அதிரவைக்கும் கிட்னி மோசடி, வெளிவரும் திகிலூட்டும் உண்மைகள்..!
-TV-
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரவழைக்கப்படும் அப்பாவிகள் பலரின் சிறு நீரகங்களைப் பெற்று சட்ட விரோதமான முறையில் இலங்கையின் நான்கு தனியார் மருத்துவமனைகளில் 6 வைத்தியர்களினால் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விஷேட விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளது.
இந்தியாவின் அஹமதா பாத் பிராந்திய பொலிஸார் தமது விசாரணைகளில் வெளிப்படுத்திய தகவல்களுக்கு அமைவாக இந்திய பொலிஸாரிடமிருந்து பெற்றுக் கொண்ட அறிக்கையின்படி இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவித்தன.
இந்தியரான 35 வயதுடைய நபரே சிறு நீரக வழங்குநர்களையும் அதனைப் பெறுபவர்களையும் இலங்கைக்கு அனுப்புவதாகவும் அவர் இவ்வாறு 60 சிறு நீரக வழங்குநர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் சிறு நீரகங்களை வழங்கும் நபர் ஒருவருக்கு 5 இலட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரு சிறு நீரகம் இந்திய ரூபா பெறுமதியின் பிரகாரம் 30 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதகவும் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் இந் நாட்டில் உள்ளதாகக் கருதப்படும் இந்தச் சிறுநீரக மாபியாவின் பிரதான சந்தேக நபரான மருத்துவர் இந்திய பிரதிநிதிக்கு இந்திய பெறுமதியின் பிரகாரம் 445 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அஹமதாபாத் பிராந்திய பொலிஸார் செய்துள்ள விசாரணையின் அறிக்கையினை தற்போது ஆய்வு செய்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்ன மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் நகஹ முல்ல ஆகியோர் மேலதிக விசாரணைகள் தொடர்பில் விஷேட குழுவொன்றை நியமித்துள்ளதாக அறியமுடிகின்றது.
கொழும்பில் உள்ள பிரபலமான நான்கு தனியார் வைத்தியசாலைகள் ஊடாகவே இந்தச் சட்டவிரோத சிறுநீரக வர்த்தகம் இடம்பெற்று வந்துள்ளதுடன் அது தொடர்பில் ஆறு வைத்தியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 60 சட்ட விரோத சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைகள் இடம்பெற்றுள்ளாதாகக் கூறப்படும் நிலையில் இவை அனைத்தும் இந்தியர்களுக்கே செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த இந்தியர்கள் அனைவரும் அஹமதபாத் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மிக சூட்சுமமாக இடம்பெற்று வந்த இந்த சட்ட விரோத சிறுநீரக மாற்று சிகிச்சை வர்த்தகம் தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனமும் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் உள்ள அனைத்து தனியார் வைத்தியசாலைகளிலும் வெளி நாடவருக்கு சிறு நீரக மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ள உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment