Header Ads



சவூதி அரேபியாவும், ஈரானும் அமைதிகாக்க வேண்டும் - துருக்கி வேண்டுகோள்


ஈரான் மற்றும் சவூதி அரேபியாவிற்கு இடையிலான பதற்ற சூழல் பிராந்திய நாடுகள் எங்கும் பரவி வருவதோடு சவூதியின் பல சுன்னி கூட்டணி நாடுகளும் ஈரானுடனான உறவுகளை முறித்து அல்லது குறைத்துக் கொண்டுள்ளன. மறுபுறம் ஷியா மதத்தலைவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு சவூதிக்கு எதிராக மூன்றாவது நாளாகவும் நேற்றைய தினத்தில் ஈரான் மற்றும் ஈராக்கில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

தீவிரவாத குற்றச்சாட்டில் கடந்த சனிக்கிழமை சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 47 பேரில் ஷியா மதத்தலைவர் ஷெய்க் நிம்ர் அல் நிம்ரும் ஒருவர். டெஹ்ரானில் உள்ள சவூதி தூதரகத்தினுள் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகுந்து தாக்கியதை அடுத்து ஈரானுடனான உறவுகளை சவூதி முறித்துக்கொண்டுள்ளது.

சவூதி தூதரகம் தாக்கப்பட்டதற்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையும் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. பாதுகாப்புச் சபை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், மரண தண்டனைக்கு உள்ளான மதத்தலைவர் நிம்ர் அல் நிம்ர் பற்றி எந்த குறிப்பும் உள்ளடக்கப்படவில்லை.

இரு நாடுகளும் அமைதி காக்கும்படி துருக்கி துணைப் பிரதமர் நுமான் குர்துமுஸ் திங்களன்று வலியுறுத்தி இருந்தார். மத்திய கிழக்கு ஏற்கனவே ஒரு வெடிமருந்து கிடங்கு போன்று இருப்பதாக அவர் எச்சரித்தார்.

இரு தரப்பும் அமைதி காக்கும்படி அமெரிக்கா, ஐ.நாவும் அழைப்பு விடுத்துள்ளன. இதில் டெஹ்ரானில் இருக்கும் தனது தூதரகம் தாக்கப்பட்டது குறித்து சவூதி ஐ.நாக்கு எழுதிய கடிதத்திற்கு பதலளிக்கும் வகையிலேயே பாதுகாப்புச் சபை இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது. தவிர, ஈரானின் மஷ்ஹாத் நகரில் இருக்கும் சவூதி துணை தூதரகமும் தாக்கப்பட்டுள்ளது.

இராஜதந்திர சொத்துகளையும், பிரதிநிதிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று ஈரானுக்கு பாதுகாப்புச் சபை வலியுறுத்தி இருப்பதோடு சர்வதேச கடப்பாடுகளை மதித்து நடக்குமாறும் குறிப்பிட்டுள்ளது. இரு தரப்பும் பேச்சுவார்த்தைகளைக் கொண்டு பிராந்தியத்தின் பதற்ற சூழலை தணிக்க வேண்டும் என்றும் பாதுகாப்புச் சபை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் ஈரான் தனது நாடு மற்றும் ஏனைய நாடுகள் மீதான உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்தினால் இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று ஐ.நாவுக்கான சவூதி தூதுவர் அப்துல்லாஹ் அல் முஅல்லிமி குறிப்பிட்டுள்ளார். ஈரான் அரபு விவகாரங்களில் தலையிடுவதாக சவூதி முன்னர் குற்றம் சாட்டியிருந்தது.

பிராந்தியத்தின் பிரதான சுன்னி மற்றும் ஷியா வல்லமை நாடுகளான சவூதி மற்றும் ஈரான் உள்நாட்டு யுத்தம் நடக்கும் சிரியா மற்றும் யெமனில் எதிர் எதிர் தரப்புகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றன.

No comments

Powered by Blogger.