"பௌத்தத்திற்கு அளிக்கப்படும் முதலிடத்துக்கு, புதிய அரசியலமைப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது"
புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒற்றையாட்சிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும் என்று உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும், நாடாளுமன்ற அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஐதேக தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
“தேசியப் பிரச்சினை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு இறுதிச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது போன்றதொரு சந்தர்ப்பம் இனிமேல் ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அனைத்து கட்சிகளினதும் கருத்துக்களை பெற்று நாட்டுக்கு உகந்த அரசியலமைப்பை ஏற்படுத்துவோம். புதிய அரசியலமைப்பு தொடர்பான தீர்மானமே தற்போது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
அனைவரும் தமது கருத்துக்களையும் திருத்தங்களையும் முன்வைக்க முடியும். விவாதிக்க முடியும். அனைத்தும் வெளிப்படைத்தன்மையாகவே அமையும். எதுவுமே இரகசியமாக மேற்கொள்ளப்படமாட்டாது.
பௌத்த தர்மத்திற்கு அளிக்கப்படும் முதலிடத்துக்கு, புதிய அரசியலமைப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதேபோன்று ஒற்றையாட்சிக்கும் பாதிப்பு ஏற்படாது.
வடக்கு மற்றும் தெற்கிலுள்ள அடிப்படை வாதிகளின் பொய்ப் பிரசாரங்களுக்கு மக்கள் ஏமாந்துவிடக் கூடாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment