கிழக்கு மாகாண கல்வியை முன்னேற்ற, விமலவீர திசாநாயக்க ஆர்வமாக செயற்பட்டார் - சுபைர்
-றியாஸ் ஆதம்-
கிழக்கு மாகாணத்தில் கல்வித்துறையை அபிவிருத்தி செய்வதற்கு சகலரும் கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.
இவ்வருடத்திற்கான கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வு (26) நேற்று தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்ற போது கிழக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி திருகொணமலை மாவட்டத்தின் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் வெற்றிடங்கள் தொடர்பாக தனிநபர் பிரேரணையை முன்வைத்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த யுத்த காலத்தின் போது தமது பொருளாதார, சொத்துக்களை இழந்த கிழக்கு மாகாண மக்கள் தற்போது கல்வியின் முன்னேற்றத்தால் இழக்கப்பட்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்புகின்ற நிலைமைகளை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக கிழக்கு மாகாணம் கல்வித் தரத்தில் மிகவும் பின்னடைந்து மாகாண தரப்படுத்தலில் இறுதியான இடத்தினையே வகித்துவந்தது. ஆனால் முதலாவது மாகாண சபை அமையப்பட்ட போது முன்னால் கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க கிழக்கு மாகாணத்தின் கல்வியை முன்னேற்றுகின்ற பணிகளில் ஆர்வமாக செயற்பட்டார். குறிப்பாக யுத்தத்தினால் மூடப்பட்ட பாடசாலைகளை மீளவும் திறக்கப்பட்டது, பின்தங்கிய பாடசாலைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டது. அதனால் இம்மாகணத்தினுடைய கல்வித்துறை கட்டியெழுப்பப்பட்டது.
அதேபோன்றுதான் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூவின மக்களினதும் கல்வித் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு அமைச்சர் ஆரியவதி கலப்பதி சமர்ப்பித்திருக்கின்ற பிரேரணையை நான் ஆதரிக்கின்றேன். விசேடமாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் 2011, 2012, 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தேசிய ரீதியாக சாதனை படைத்து எமது மாகாணத்திற்கும் பெருமை சேர்த்ததினை நாம் மறந்துவிட முடியாது. இதேபோன்றுதான் இம்மாகாணத்திலுள்ள ஏனைய வலயங்களும் கல்வித்துறையில் சாதனைகளை நிலைநாட்ட வேண்டும்.
குறிப்பாக எமது மாகாணத்தினுடைய ஆசிரியர் வெற்றிடம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் தேசிய கல்வி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். எமது மாகாணத்தினுடைய ஆசிரியர் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக வெளிமாகாண ஆசிரியர்களைக் கிழக்கு மாகாணத்தில் நியமித்து நாம் எதிர்பார்க்கின்றதனைப் போல் கூடுதலான பலன்களை அடையமுடியாது. எனவே கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment