Header Ads



"முஸ்லிம் அரசியல்வாதிகள் நன்கொடைகளுக்காக, சோரம் போகக்கூடாது என எச்சரிக்கை"

(அஸ்லம் எஸ்.மௌலானா)

அரசியலமைப்பு சீர்திருத்த விடயத்தில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த சக்திக்கும் விலை போய் விடாதவாறு அழுத்தங்களை பிரயோகிக்க சிவில் சமூகம் தயாராக வேண்டும் என ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளரும் கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவையின் முக்கியஸ்தருமான இசட்.ஏ.எச்.நதீர் மௌலவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவையின் மாதாந்த செயற்குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை சாய்ந்தமருது யுனைட்ஸ் லங்கா கல்வி நிறுவன மண்டபத்தில் பேரவையின் தலைவரும் தென்கிழக்குப் பலகலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் முன்னாள் பீடாதிபதியுமான கலாநிதி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் மௌலவி தலைமையில் நடைபெற்றது.

இதில் அரசியலமைப்பு சீர்திருத்த முன்னெடுப்பு தொடர்பில் ஆராயப்பட்டபோது உரையாற்றுகையிலேயே நதீர் மௌலவி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது;

"மைத்ரி- ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பை முற்றாக மாற்றியமைப்பதற்காக நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையாக பிரகடனம் செய்துள்ளது. ஆனால் இந்த அரசியலமைப்பு மாற்றத்தில் முஸ்லிம் சமூகத்தின் வகிபாகம் எவ்வாறு அமையப்போகிறது என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை!

இந்த அரசியலமைப்பு சீர்திருத்தத்தின்போது தேர்தல் முறை மாற்றத்தில் மட்டுமல்லாமல் மற்றும் சில முக்கிய விடயங்களிலும் முஸ்லிம் சமூகம் பாரிய ஆபத்துகளை எதிர்நோக்கியுள்ளது.

குறிப்பாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்படப் போவதாக சொல்லப்படுகிறது. எனினும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைதான் முஸ்லிம்களுக்கு சாதகமானது என்பதை கடந்த கால வரலாறு நிரூபிக்கின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப், இதனையே வலியுறுத்தியிருந்தார். ஜனாதிபதி முறைமையிலுள்ள கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, அந்த முறைமை நீடிக்கப்படுவதே முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வடக்கு- கிழக்கு இணைப்பு!

இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்தளவில் வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைத்து விட்டு அதற்குள் முஸ்லிம் அலகு ஒன்றைப் பெற்றுக் கொள்வது என்பது தவறான சிந்தனையாகும். தற்போது கிழக்கு மாகாணம் பிரிந்துள்ள நிலையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராகவும் ஆட்சியாளராகவும் இருக்கிறோம்.

இவ்வாறு இருக்கத்தக்கதாக அதனை வடக்குடன் இணைத்து, தாரை வார்த்து விட்டு முஸ்லிம் அலகு பற்றிப் பேசுவது ஆபத்தான தீர்வாகும். வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் தமிழ் தேசியம் உறுதியாக இருக்கின்றது. ஆனால் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மத்தியில் இது விடயத்தில் ஒருமித்த உறுதியான நிலைப்பாடு கிடையாது.

ஆகையினால்தான் இவற்றையெல்லாம் உள்ளடக்கி தயாரிக்கப்படப் போகின்ற புதிய அரசியலமைப்பில் முஸ்லிம்களின் உரிமைகளும் நலன்களும் எவ்வாறு உத்தரவாதப்படுத்தப்பட போகிறது என்பதில் பலத்த அச்சம் ஏற்படுகிறது. இது விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால தலைவிதியானது முழுக்க முழுக்க முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைகளிலேயே தங்கியிருக்கிறது.

18ஆவது திருத்த சட்டத்திற்கு துணை போன தலைமைகள்!

ஆனால் அரசியலமைப்பு தொடர்பில் பெருமாபாலான முஸ்லிம் எம்.பி.க்களிடம் போதிய தெளிவு இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் விலை போகக் கூடிய ஆபத்தும் காத்திருக்கிறது. 18ஆவது திருத்த சட்ட விடயத்தில் அவர்கள் செயற்பட்ட விதம் நமக்கு நல்ல வரலாற்றுப் படிப்பினையாகும். அன்று அதிகாரத்திற்கு அடிபணிந்து துணை போனார்கள். இப்போது நன்கொடைகளுக்கு சோரம் போகக் கூடிய வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

நாட்டுக்கும் சமூகத்திற்கும் கேடானது என்று அறிந்திருந்தும் கட்சியைக் காப்பாற்றுவதற்காக அந்த திருத்த சட்டத்தை ஆதரித்தோம் என்றும் தமது கட்சி எம்.பிக்களை பறிகொடுக்காமல் தம்முடன் வைத்துக் கொள்வதற்கும் அதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதை நாம் இந்த ஆபந்தான கட்டத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முஸ்லிம் எம்.பி.க்கள் சோரம் போகக் கூடியவர்கள்!

நாட்டையும் சமூகத்தையும் விட அவருக்கு அவரது கட்சிதான் முக்கியமாக தெரிந்திருக்கிறது. ஆகையினால் சமூகத்திற்கு எவ்வளவுதான் பாதிப்பு என்றாலும் கூட முஸ்லிம் தலைமைகள் எதற்கும் சோரம் போகக் கூடியவர்கள் என்பதால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லிம் சிவில் சமூகம் விழிப்படைந்து, அரசியல் தலைமைகளுக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக களத்தில் இறங்கத் தயாராக வேண்டிய அவசியம் எழுந்திருப்பதை உணர்கின்றோம்" என்று குறிப்பிட்டார்.

இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் முஹம்மத் ஆலிப், முன்னாள் விரிவுரையாளர் எம்.ஐ.எம்.சாதாத் ஆகியோர் அரசியல் சீர்திருத்தத்தில் மேற்கொள்ளப்படவுள்ள தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் விரிவுரை நிகழ்த்தினர்.

கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவையின் செயலாளர் எம்.எச்.எம்.நைரோஸ், இணைப்பாளர் அஷ்ஷெய்க் அஹமதுல் அன்சார் மௌலானா, ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் ஆகியோரும் உரையாற்றினர்.

No comments

Powered by Blogger.