Header Ads



சம்பந்தனிடமிருந்து மகிந்தவுக்கு, மீண்டும் பகிரங்க அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு  நான் ஒரு பகிரங்க அழைப்பை விடுக்கவிரும்புகின்றேன். புதிய அரசியலமைப்பை உருவாக்க  அவர்  ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு ஒத்துழைப்பது  இந்த நாட்டுக்கும், இலங்கை மக்களுக்கும் நீங்கள் ஆற்ற வேண்டிய கடமையென்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன் என்று எதிர்க்கட்சித்தலைவரும் த.தே.கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா. சம்பந்தன் தெரிவித்தார். 

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது இணைத்தலைவரான இரா.சம்பந்தன் தலைமையுரையாற்றும் போதே மேற்கண்டவாறு பகிரங்க அழைப்பொன்றை விடுத்தார்.

 மேற்படி கூட்டத்தில் சம்பந்தன் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் ஒரு கோரிக்கையை  முன்வைக்கின்றேன்.  இலங்கை பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும். சூபீட்சம் காணவேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களாக இருந்தால் இந்நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களுடன் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டியது அத்தியாவசியமான காரியமாகும்.

அக்கடமையை நிறைவேற்றுவதில் முன்னாள் ஜனாதிபதியாகிய உங்களுக்கும் ஒரு பொறுப்பிருக்கிறது. நீங்கள் பின்நிற்கக்கூடாது. முன்வந்து உங்கள் கடமையை செய்ய வேண்டுமென மிக அன்பாக நான் கேட்டுக் கொள்கிறேன்.

புதுப்பாதையை ஏற்படுத்தி நாடு புதிய பாதையில் செல்லக்கூடிய வகையில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்க நாம் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். அது எமது முதல் கடமையென்பதை இந்த இடத்தில் கூறுவது எனது கடமையென்று நான் கருதுகிறேன். இக்கருமத்தில் முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஒத்துழைக்க வேண்டுமென நான் மிகவும் அன்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.

1 comment:

Powered by Blogger.