Header Ads



ஹரீஸ் கலந்துகொள்ளாதது ஏன்..?

- எம். சஹாப்தீன் -

'கல்முனை மாநகரம்: உள்ளுராட்சியும் சிவில் நிர்வாகமும்' எனும் நூலினை கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் ஏ.எம்.பரக்கத்துள்ளாஹ் எழுதியுள்ளார். எழுத்துத்துறையில் ஆர்வமுள்ள இவரின் இந்நூல் கல்முனை மாநகர சபை பற்றி பல தகவல்களைக் கொண்டுள்ளது. தாம் முன்வைத்துள்ள தகவல்களுக்குரிய ஆதாரங்களையும் புத்தகத்தில் சேர்த்துள்ளார்.

கல்முனையில் தமிழர் தரப்பும், முஸ்லிம் தரப்பும் தமது அரசியல் இருப்புக்காக, போலிக் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டு தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்து வைப்பதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்நூல் எழுதப்பட்டுள்ளமை காலத்தின் தேவையாகும்.

இந்நூலை வாசிக்கும் போது, நூலின் ஆசிரியர் மிகுந்த சிரமங்களை எதிர் கொண்டுள்ளார் என்று புரிகின்றது. பிரித்தானியர் காலத்தில் கல்முனையின் சிவில் நிர்வாகம் எவ்வாறு செயற்பட்டதென்பதனையும், உண்மையான ஆதாரங்களின் அடிப்படையில் முன் வைத்துள்ளார்.

இந்நூல் ஆட்சிக் காலம், நிருவாகக் காலம், மாநகரினுள் காணப்படும் ஊர்கள் எனும் மூன்று தலைப்புக்களில் எழுதப்பட்டுள்ளன. மேற்படி தலைப்புக்களில் எழுதப்பட்டுள்ளவற்றுக்கு மேலாக, தேவையான இடத்தில் மிகவும் அரிய படங்களையும் காட்சிப்படுத்தியுள்ளார்.

மொத்தில் இந்நூல் சிறப்பாக உள்ளது. கல்முனை மாநகசபை குறித்து, முட்டி மோதிக் கொண்டிருக்கும் தரப்புக்கள் வாசிக்க வேண்டியதொன்றாகும்.

கல்முனைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்ய வேண்டியதொரு அரிய பணியை தனியே நின்று பரக்கத்துள்ளாஹ் செய்துள்ளார். அவரின் பணியை பாராட்டுகின்றேன். இந்நூலில் ஆங்காங்கே எழுத்துப் பிழைகள் உள்ளன. இதனை இரண்டாம் பதிப்பில் சரி செய்வார் என்று நம்புகின்றேன்.

மேற்படி நூலின் வெளியீடு கொழும்பில் கடந்த 20.12.2015 அன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில், முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு மு.காவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்து. ஆயினும் பலரை காண முடியவில்லை. அன்று நானும் அவ்வைபவத்தில் கலந்து கொண்டேன்.

குறிப்பாக கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரதி அமைச்சர் ஹரிஸும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. கூடவே பிரதி அமைச்சர் பைசால் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர் ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்தும் வருகை தரவில்லை. இவர்கள்  அனைவரும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 

ஆயினும், பரகத்துள்ளாஹ்வின் நூல் வெளியீடு நடைபெற்ற அன்றைய தினம், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஏற்பாடு செய்திருந்த வைபவம் ஒன்றில் மேற்படி மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

பரக்கத்துள்ளாஹ்வின் நூல் வெளியீட்டில் ஹரிஸ் கலந்து கொண்டிருக்க வேண்டும்.


No comments

Powered by Blogger.