அட்டாளைச்சேனை வைத்தியசாலையில், மருந்துகளுக்கு தட்டுப்பாடு - நசீர் கவனிப்பாரா..?
- மப்றூக் -
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் குளிசை மற்றும் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றமை தொடர்பில் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றமையால், வெளிநோயார்களுக்கு கணிசமான மருந்து வகைகளை மருந்துக் கடைகளில் பெற்றுக் கொள்ளுமாறு கூறி, வைத்தியர்கள் மருந்துச் சீட்டுக்களை எழுதிக் கொடுக்கின்றனர்.
இந்த நிலையில், இவ்வாறு வைத்தியர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை ஏழை நோயாளர்களால் மருந்துக் கடைகளில் கொள்வனவு செய்வதற்கான வசதிகள் இல்லை என்பதும் குடுப்பிடத்தக்கது.
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில், இவ்வாறு மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றமையினை வைத்தியசாலைத் தரப்புக்களும் உறுதி செய்தன.
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 130 தொடக்கம் 150 வரையிலான வெளிநோயாளர்கள் சிகிச்சை பெறுவதற்காக வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், வாரத்தில் மூன்று நாட்கள், வெளிநோயாளர் பிரிவில் மேலதிக சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் கர்ப்பிணிப் பெண்களுக்கும், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் தொற்றா நோயாளர்களுக்குமான சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு மேலதிக சிகிச்சைகளுக்காக குறித்த ஒவ்வொரு நாட்களும் சுமார் 100 பேர் வருகை தருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறானதொரு நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றமையினால், இங்கு வரும் மேற்குறிப்பிட்ட வெளிநோயாளர்களுக்கான மருந்துகளை வழங்க முடியாமல் உள்ளதாக வைத்திசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.
இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் மிக அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைகளில் சுகாதாரத்துறையும் ஒன்றாகும். ஆயினும், மேற்படி வைத்தியசாலைக்குப் போதுமான மருந்துகளை ஏன் வழங்க முடியாமல் உள்ளது என்றும் பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை கிழக்கு மாகாண நிருவாகத்தின் கீழ் உள்ளமையும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீர் பதவி வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment