்லாட்சி என்பது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. ஜனநாயகத்தை மீள நிலைநாட்டுதல் அதில் ஒரு அம்சமாகும். அது நடந்தேறியுள்ளது. மக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதும் சாத்தியமாகியுள்ளது.மேலும் சுதந்திரத்தை வழங்கவும் ஜனநாயக முன்னேற்றங்களை காண்பதற்காகவும் சுயாதீனக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.இதுவும் நல்லாட்சியை வலுப்படுத்தும். நல்லாட்சியின் மற்றுமொரு அம்சமாக ஊழல் மோசடிக்கு எதிரான நடவடிக்கை அமைந்துள்ளது. குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனைவழங்குதல் மற்றும் எதிர்காலத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் ஆகியன இதில் அடங்குகின்றன. இந்த அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது. அதனைப் பூர்த்திசெய்யும் தறுவாயில் உள்ளது. எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய ஊழல் மோசடிகளைத்தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டுவிட்டன. பிரதமர் இதனை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார். விரைவில் இது நடைமுறைக்கிடப்படும் 

No comments

Powered by Blogger.