Header Ads



கடினமான காலம் வந்துள்ளது - ரணில்

இந்து சமுத்திரத்தின் போட்டித்தன்மையுடன் கூடிய பொருளாதார கேந்திர நிலையமாக இலங்கையை அபிவிருத்தி செய்வதே தமது அரசாங்கத்தின் நோக்கம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

2016 இலங்கை பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைக் கூறினார்.

மாநாட்டின் அங்குரார்ப்பண வைபவத்தில் உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள், பொருளாதார நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மாநாட்டில் பிரதமர் மேலும் தெரிவித்ததாவது;

    அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பிலேயே கடந்த வருடம் முழுவதும் நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதேபோன்று, நாளை மறுதினம் பாராளுமன்றத்தை அரசியல் அமைப்பு நிர்ணய சபையாக மாற்றுவதற்கான பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் திருத்தம் மேற்கொள்வதே இதன் நோக்கமாகும். கடந்த 365 நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் ரீதியில் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அடுத்ததாகவே கடினமான காலம் வந்துள்ளது. இந்த காலகட்டத்தில் பொருளாதார மற்றும் சமூக ரீதியிலான மறுசீரமைப்புக்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதனை செய்ய வேண்டுமாயின் உலக பொருளாதாரம் மற்றும் எமது பிஸ்கள் கட்டமைப்பில் உள்ள நெருக்கடிகளுக்கு அப்பாற் செல்ல வேண்டும். இந்த வருடத்தில் உள்ள சவால் அதுவே.

இலங்கையின் நீண்டகால பொருளாதார அபிவிருத்தியில் நிலவும் சவால்கள் தொடர்பில் ஹாவட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அபிவிருத்தி கேந்திர நிலையம் மேற்கொண்ட ஆய்வின்மூலம் கண்டறியப்பட்ட தகவல்கள் தொடர்பில் அதன் பணிப்பாளர் ரிக்காடோ ஹவுஸ்மன் இதன்போது தகவல்களை வெளியிட்டார்.

தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி மற்றும் அரச வருமானம் குறைதல், பொருளாதார மறுசீரமைப்பில் உள்ள பின்னடைவு, அபிவிருத்தி மற்றும் நகர மயமாக்கலில் உள்ள குழறுபடிகள், பிராந்திய அபிவிருத்தியில் நிலவும் குறைபாடுகள் குறித்தும் அவர் தெளிவுபடுத்தினார்.

உலக பிரசித்திபெற்ற முதலீ்ட்டாளரான ஜோர்ஜ் சோரோஸ் இந்த மாநாட்டின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.

உலக பொருளாதாரத்தின் தற்போதைய நிலையால் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக இலங்கை கடினமான பயணத்தை மேற்கொள்ள நேரிடும் என அவர் சுட்டிக்காட்டினார்.

பொருளியல் விஞ்ஞானத்திற்காக நோபல் பரிசு வென்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோசப் ஸ்டீக்லிட்சும் 2016 ஆம் ஆண்டு பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டார்.

No comments

Powered by Blogger.