"பாராளுமன்றத்திலும் இனவாதம் பேசக்கூடாது, எனும் சட்டம் அமுல்படுத்தப்படவேண்டும்"
(சுலைமான் றாபி)
தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் வாழும் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படும் போது அது எதனால் ஏற்படுகின்றது என்பதனை இனங்கான வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் இன்று (16) நிந்தவூரில் இடம்பெற்ற நிந்தவூர் தெற்கு செங்கல் உற்பத்தியாளர் கூட்டுறவுச்சங்கத்தினரிற்கு செங்கல் உற்பத்திப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு உரை நிகழ்த்துகையில் :
அண்மையில் களுத்துறை தர்காநகரில் இடம்பெற்ற கோரச்சம்பவம் அரசியல் அமைப்பின் கீழ் வழங்கப்படும் அடிப்படை உரிமையினைப் பயன்படுத்தி இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கக்கூடிய அளவுக்கு பேசுவது என்பது இந்நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்திற்கு ஏற்படும் தொடர்தேர்ச்சியானதொரு பயங்கரமான சூழ்நிலையாகும்.
சிங்கள மக்களை முஸ்லிம் மக்கள் மீது வெறுப்பூட்டக்கூடிய ஒரு அடிப்படை பிரச்சினையை ஏற்படுத்தி இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க கூடிய அளவிற்கு பெரும்பான்மை இனம் நடந்து கொள்வதானது முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டிய மிகப்பெரும் பிரச்சினையாக மாறிக்கொண்டு வருகின்றது.
இவ்விடயத்தில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் வெறுப்பூட்டக்கூடிய பேச்சு சம்பந்தமான சட்ட மூலத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விட்டு தற்போது அதனை வாபஸ் வாங்கக்கூடிய சூழல் இருந்து கொண்டிருக்கின்றது. ஆகவே பாராளுமன்றத்திலும் வெறுப்பூட்டக் கூடிய இனவாதக் கருத்துக்களை பரப்புவார்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, பாராளுமன்றத்தில் இனவாதக் கருத்துக்களை பேசக்கூடாது எனும் சட்டம் அமுல்படுத்தப்படவேண்டும் எனும் விடயத்தினை நானும், கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர், சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா உள்ளிட்டோர்களும் மு.கா தலைவரின் கவனதிற்கு கொண்டு வரவுள்ளோம். அதற்காக வேண்டி இவ்விடயத்தில் ஒரு குழுவினை அமைத்தும் அறிக்கை சமர்ப்பிக்கும் படி மு.கா தலைவர் கோரியுள்ளார்.
அதே போன்று இனங்களுக்கிடையே வெறுப்புக்களை ஊட்டி, அவர்களுக்கிடையில் குழப்பத்தினை ஏற்படுத்தி நாட்டின் வளர்ச்சியினை பிற்போடக் கூடிய வெறுப்பூட்டும் பேச்சுக்களை பேசும் ஒவ்வொருத்தரிற்கும் எதிராக புதுச்சட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு சட்டமா அதிபரின் அனுமதியோடு வழக்குத் தொடருவதற்கான வழி வகைகள் செய்யப்படவேண்டும். எனவே இந்நாட்டில் எல்லோரும் அரசியலில் தெளிவு பெற்றவர்களாக இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இனிவரும் காலங்களில் இனவாதம் பேசுபவர்களிடத்தில் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும்.
அதேபோன்று கடந்த 2012ம் ஆண்டு வாழ்வின் ஒளி திட்டத்தின் மூலம் முதன் முதலில் இலவச குடிநீர் திட்டத்தினை நாம் ஆரம்பித்து காட்டியபோது அரசியல் வாதிகளாலும் பொது மக்களுக்கு இலவச குடி நீர் வழங்கமுடியும் என்பதனை பறை சாற்றியுள்ளது. இந்தப் பகுதியில் அத்தியாவசியமாகக் காணப்படும் செங்கல் உற்பத்திக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் பெற்றுக் கொள்வதற்கு சிறந்த வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தி தருவதோடு, நவீன வசதிகளுடன் கூடிய செங்கல்சூழைகளை அமைப்பதற்கும், மக்களுக்கு குறைந்த விலைகளில் செங்கற்களை விற்பனை செய்வதற்கும் எதிர்காலத்தில் நடவடிக்கைகள் எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன், கூட்டுறவு உதவி ஆணையாளர் வை.எல்.எம். பகுர்தீன் உள்ளிட்ட அதிதிகளால் நிந்தவூர் தெற்கு செங்கல் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தினரைச் சேர்ந்த 27 பேரிற்கு செங்கல் உற்பத்திக்கான உற்பத்திப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment