Header Ads



மற்றுமொரு பாய்ச்சலை நோக்கி, மக்கள் காங்கிரஸ் எனும் மயில் கட்சி

-சுஐப் எம் காசிம்-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஒரு புள்ளியில் இருந்து ஆரம்பித்த ஒன்று. இந்த கட்சியானது றிசாட் என்ற ஓர் அகதி மகனின் ஆதங்கத்தினாலும் சமூகத்தின்பால் அவர் கொண்டிருந்த கவலையினாலும் உருவாக்கப்பட்ட தாபனம். இதன் முக்கியமான இலட்சியம் மக்கள் பணியே. அகதி முகாமில் றிஷாட் துன்புற்றவர். பல்வேறுபட்ட வேதனைகளுக்கு முகம் கொடுத்தவர். அல்லாஹ்வின் நாட்டத்தால் அவர் வன்னி மாவட்ட எம்.பியானார். முஸ்லிம் காங்கிரசின் மூலம் போட்டியிட்டு அவர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்த போதும் அக்கட்சியின் போக்கு முஸ்லிம்களின் நலனுக்கும் அகதி மக்களின் வாழ்வுக்கும் ஏற்புடையதல்ல என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்ட காரணத்தால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். தமக்கென ஒரு கட்சியை உருவாக்கிக் கொண்டார்.

இக்கட்சியை உருவாக்கிய போது அவரோடு சில அரசியல்வாதிகள் கைகோர்த்து நின்ற போதும் காலவோட்டத்திலே அவர்களுள் சிலர் வேறு கட்சிகளுக்குத் தாவி விட்டனர். அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூலம் தமக்கு உடனடிப்பயன் கிடைக்காது என்று கருதியதே இதற்குக் காரணம். எனினும் சில அரசியல்வாதிகள் தொடர்ந்து நின்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமையுடன் இணைந்து செயற்பட்டு பல்வேறு கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றனர்.

அவர்களுள்; பிரதானமானவர்கள் தற்போதைய தவிசாளரும் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீரலி, கட்சியின் முன்னாள் தலைவரும் பிரபல சட்டத்தரணியுமான என்.எம்.ஷஹீட், முன்னாள் பிரதியமைச்சர் ஹூசைன் பைலா மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்களைக் குறிப்பிடலாம்.

பொதுத் தேர்தலை அடுத்து தேசிய பட்டியல் எம்.பி நியமன விவகாரத்தினால்  கட்சியின் செயலாளர் கட்சியுடன் முரண்படத் தொடங்கினார். இதனால் கட்சி நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை கட்சித் தொண்டர்கள் விரும்பவில்லை. எனவே, கட்சியை எப்படியும் சிறந்த முறையில் வளர்க்க வேண்டும் என அவர்கள் துடிக்கின்றனர்.

தேசிய பட்டியல் எம்.பி தெரிவானது தீர்க்கமான ஆலோசனைகளுக்கு மத்தியில்  மேற்கொள்ளப்;பட்ட ஒன்றாகும். வட மாகாணத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டு சுமார் 90 சதவீதமான மக்கள் வாழ்ந்து வரும் புத்தளம் மாவட்டத்துக்கு பல்வேறு காரணிகளை மையமாக வைத்து கட்சியின் தேசிய பட்டியல் எம்.பி வழங்கப்பட்டது. புத்தளம் மாவட்டத்துக்கு மர்ஹூம் நெய்னா மரிக்காருக்குப் பிறகு முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாத நிலை இருந்து வருகிறது. சுமார் 30 ஆண்டு காலமாக பிரதிநிதித்துவம் கிடைக்காத இந்த மக்களின் நலனை மையமாக வைத்தும், அகதி மக்களுக்கு வாழ்வளித்த பூமி என்பதற்காகவுமே இந்த தேசியப் பட்டியல் சிரேஷ்ட அரசியல்வாதி நவவி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இது ஓர் எழுந்தமான முடிவல்ல. காலோசிதமாக, தீர்க்கமாக கட்சித் தலைவரினால் உயர் பீட, மஷூறா சபை உறுப்பினர்களின் கலந்தாலோசனையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒன்று.

இவ்வாறான சிற்சில முரண்பாடுகளால் கட்சி கீழ் மட்ட நிலையை அடையக்கூடாது என்பதில் அதன் உறுப்பினர்களும்  தொண்டர்களும் ஆதரவாளர்களும் உறுதியாக இருக்கின்றனர். இந்தப் பின்னணியிலேதான் இன்று பேராளர் மாநாடு குருநாகலில் நடைபெறுகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி கோலிய மூங்கில் குலம் போல உயர்ந்து வளர்ந்து வரும் கட்சி என்பதை கடந்த பொதுத் தேர்தல் முடிவுகள் நிரூபித்து நிற்கின்றன. அமைச்சர் றிஷாட்டின் தன்னலமற்ற  மக்கள் சேவையை பொறுக்க முடியாத காழ்ப்புணர்வு கொண்ட பல்வேறு சக்திகள் அவருக்கெதிராக இயங்கி நின்ற போதும் இம்முறை பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்திலே ஆகக் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று அவரே முன்னணியில் திகழ்ந்தார். அத்துடன் இந்தக் கட்சியின் வளர்ச்சிப் போக்குக்கு ஆதாரமாக அநுராதபும், திருகோணமலை, மட்டக்களப்பு, வன்னியில் தலா ஒரு எம்.பியும், தேசிய பட்டியல் எம்.பி ஒருவருமாக ஐவரும் கிடைத்தமையைக் குறிப்;பிடலாம். அது மட்டுமன்றி குருநாகல், அம்பாறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மிகக் குறைவான வாக்குகளால் பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டதை இங்கு கூறியே ஆக வேண்டும். இது மட்டுமன்றி மாகாண சபைகளிலும் உள்ளுராட்சி சபைகளிலும் கட்சிக்கு பெரும் எண்ணிக்கையான மக்கள் பிரதிநித்துவம் கிடைத்துள்ளது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை அரவணைக்கும் ஒரு சிறுபான்மைக் கட்சியாக இது பரிணமிக்கத் தொடங்கியுள்ளது.

கட்சியின் தலைவர் றிஷாட் மிகவும் சிறப்பான முறையிலே கட்சியை வழி நடாத்தி வருகிறார். வில்பத்து விவகாரத்திலே அவர் மீது வீண் பழி சுமத்திய இனவாதிகள் இன்று மூக்குடைபட்டு நிற்கின்றனர். வன்னி முஸ்லிம்கள் வில்பத்தை ஆக்கிரமித்து விட்டார்கள் என்று கூறியவர்கள் இன்று வாயடைத்து போய் நிற்கின்றனர். மன்னார் நீதி மன்ற விவகாரத்தில் பொய்யான குற்றச்சாட்டுக்களை அமைச்சர் றிஷாட் மீது சுமத்திய போதும் அது புஷ்வாணமாகிவிட்டது. சில விஷமச் சக்திகள் வேறு இடங்களில் இருந்து ஆட்களைத் திரட்டி வந்து அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய போதும் எந்த பயனும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

இவ்வாறான பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்த நிலையிலும் அமைச்சர் றிஷாட் மக்கள் பணியை கைவிடவில்லை. உண்மை வெல்லும் தர்மம் நிலைக்கும் என்பதை அவரது பாரிய நற்பணி நிரூபித்து வருகின்றது. எனவே, 17.01.2015 குருநாகல் பேராளர் மாநாடு சிறப்பாக அமைய பிரார்த்திப்போம்.  

1 comment:

  1. Article failed to mention or justify, why he defected from the previous party (SLMC).

    ReplyDelete

Powered by Blogger.