வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள், தமது அபிலாஷைகளை முன்மொழிய வாய்ப்பு
புதிய அரசமைப்புக்கு இலங்கையில் உள்ள மக்கள் போன்று சர்வதேச நாடுகளில் வாழும் இலங்கையர்களும் தங்களது கருத்துகளையும், அபிலாஷைகளையும் முன்மொழிய முடியும்.
அதற்கான விசேட இணையதளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று புதிய அரசமைப்புக்கான மக்கள் கருத்தறியும் குழு தெரிவித்துள்ளது.
கொழும்பு விசும்பாயவில் நேற்று (28) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டது. இக்குழுவின் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்ததாவது,
"கடந்த 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை கொழுப்பில் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வேலைத்திட்டம் மிகவும் சாதகமாக அமைந்தது. மக்களின் மனங்களில் உள்ள பல்வேறுப்பட்ட கருத்துகள் அச்சமின்றி முன்வைக்கப்பட்டன.
259 பேர் வாய் மூலம் தமது கருத்துகளைப் பதிவுசெய்தனர். 340 பேர் மின்னஞசல் ஊடாகவும், 200 பேர் பிரேரணை மூலமும், 70 பேர் தொலைநகல் மூலமும் தமது கருத்துகளைத் தெரிவித்தனர்.
எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பல குழுக்களாகச் செல்லவுள்ளோம். கொழுப்பு மாவட்டத்தில் மக்கள் தமது கருத்துகளைத் தெரிவிக்க மேலும் கால அவகாசம் கோரியுள்ளதால் இறுதியாக மீண்டும் மார்ச் மாதம் இறுதிப் குதியில் கொழும்பில் கருத்துகள் கோரப்படும்.
ஒரு ஜனநாயக நாட்டில் தங்களின் ஆட்சியின் அரசமைப்பை உருவாக்கவும் அது தொடர்பில் தீர்மானிக்கவும் மக்களுக்கே பூரண அதிகாரம் உண்டு. மக்கள் தமது கருத்துக்களை அச்சமின்றி தெரிவிக்க வேண்டும். இது வரலாற்று ரீதியான சந்தர்ப்பம். இந்தச் சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இலங்கை போன்று சர்வதேச ரீதியில் வாழும் இலங்கையர்களும் தமது கருத்துகளை முன்வைக்க பூரண உரித்துடையவர்களாவர். இவர்களுக்கு நேரடியாக தமது கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு குறைவாகக் காணப்படுவதால் இவர்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ள விசேட இணையதளமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
WWW.YOURCONSTITUTION.LK என்ற இணையதளத்தின் ஊடக சர்வதேச வாழ் இலங்கையர்கள் தமது யோசணைகளை முன்வைக்க முடியும். தமிழ், சிங்கள, முஸ்லிம் என்று அனைத்து இன மக்களும் தமது ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த உரிமையுடயவர்கள்.
எனவே, சகல மக்களும் சமத்துவத்துடன் வாழும் அரசமைப்பு கட்டாயமாகத் தேவையாகவுள்ள நிலையில் அனைவரும் தமது கருத்துக்களை முன்வைக்க முன்வர வேண்டும்.
எதிர்வரும் முதலாம் இரண்டாம் திகதிகளில் கண்டியிலும்,
5, 6 ஆம் திகதிகளில் வவுனியாவிலும்,
8, 9ஆம் திகதிகளில் கிளிநொச்சியிலும்,
3, 4ஆம் திகதிகளில் மன்னாரிலும்,
12, 13ஆம் திகதிகளில் முல்லைத்தீவிலும்,
15, 16ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்திலும்,
17, 18 ஆம் திகதிகளில் புத்தளத்திலும்,
19, 20ஆம் திகதிகளில் நுவரெலியாவிலும்,
23, 24ஆம் திகதிகளில் பதுளை மற்றும் திருகோணமலையிலும்,
27, 28ஆம் திகதிகளில் அப்பாறையிலும் மக்கள் தமது கருத்துகளைத் தெரிவிக்கலாம்" என்றனர்.
Post a Comment