உயிரை துச்சமாக மதித்தவன் நான் - றிஷாத் பதியுதீன்
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
வவுனியா மாவட்ட சிங்கள கிராமங்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் இன்று சனிக்கிழமை (02) விஜயமொன்றை மேற்கொண்டு அந்த மக்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து கொண்டார்.
மருதம்மடுவ, உலுக்குளம், கெளேகத் சியம்பல ஆகிய கிராமங்களுக்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாத் பதியுதீன் அங்குள்ள மக்களுடன் உரையாடி அவர்களின் பிரச்சினைகள் தேவைகளை கேட்டறிந்தார். அத்துடன் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கூட்டங்களிலும் அவர் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்கள், கதிரைகள் உள்ளிட்ட அவசியப் பொருட்களை கையளித்தார்.
அமைச்சர் றிஷாத் பதியுதீன் அங்கு உரையாற்றுகையில்,
தேர்தல் காலங்களில் நான் உங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் எனது தேர்தல் வெற்றிக்காக இந்த பிரதேசத்திலுள்ள சிங்கள சகோதரர்கள் பெரிதும் உழைத்துள்ளனர். அதனை நான் நன்றியுணர்வுடன் நினைவு கூறுகிறேன். முப்பதாண்டு காலம் நடைபெற்ற யுத்தத்தினால் உங்கள் கிராமங்கள் மிகவும் பாதித்ததை நான் நன்கு அறிவேன். யுத்த காலத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உயிரையும் துச்சமென மதித்து உங்கள் கிராமங்களுக்கு வந்து முடிந்தளவு உதவிகளை செய்துள்ளேன். இஸ்லாமியனாக நான் உள்ளபோதும் தமிழ், சிங்களம் என்ற பேதமின்றியே அனைவருக்கும் பணிபுரிந்து வருகின்றேன். எனினும் என் வளர்ச்சியில் காழ்ப்புணர்வு கொண்டவர்கள் என்னை இனவாதியாக காட்ட முனைகின்றனர். இந்த பிரதேசத்திலுள்ள விகாரைகளுக்கு என்னைப்போல் அதிகமாக உதவியவர்கள் எவரும் இல்லையென நான் நினைக்கின்றேன். இங்கு வாழும் மக்களுக்கும் அவர்களின் மனச்சாட்சிக்கும் இது நன்கு தெரியும்.
தேர்தல் காலங்களில் பல்வேறு கட்சிகளில் நீங்கள் இருந்திருப்பீர்கள். பல வேட்பாளர்களுக்கு உதவியிருப்பீர்கள். அது உங்கள் ஜனநாயக உரிமை. வன்னி மாவட்டத்தை பொறுத்தவரை நான் உங்களின் மக்கள் பிரதிநிதி. அது மட்டுமன்றி வடமாகாணத்திலுள்ள ஒரேயொரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நான் மட்டுமே இருக்கின்றேன். இந்த நல்லாட்சியில் நாம் அனைவரும் இன,மத பேதங்களை மறந்து பயணிக்க வேண்டும். மக்களுக்கு பணிபுரிவதற்காகவே நாம் பாராளுமன்றம் செல்கின்றோம். சுகபோகங்களுக்காக நாம் பதவியை வகிக்க முடியாது. எனவே எதிர்வரும் காலங்களில் என்னுடன் இணைந்து பணியாற்றுங்கள் உங்களுக்கு என்றுமே நான் உதவக் காத்திருக்கின்றேன் என அமைச்சர் கூறினார். இந்தக்கூட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர் ஜயதிலக்கவும் உரையாற்றினார்.
குறிப்பாக கொட்டும் மழைக்கும் மத்தியில் நூற்றுக்கணக்கான மக்கள் அமைச்சரின் கூட்டங்களில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment