Header Ads



"அந்த நாட்களை, நாம் இப்போது மீட்டிப் பார்க்கவேண்டும்"

ஆட்சி மாற்றம் அர்த்தமுள்ளதாய் அமைய வேண்டும்
ஒரு வருட நிறைவில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டுகோள்.

மாற்றம் நிகழ்ந்து விடாதா என்ற ஏக்கத்துடன், நாட்டு மக்கள் எதிர்பார்த்திருந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. ஜனநாயக விரோதம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், குடும்ப ஆதிக்கம், இனவாத சக்திகளின் கை ஓங்கியிருந்த நெருக்கடிமிக்க அந்த நாட்களை நாம் இப்போது மீட்டிப் பார்க்க வேண்டும். 

அப்போது ஆட்சி மாற்றம் தவிர்க்க முடியாத ஒரு தேவையாக உணரப்பட்டது. இதனை ஒரு தேசியக் கடமையாகக் கருதி, உயிரைப் பணயம் வைத்து தியாகத்துடனும், அர்ப்பணிப்புடனும், அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலரும் செயற்பட்டனர். அதன் மூலமே இந்த ஆட்சி மாற்றம் சாத்தியமாகியது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆட்சி மாற்றத்தில், முற்போக்கு சக்திகளுடன் இணைந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் முக்கிய பங்காளியாக ஆரம்பம் முதலே செயற்பட்டு வந்தது. நெருக்கடியும் சவால் மிக்கதுமான இந்தப் பணியை ஒரு வரலாற்றுக் கடமையாக கருதியே, பல கெடுபிடிகளுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி செயற்பட்டது.

ஒப்பீட்டளவில் இந்த ஆட்சி மாற்றத்திற்கு பிந்திய சூழல் பல வகையில் நல்ல விளைவுகளைக் கொண்டுவந்துள்ளது. மாற்றத்தின் பின்னர் எடுக்கப்பட்ட பல நல்ல முயற்சிகளை நாம் மனதார வாழ்த்துகிறோம். மக்கள் எவ்வித அச்சமும் இன்றி சுதந்திரமாக செயற்படவும் கருத்துக்களை வெளியிடவும் வாய்ப்பான சூழல் தோன்றியுள்ளமை மிக முக்கியமான அடைவாகும். இது நமது நாடு பெற்ற இன்னொரு சுதந்திரமாக உணரப்படுகிறது என்பது மகிழ்ச்சிக்குரியது. எனினும், ஆட்சி மாற்றம் ஏன் தேவை என மக்களுக்கு பல வாக்குறுதிகளும், நம்பிக்கைகளும் அளிக்கப்பட்டன. அவை அதே வேகத்தில் நிகழவில்லை என்ற கவலை பரவலாக உள்ளது. ஆதலால், மக்களது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்த ஆட்சி மாற்றம் அர்த்தம் உள்ளதாய், மேலும் பயன் மிக்க தெளிவான விளைவுகள் தர வல்லதாய் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இங்குள்ள ஜனநாயக சூழல் இன்னும் வளர்ச்சியடைய வேண்டும். தகவல் அறியும் உரிமை இதற்கு மிகவும் அவசியம். இதுவரை அது சட்டமாகவில்லை. அதேபோல வெறுப்பூட்டலுக்கு எதிரான சட்டமூலமும் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. 

இங்கு ஆழமாக வேர் ஊன்றியுள்ள எல்லா வகையான இனவாதங்களும், ஜனநாயக வழியில் முறையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதுதான் சமாதான சகவாழ்விற்கும் நல்லிணக்கத்திற்கும் நாட்டின் சுபீட்சத்திற்கும் வழிவகுக்கும். 

பொதுச் சட்டங்களுக்கு அப்பால் இவ்வாறான குறிப்பான சட்டங்கள், நமது கடந்த கால கசப்பான சூழலை மீண்டும் உருவாக்காமல் இருப்பதற்கும் நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கும் மிகவும் இன்றியமையாதவை.

எல்லோருக்குமான ஒரு இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதே நம்முன்னுள்ள மிகப் பெரிய சவாலாகும். அதனை அடையும் வகையில் தெளிவான, வெளிப்படையான விளைவுகளை நாம் அறுவடை செய்ய வேண்டும்.

கடந்த காலத்தில் குடும்ப ஆதிக்கம் தொடர்பாக அதிகம் பேசப்பட்டது. இப்போது அரசியல்வாதிகளின் நெருங்கிய சகாக்களுக்கும் தகுதியற்றவர்களுக்கும், வாய்ப்புகளும் அரசியல் முக்கியத்துவமும் பதவிகளும் வழங்கப்படுகின்றன.

குடும்ப ஆதிக்கம் இரத்த பந்தத்தால் உருவாகிறது என்றால், இது இன்னொரு வகையான பந்தத்தால் உருவாகிறது. இதுவும் ஒரு வகையில் குடும்ப ஆதிக்கம் போன்றதே. இதன் எதிர் விளைவுகளை இப்போது காண முடிகிறது. தகுதியானவர்களுக்கு சந்தர்ப்பங்களும் பதவிகளும் வழங்கப்பட்டு இந்த நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும்.

தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் உரியவகையில் நிறைவேற்றப்பட வேண்டும். குறிப்பாக ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், மக்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை. இதில் கூடிய கரிசனை காட்டப்படுவது மிகவும் முக்கியம்.

தேசிய நல்லிணக்கம், நிலைமாறு காலகட்ட நீதி குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். அரசியல் கைதிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி களையப்பட்டு அவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

காணி தொடர்பான பிரச்சினைகள் முறையாக தீர்க்கப்பட வேண்டும். குறிப்பாக மீள்குடியேற்றம் தொடர்பாக உள்ள பாரிய பிரச்சினைகள் உள்ளன. இதற்கு உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

வில்பத்து விவகாரம் தொடர்பாகவும் மிகப் பிழையான வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் இதில் தலையிட்டு உரிய முறையில் அதனைத் தீர்க்க வேண்டும். அவ்வாறு அரசாங்கம் தலையிடுமானால் இனவாத சக்திகளின் பொய்ப்பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்தலாம்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நெறிமுறைகளும் நடத்தை விதிகளும் அடங்கிய ஒழுங்கு விதிகளை தயாரிப்பதாக முன்னர் வாக்களிக்கப்பட்டது. இது மிக எளிதாக செய்யப்பட இயலுமான ஒரு பணி. ஆனால், அது கூட இதுவரை உரிய கவனம் எடுத்து செய்யப்படவில்லை. மார்ச் 12 பிரகடனத்தில் எல்லாக் கட்சிகளும் கைச்சாத்திட்டிருந்தன. ஆனால், அதன் அடுத்த கட்ட முயற்சிகள் போதியளவு அக்கறைக்கு உட்படவில்லை என்ற ஆதங்கம் உள்ளது.

சட்டம், ஒழுங்கு முறையாகப் பேணப்பட வேண்டும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற சட்டவாட்சித் தத்துவம் நிலைநிறுத்தப்பட வேண்டும். அண்மைக்காலமாக சட்டத்தை முறையாக அமுல்படுத்துவதில்,  அரசியல்வாதிகளுக்கு காட்டப்பட்டு வரும் பக்கச்சார்ப்பு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. யாராயினும் சட்டம் உரிய முறையில் அமுல் படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாடு அவசியம்.

புதிய அரசியல் அமைப்பு தொடர்பான விடயம் தற்போது மேல் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரதும் சமத்துவமானதும் நியாயதுமான பங்கேற்புடனேயே அரசியல் அமைப்பு வடிவமைக்கப்பட வேண்டும். உரிய பங்களிப்பு இல்லாமல் செய்யப்படுகின்ற மாற்றம், புதிய பிரச்சினைகளுக்கும் எதிர் விளைவுகளுக்குமே இட்டுச் செல்லும் என்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இங்கு ஆட்சி மாற்றத்தை விட, ஆட்சி முறை மாற்றத்தின் மீதே மக்கள் அக்கறை கொண்டிருந்தனர். அந்த ஆட்சி முறை மாற்றம் அர்த்தபூர்வமானதாக, விளைவு தரத் தக்க வகையில் அமைய வேண்டும்.  ஒட்டு மொத்தமாக, நல்லாட்சி விழுமியங்கள் அரசியல் தேவைகளுக்காக துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடாது. அத்துடன், நல்லாட்சி விழுமியங்கள் மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அவர்கள் இழந்துவிடவோ, குறைத்து மதிப்பிடவோ கூடாது.

அந்த வகையில், நல்லாட்சி என்பது அர்த்தமுள்ள நல்லாட்சியாக அமைய வேண்டும். அதனை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.