"அவ்வாறான தகவல்கள்" ஜனாதிபதியினதும், எனதும் கௌரவத்தையும் பாதிப்பதாக அமையும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உத்தியோக பூர்வமாகவோ அல்லது உத்தியோகப்பூர்வமற்ற வகையிலோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சந்தித்திருக்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவின் புதல்வரும் அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவுக்கும் நாமல் ராஜபக்ஷவுக்கும் இரகசிய சந்திப்பு ஒன்று கடந்த வாரம் இடம் பெற்றுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
குறித்த செய்தியில், தனது குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு வகையான விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் ஐந்தாறு விசாரணைகளை எதிர்கொண்டுவிட்டதாகவும் நாமல் ரரஜபக்ஷ மைத்திரிக்கு கவலை தெரிவித்துள்ளார்.
இதேவேளை தம்முடன் இணைந்து செயற்படுமாறு இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாமலிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவமானது என்றும் சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் இதனை ஏற்பாடு செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான தகவல்கள் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் உத்தியோகமான முறையிலேயோ அல்லது உத்தியோகப்பற்றற்ற முறையிலேயோ எந்தவிதமான சந்திப்புக்களும் இடம்பெறவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபாலவை கூட்டு எதிரணியினர் சந்தித்திருந்தபோது நானும் அதில் பங்கேற்றிருந்தேன். அதுவே இறுதியாக ஜனாதிபதியை சந்தித்த சந்தர்ப்பமாகும். அதற்குப் பின்னர் அவ்வாறான எந்தவிதமான சந்திப்புக்களும் இடம்பெறவில்லை.
இச்சந்திப்பை அடிப்படையாகவைத்தே நான் ஜனாதிபதியைச் சந்தித்ததாக தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவ்வாறான தகவல்கள் ஜனாதிபதிக்கும், பாராளுமன்ற உறுப்பினரான எனது கௌரவத்தையும் பாதிப்பதாக அமைவதோடு மக்களையும் தவறாக வழிநடத்துகின்றது என்றார்.
Post a Comment