"அன்று எமக்கு மரியாதை செலுத்திய, பெரும்பான்மைச் சமூகம், இன்று எம்மை மதிப்பதில்லை"
பெரும்பான்மைச் சமூகத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்குமிடையில் பல தசாப்தகாலமாக நிலவிவந்த நல்லுறவும் புரிந்துணர்வும் இன்று இல்லாமற் போயுள்ளன. இன்று எமக்குள் பகைமை உணர்வுகள் அதிகரித்துவிட்டன.
இழந்துவிட்ட நல்லுறவையும் புரிந்துணர்வையும் மீண்டும் நிறுவிக் கொள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் அரபுக் கல்லூரிகள் ஒன்றியமும் முஸ்லிம்களுக்கான செயலகமும் இணைந்து கொள்ள வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.முபாறக் தெரிவித்தார்.
கொழும்பு புக்கர் வரவேற்பு மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற பன்மைச் சமூகத்தில் இஸ்லாமிய நெறிமுறைகள் எனும் அரபுக் கல்லூரி ஆசிரியர்களுக்கான பாடவிதானம் வெளியீட்டு நிகழ்வுக்கு தலைமை வகித்து உரை நிகழ்த்துகையிலே அஷ்ஷெய்க் எம்.ஏ.முபாறக் மேற்கண்டவாறு கூறினார்.
அரபுக் கல்லூரிகள் ஒன்றியமும் முஸ்லிம்களுக்கான செயலகமும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வில் அஷ்ஷெய்க் எம்.ஏ.முபாறக் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
எமது சமூகத்தில் பிள்ளைகளுக்கு பன்மைச் சமூகத்தில் இஸ்லாமிய நெறி முறைகள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் எனப் போதிக்கப்பட வேண்டும்.
இதற்கென இலங்கை அரபுக் கல்லூரிகளின் ஒன்றியமும் முஸ்லிம்களுக்கான செயலகமும் இணைந்து வெளியிட்டுள்ள பன்மைச் சமூகத்தில் இஸ்லாமிய நெறிமுறைகள் எனும் அரபுக் கல்லூரி ஆசிரியர்களுக்கான பாட விதானம் பெரிதும் பயனுள்ளதாக அமையும். பல தசாப்தகாலமாக பெரும்பான்மைச் சமூகத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் நிலவி வந்த நல்லுறவு பாதிப்புறுவதற்கு நாமும் காரணமாக உள்ளோம்.
எமது சமய கலாசார விழுமியங்கள் பற்றிய தெளிவுகளை பெரும்பான்மைச் சமூகத்திடம் முன்வைக்கத் தவறிவிட்டோம். அதனால் நாம் இன்று பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அன்று எமக்கு மரியாதை செலுத்திய பெரும்பான்மைச் சமூகம் இன்று எம்மை மதிப்பதில்லை.
பெரும்பான்மைச் சமூகத்துடன் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு தற்போது பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல்வேறு சமூக நல அமைப்புகளால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உலமா சபையும் காலத்துக்குக் காலம் நூல்களை வெளியிட்டு வருகின்றன. கருத்தரங்குகள் நடத்தி வருகின்றன. பெரும்பான்மைச் சமூகம் முஸ்லிம்களைப் பற்றி கொண்டுள்ள தவறான கருத்துகள் பிரசுரங்கள் மூலம் களையப்பட்டுள்ளன.
அண்மையில் உலமா சபை வெளியிட்ட பிரசுரங்களை வாசித்த பெரும்பான்மைச் சமூகம் ஏன் இவ்வளவு காலம் இந்த நல்ல விளக்கங்களை எமக்கு வெளியிடவில்லை என்று வினவுகிறார்கள்.
எமது மத்ரஸாக்கள் கதீப்மார்களை உருவாக்குகின்றன. கதீப்மார்களே வெள்ளிக்கிழமைகளில் குத்பா பிரசங்கங்களை நடாத்துகிறார்கள்.
குத்பா பிரசங்கங்கள் நவீனமாக இருக்க வேண்டும். காலத்துக்கேற்றவையாக இருக்க வேண்டும். கல்பைத் தொடவேண்டும். இன நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் போதிப்பவையாக இருக்க வேண்டும்.
இன்று நாம் பெரும்பான்மைச் சமூகத்துடன் ஒன்றாகக் கலந்தே வாழ வேண்டியுள்ளது.
எமது சமய கலாசாரங்களைப் பேணி நாம் வாழும் வகையில் எமக்கிடையில் நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்பட வேண்டும்.
பெரும்பான்மைச் சமூகத்திடம் நாம் இழந்து விட்ட எமது கௌரவம் மரியாதை என்பவற்றை மீண்டும் பெற்றுக் கொள்ளும் வகையில் எமது நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்றார்.
பன்மைச் சமூகத்தில் இஸ்லாமிய நெறி முறைகள் எனும் அரபுக் கல்லூரி ஆசிரியர்களுக்கான பாடவிதான நூலின் முதற் பிரதியை முஸ்லிம்களுக்கான செயலகத்தின் நிறைவேற்று அதிகாரி எம்.மஹ்ரூபிடமிருந்து உலமா சபையின் செயலாளர் எம்.எம்.ஏ.முபாறக் பெற்றுக் கொண்டார்.
Post a Comment