தம்புள்ளை பள்ளிவாசலை சூழவுள்ள மக்கள், நஷ்டஈட்டை நிராகரித்தனர்
-ARA.Fareel-
நகர அபிவிருத்தி அதிகார சபை தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசலைச் சூழவிருந்த குடும்பங்களை அவ்விடத்திலிருந்து நிரந்தரமாக அகற்றிவிடுவதற்கு வழங்க முன்வந்த நஷ்ட ஈட்டை அப்பகுதி மக்கள் நிராகரித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை நஷ்ட ஈட்டினை வழங்குவதற்காக 86 குடும்பங்கள் தம்புள்ளை பிரதேச செயலாளர் காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2 இலட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டாலும் மூன்று குடும்பங்கள் மாத்திரமே நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொண்டதுடன் ஏனைய குடும்பங்கள் நிராகரித்தன.
இதேவேளை நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொண்ட மூன்று குடும்பங்களில் ஒரு குடும்பத்தவர் மறுதினம் காசோலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் திருப்பிக் கையளித்துள்ளார்.
அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உடன்படிக்கை பத்திரத்தில் பொல்வத்தையில் மாற்றுக்காணி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அக்காணி ஆறு மாதங்களின் பின்பே உரியவர்களுக்கு காண்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தம்புள்ளை பள்ளிவாசலுக்கு அண்மையிலுள்ள தமது காணியை சுய விருப்பத்தின் பேரிலேயே வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கைக்கு தம்புள்ளை காணி இழந்தோர் சங்கத்தின் தலைவர் மஞ்சுலா தயானந்த பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார். தம்புள்ளை பள்ளிவாசல் அண்மித்த பகுதியிலுள்ள 107 குடும்பங்களின் காணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபை கையேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவர்களுக்கு பொல்வத்த காணியில் 10 பர்ச் வீதம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை நகர அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்டுள்ளது.
Post a Comment