Header Ads



புதிய அரசாங்கம் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலில் இருந்து, படிப்படியாக விலகி வருகிறது - கீர்த்தி

கடந்த வருடம் ஜனவரி 8 ஆம் திகதி பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலில் இருந்து படிப்படியாக விலகி வருவதாக இலங்கை மனித உரிமை கேந்திரத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் இன்று (20) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் தனது நிகழ்ச்சி நிரலில் இருந்து படிப்படியாக விலகி வரும் நிலைமையானது, முன்னிலை சோசலிசக் கட்சியினரின் அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம் தெளிவாகியுள்ளது.

நாட்டில் இல்லாமல் போயிருந்த ஜனநாயகத்தை மீண்டும் ஸ்தாபிப்பதற்காகவே கடந்த வருடம் ஜனவரி 8 ஆம் திகதி மக்கள் புதிய அரசாங்கத்திற்கு வாக்களித்தனர்.

பரந்த அரசியல் சுதந்திரத்தை வெற்றிகொள்வதற்காக அப்போது அடக்குமுறையாக செயற்பட்டு வந்த அரசாங்கத்தை மக்கள் தோற்கடித்தனர்.

அந்த நேரத்தில் தம்முடன் அமர்ந்திருக்கும் தரப்பினருக்கு மாத்திரம் அரசியல் சுதந்திரம் வழங்கப்படும் என எவரும் கூறவில்லை. அத்துடன் குமார் குணரட்னத்தை தவிர ஏனைய அனைவருக்கும் அரசியல் சுதந்திரம் வழங்கப்படும் என்பது கோஷமாகவும் இருக்கவில்லை.

குமார் குணரட்னம் சம்பந்தப்பட்ட பிரச்சினை நீதிமன்றத்தின் பிரச்சினையோ, சட்டப் பிரச்சினையோ அல்ல. அது அரசியல் பிரச்சினை.

இந்தப் பிரச்சினையை தீர்த்து வைப்பதை ஜனாதிபதியும் பிரதமரும் வேண்டுமென்றே புறந்தள்ளி வருகின்றனர்.

தற்போதைய அரசாங்கம் மக்களின் எதிர்ப்பை அடக்குவது சம்பந்தமாக கோத்தபாய ராஜபக்சவிடம் டியூசன் கற்று நடவடிக்கை எடுத்து வருவதை காணமுடிகிறது எனவும் கீர்த்தி தென்னகோன் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.